இம்மடல் தங்கள் கரம் சேருகையில் தாங்கள் பரிபூரண சுகம் பெற்றிருக்க வல்ல றஹ்மான் துணை செய்வானாக.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார சமூக விடயங்களில் தாங்களும் தங்களின் கண்ணியம் மிக்க உலமாக்கள் சபையும் கொண்டுள்ள வகிபங்கும் கரிசனையும் மிக மகத்தானதாகும்.

இம்மடலூடாக நான் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விழையும் விடயமாவது என்னை தலைவராகக் கொண்ட சபையொன்றானது எமது பிரதேசத்தில் பெற்றோர் வக்ப் நிதியம் எனும் பெயரில் ஒரு நிதிசார்ந்த நிறுவனத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பிள்ளைகள் தமது பெற்றோருக்காகச் செய்கின்ற தான தர்மங்கள் ஷரீஅத்தின் பார்வையில் ஆகும் என்றிருப்பதால் அதனையே பிரதான வளமாகக் கொண்டு இந்நிறுவனம் செயற்படும். அதாவது பிள்ளைகள் தமது உயிரோடு இருக்கின்ற மற்றும் மரணித்த பெற்றோர்களுக்காக தம்மாலான இயன்ற அளவு நன்கொடையினை (பணத்தினை) இந்நிறுவனத்திற்கு வழங்குவர். இவ்வாறு பெறப்படுகின்ற நிதியினைக் கொண்டு அசையாச் சொத்துக்கள் வாங்கி அவை பெற்றோர் பெயரால் நிதியத்தின் மூலம் வக்ப் செய்யப்படும்.

இவ்வக்ப் சொத்தினால் பெறப்படுகின்ற வருமானம் (உதாரணமாக வாடகைக்கு விடல்) இறைபாதையில் செலவு செய்யப்படும். மேலும் இவ்வருமானத்தில் ஒருசிறு பகுதி நிதியத்தின் நிர்வாகச் செலவுக்காகவும் பயன்படுத்தப்படும். இச்செயற்பாடு நிறுவனம் இயங்கும் காலம் வரைக்கும் தொடர்ச்சியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் இதுவே இந்நிறுவனத்தின் ஒழுங்கும் நோக்கமுமாகும்.

கண்ணியமிக்கவரே! நான் மேலே விபரித்த நிறுவன முறைச் செயற்பாடு ஷரீஅத்தின் படி ஏற்புடையதாக அமையுமா? இதனை நாம் சமூகத்தில் அறிமுகம் செய்து நடவடிக்கையைத் 

தொடரலாமா? அல்லது இதில் நாம் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமா? இவ்வாறான சந்தேகங்கள் எமது நிறுவனத்திற்கு உள்ளன.

கண்ணியமிக்க உலமாக்களே! இது ஒரு சமூகம் சார்ந்த விடயமாக இருப்பதால் இது விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்தி எமது ஐயப்பாட்டினை தெளிவுபடுத்த உதவுமாறு நன்றியுடன் வேண்டிக்கொள்கின்றேன். வல்ல றஹ்மான் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

'வக்ப்' என்பது நிலைத்திருந்து நன்மை கிடைக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். தனக்கு அல்லது இன்னும் ஒருவருக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஏதாவது ஒரு பொருளை அல்லாஹ்வுக்காக வக்ப் செய்ய முடியும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சஹாபாக்களை வக்ப் செய்யும் படி ஆர்வமூட்டியுள்ளார்கள். 

இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அவ்விடயமாக ஆலோசனை பெறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்றார்கள்.

'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள், 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள்.

அவ்வாறே உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது அன்பளிப்பாக வழங்கக் கூடாது வாரிசுச் சொத்தாகவும் பிரிக்கப்படக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அதன் வருமானத் தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், ஆடம்பரமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.) ஆதாரம் : சஹீஹுல் புகாரி – 2737

அவ்வாறே, வசதியுள்ள சஹாபாக்கள் அனைவரும் வக்ப் செய்து வந்துள்ளார்கள் என்று ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளதாக இமாம் இப்னு குதாமா றஹிமஹுல்லாஹ் தமது 'அல்-முக்னி' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஒருவர் தனியாக வக்ப் செய்ய முடியும்; என்பது போன்று, பல நபர்கள் இணைந்து கூட்டாகவும் வக்ப் செய்ய முடியும். வக்ப் செய்யும் பொழுது, வக்ப் சொத்தை யார் பராமரிக்க வேண்டும், அதன் வருமானத்தை எந்த முறையில் செலவழிக்க வேண்டும் என்பன போன்ற, நிபந்தனைகளையிட்டு வக்ப் செய்ய வேண்டும்.

அவ்வாறு வக்ப் செய்யப்பட்டுவிட்டால், கியாம நாள் வரை அது அல்லாஹ்வுக்குரிய சொத்தாகவே கருதப்படும்.  அதை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதும் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

வக்ப் செய்பவர்கள் குறிப்பிடும் சகல நிபந்தனைகளையும், குர்ஆன் ஹதீஸ்களின் வார்த்தைகளை மாற்ற முடியாதது போன்று, எவ்வித மாற்றமும் இன்றிப் பின்பற்ற வேண்டும் என்ற பொதுவான ஒரு விதி வக்பு சட்டங்கள் விடயத்தில் உள்ளது.

நீங்கள் உங்கள் கடிதத்தில், வக்ப் செய்வதற்கு விருப்பம் உள்ளவர்களது பணங்களை ஒன்று சேர்த்து, வக்பு நிதியம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சொத்துக்களை வாங்கி அல்லது கட்டிடங்களை நிறுவி வக்ப், செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா என்று கேட்டுள்ளீர்கள்.

இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. என்றாலும், குறிப்பிட்ட நிதியத்தின் மூலம் எப்பொருளை வாங்கப் போகின்றீர்கள் அல்லது தாபிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்யப்போகின்றீர்கள்;, அதை யார் மூலம் நிர்வகிக்கப்போகின்றீர்கள், அவர்கள் மரணித்ததன் பின் அதை நிர்வகிப்பவர்கள் யார் என்பனவற்றையும், நிதியத்துக்கு பணம் அல்லது பொருள் வழங்குபவர்களிடம் தெளிவாகக் கூறி அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

இது ஒரு பொறுப்பு வாய்ந்த அமானிதம் என்பதால், இவ்வமானிதத்தை முறையாகப் பாதுகாத்து அதன் நிபந்தனைகளைப் பேணி கருமம் ஆற்றுவதற்கு உங்களுக்குப் போதிய தகைமை இருந்தால் தான் இத்திட்டத்தைச் செய்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.

மேலும், வக்ப் சொத்துக்களைப் பராமரிக்கும் பணிகளுக்காக அச்சொத்துக்களின் வருமானங்களிலிருந்து ஆடம்பரமின்றியும் வீண்விரயமின்றியும் நியாயமான முறையில் செலவு செய்துகொள்ள முடியும்.

அத்துடன், வக்ப் சொத்துக்களை வக்ப் சபையில் பதிந்துகொள்வதும், எதிர்காலத்தில் வக்ப் சொத்துக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.