உடலுறவு கொண்டு குளித்து சுத்தமானதன் பின் இந்திரியம் அல்லது அது போன்ற ஒன்று வெளியானால் மீண்டும் குளிப்பது சம்பந்தமாக

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


குளிப்புக் கடமையாகும் காரணங்களில், ஆணுறுப்பின் முற்பகுதி பெண்ணுறுப்பில் நுழைதல், மற்றும் ஆண் அல்லது பெண்ணுக்கு இந்திரியம் வெளியாகுதல் ஆகியவையும் உள்ளடங்கும்.
மேலும், ஆண் அல்லது பெண் இந்திரியம் வெளியானதற்காக, குளித்து சுத்தமானதன் பின் மீண்டும் இந்திரியம் வெளியானால், குளிப்பது அவசியம் எனும் விடயத்தில், மார்க்க அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.


இந்திரியம் வெளியான ஓர் ஆண் அல்லது பெண் தூங்கி எழுந்து அல்லது சிறுநீர் கழித்து குளித்ததன் பின்னர் மீண்டும் இந்திரியம் வெளியானால் அதற்காக இரண்டாவது தடவையும் குளிப்பது அவசியமில்லையென்றும், அவ்வாறு தூங்காமல் அல்லது சிறு நீர் கழிக்காமல் முதலாவது தடவை குளித்ததன் பின் மீண்டும் இந்திரியம் வெளியாகி இருந்தால் இரண்டாவது தடவையும் குளிப்பது கட்டாயமாகும் என்றும் இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் உள்ளிட்ட சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.


என்றாலும், ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களும் இன்னும் சில அறிஞர்களும், ஆணுக்கு இந்திரியம் வெளியாகிக் குளித்ததன் பின் மீண்டும் வெளியானால் குளிப்பது கட்டாயம் என்றும், பெண் விடயத்தில் பின்வரும் விளக்கத்தையும் குறிப்பிடுகின்றனர்.


உடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும்.
 
ஏனெனில், மனைவி உடலுறவில் தனது ஆசையைப் பூர்த்தியாக்கிக் கொண்டவளாக இருப்பதால், கணவனின் இந்திரியத்துடன் அவளது இந்திரியமும் கலந்தே வெளியாகும்.   என்றாலும், ஒரு பெண், தூக்கம் அல்லது மயக்கம் போன்ற, உடலுறவை உணராத நிலையில் உறவு கொள்ளப்பட்டால், உடலுறவு கொண்டதற்காகக் குளிப்பது கட்டாயமாகும். அவ்வாறு குளித்ததன் பின், மீண்டும் பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால், அது அவளது இந்திரியமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், குளிப்பது கட்டாயமில்லை.


அதே நேரம் பெண்ணுறுப்பிலிருந்து வெளிப்பட்டது இந்திரியமா அல்லது மதி, வதி போன்ற வேறு ஏதேனுமா என தெரியாவிட்டால், அதை இந்திரியமாகக் கருதிக் குளிக்கவும் முடியும். அல்லது அதை, மதி, வதியெனக் கருதி, சுத்தம் செய்துவிட்டு, வுழூ செய்து கொள்ளவும் முடியும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு