மரணித்த ஒரு முஸ்லிமின் உடலை எந்நிலையிலும் தகனம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை.
ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர், அந்த உடலை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடாத்தி, கௌரவமான முறையில் முஸ்லிம்களது மையவாடியில் அடக்கம் செய்வது முஸ்லிம்களின் மீது பர்ழு கிபாயாவாகும். மேற்குறித்த கிரியைகளில் ஏதேனும் ஒன்று மார்க்கம் அனுமதித்த காரணம் இன்றி நிறைவேற்றப்படாவிட்டால், மார்க்க கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற காரணத்தினால் அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
அதனடிப்படையில், மரணித்தவரின் உடலை கட்டாயமாக அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயமானதொன்றாக, நபி சல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் தொடக்கம் இன்று வரை, நான்கு மத்ஹப்களின் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவராலும் ஏகோபித்த இஸ்லாமிய தீர்ப்பாகக் கருதப்படுகின்றது. கடலில் பிரயாணம் செய்யும் ஒருவர் மரணிப்பாராயின் அவரது உடலைக் கூட நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான நிலம் ஒன்றை அடைவது சாத்தியமற்ற நிலையில், குறித்த உடலை பாரம் ஒன்றை கட்டி கடலுக்குள் இறக்கி விட வேண்டும். இந்த விதிவிலக்கை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் உபயோகப்படுத்த முடியாது.