தலாக் சொல்லப்பட்ட  மனைவியிடம் வளரும் எனது பிள்ளையைப் பார்ப்பதற்கு எனக்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பொதுவாகக் குழந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதும் பராமரிப்பதும் தாய், தந்தை இருவரினதும் கடமையாகும். அவ்விருவரும் விவாகரத்து மூலம்; பிரிந்துவிட்டால் குழந்தையின் தாயே பராமரிப்புக்குத் தகுதியானவளாவாள்.

இதற்கான காரணம், குழந்தைப் பராமரிப்புக்கு ஆண்களைவிட பெண்களே தகுதியானவர்கள் என்பதாகும். ஏனெனில், அவர்கள் மிகவும் இரக்க சுபாவமுடையவர்கள், பராமரிக்கத் தெரிந்தவர்கள், பொறுமையுள்ளவர்கள், மேலும் அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள்.  இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறித்த குழந்தையைப் பராமரிப்பதற்கு தாயே (மறுமணம் செய்யாத பட்சத்தில்) தகுதியானவள் என்று கூறினார்கள்.
 
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்வந்து கூறினாள்: அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச்செல்ல நாடுகிறான் என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத் : 2276)

அவ்;வாறு, தாய் மறுமணம் செய்தல், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பராமரிக்கத் தகுதியான பண்புகள் இல்லாமல் இருக்கும் நிலைமைகளில், தாயின் தாய் அல்லது அவளின் தாய் (பாட்டி) போன்றவர்கள் பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.  

அவர்கள் இல்லாதவிடத்து, குழந்தையின் தகப்பன் தகுதியானவராகிவிடுவார். அவரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் தாய் அல்லது அவளது தாய் (பாட்டி) பராமரிப்புக்குத் தகுதியானவராவார்கள்.
 
என்றாலும், குழந்தை தனது காரியங்களைச் சுயமாகச் செய்ய, கருமங்களை பிரித்தறிய முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தையின் விருப்பத்திற்கேற்ப தந்தையையோ தாயையோ தெரிவுசெய்யும் உரிமை அக்குழந்தைக்கு உண்டு. இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து யா ரஸுலல்லாஹ்! எனது தாயும் தந்தையும உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், எனது கணவன் எனது பிள்ளையை என்னிடம் இருந்து எடுத்துச் செல்வதற்கு நாடுகிறார். அப்பிள்ளை எனக்கு அபூ இனபா எனும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் தருகின்றான் என்று கூறினார். அதே நேரத்தில் அவளது கணவனும் அங்கு சமுகமளித்து என்னுடைய பிள்ளையை எடுப்பதற்கு யாரால் முடியும் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பிள்ளையைப் பார்த்து 'சிறுவனே இதோ உனது தாயும் தந்தையும் இருக்கிறார்கள். உனக்கு யார் விருப்பமோ அவரது கையைப் பிடித்துக்கொள்' என்று கூறினார்கள். அதற்கு அப்பிள்ளை தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சென்றது. (நூல் : அபூ தாவூத் : 2277)

மேலும், ஒரு ஆண் பிள்ளை தனது தாயைத் தெரிவு செய்யும் போது, இரவு நேரத்தில் அவரிடமே இருப்பார்;. ஒழுக்கம், கல்வி, தொழில் விடயங்களில் வழிகாட்டலைப் பெறுவதற்குத் தனது தந்தையுடன் பகல் நேரத்தில் இருப்பார்.
அப்பிள்ளை பெற்றோர் இருவருடனும் இருப்பதாகக் கூறினால், சீட்டுக் குலுக்கல் மூலம் ஒருவர் பொறுப்பேற்பார். யாரையும் தேர்ந்தெடுக்காத சந்தர்ப்பத்தில் பராமரிப்பதற்குத் தாயே தகுதியாகுவாள்.  
 
அப்பிள்ளை பெற்றோரில் யாரைத் தெரிவுசெய்கின்றதோ, அவர் மற்றவருக்குப் பிள்ளையைப் பார்ப்பதற்கு அனுமதியளிப்பது அவசியமாகும். அவ்வாறு பார்ப்பதற்கு அனுமதியளிக்காமல் இருப்பது உறவைப்பிரிப்பதாகும்.  

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'தாயையும் குழந்தையையும் யார் பிரிப்பாரோ அல்லாஹு தஆலா மறுமையில் அவரை அவரது விருப்பத்துக்குரியவர்களை விட்டும் பிரித்துவிடுவான்' (சுனன் அல்-திர்மிதி)  என்றும், இன்னுமொரு ஹதீஸில், 'தகப்னையும் அவனது பிள்ளையையும் பிரிப்பவரை அல்லாஹ் சபிக்கின்;றான்' (நூல்: சுனன் இப்னி மாஜஹ்)  என்றும் கூறியுள்ளார்கள்.

மேலும், ஒரு பெண் பிள்ளை தந்தையைத் தெரிவு செய்யும் போது அதன்; பாதுகாப்பைக் கருதி அப்பிள்ளையை வெளியில் அனுப்பாமல், தாயே அப்பிள்ளையைச் சந்திக்கச் செல்வது மிகவும் ஏற்றமானதாகும்.

பெற்றோரில் ஒருவர் மற்றவருக்குப் பிள்ளையைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குதல் வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அனுமதி வழங்குவது கட்டாயம் என்றும், வீடு சமீபமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்குவது அவசியம் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.  இச்சந்திப்பை இருதரப்பும் பேசி பொருத்தமான ஓர் இடத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும், கணவன் மனைவி விவாரத்து மூலம் பிரியும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மேற்குறித்த சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி இன்னும் விரிவாகவும், துள்ளியமாகவும் இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் உடைய  'மின்ஹாஜுல் தாலிபீன் மற்றும் அதனுடை விரிவுரை நூற்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உங்களது மகனுக்குப் பிறந்த குழந்தை அவருடைய தாயிடத்தில்; இருப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்நிலையில், மேற்குறிப்பிட்ட அடிப்படைகளின் பிரகாரம், இரு தரப்பும் குறிப்பிட்ட சில நாட்களைச் சுமுகமாகத் தீர்மானித்து பிள்ளையைப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொள்வது பொருத்தமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்     

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு