மின்சார அதிர்ச்சி மூலம் கோழியை மயக்கிய பின் அறுப்பது கூடுமா

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கோழியை அறுப்பதற்கு முன்னர் அதனை மயக்கும் நோக்கத்தில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் போது அது இறந்து விடுமானால் அல்லது அது இறந்ததற்குரிய அறிகுறிகள் ஏதும் தென்படுமானால் அதன் மாமிசத்தை உண்பது ஹலாலாக மாட்டாது. இந்நிலையில் அதன் உணவுக் குழாய் சுவாசக் குழாய் மற்றும் கழுத்தில் உள்ள இரு பெரும் நாளங்கள் என்பவற்றைத் துண்டித்தாலும் அதை உண்பதற்கு அனுமதி கிடையாது.

அதே நேரம் மின்சார அதிர்ச்சியின் மூலம் மயக்கமுற்ற கோழி அறுக்கப்படாது விடப்பட்டால் மீண்டும் சற்று நேரத்தில் சுய உணர்வுக்கு வருவது உறுதியாக இருந்தால் அந்தக் கோழியை மயக்கமுற்ற நிலையில் அறுக்க முடியும்.

 இருப்பினும் இம்முறையில் அறுக்;கப்படும்பொழுது கோழி மின்சார அதிர்ச்சியின் வேதனையை உணராத அளவு மின் அழுத்தத்தின் அளவைக் குறைத்தல் அவசியமாகும்.

பொதுவாக,  மிருகங்கள் மற்றும் பறவைகளை இயல்பான முறையில் அறுப்பதே மிகவும் ஏற்றமானதாகும். மேலும், அறுக்கப்படும் பிராணிகள் துன்புறுத்தப்படுவது கூடாது என்பது கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு