உழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை ஸதக்கா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் உழ்ஹிய்யாப் பிராணியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'அன்ஆம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். (சூரத்துல் ஹஜ் : 27,28)  'அன்ஆம்' என்பதன் கருத்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே குறிக்கும் என்று அறபு மொழி வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.

மேலும், உழ்ஹிய்யா ஏனைய சதகாக்களைப் போன்று ஒரு பிரத்தியேக அமலாகும். அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், இவ்வமலைப் பற்றி பல இடங்களில் கூறியுள்ளான்.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (الكوثر : 2)

'உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.'

மேலும், இன்னுமொரு வசனத்தில் :

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ  (الأنعام : 162)

நீர் கூறும்: 'நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.'

இவ்விரு வசனங்களிலும் குர்பான் கொடுப்பது, பணத்தை ஸதக்கா கொடுப்பதைப் போன்ற ஒரு தனியான அமலாகும் என்பது தெரியவருகிறது. அது தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டதிலிருந்து அதன் முக்கியத்துவம் இன்னும் தெளிவாகின்றது.

பொதுவாக சதகா செய்வது பற்றி ஆர்வமூட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிரத்தியேகமாக குர்பானியும் கொடுத்துள்ளார்கள். மேலும், 'ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினத்தில் நிறைவேற்றும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குர்பான் கொடுப்பதாகும்'  என்றும் கூறியுள்ளார்கள்.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றியுள்ள பல சட்டங்களையும், உழ்ஹிய்யாப் பிராணிகளின் வயது, எப்பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது கூடாது போன்ற பல விடயங்களையும் மிக விரிவாகக் கூறியுள்ளார்கள். அவர்கள் உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா செய்யலாம் என்று எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அவர்களைப் பின்பற்றிய சஹாபாக்களும் இவ்வாறே செய்து வந்துள்ளார்கள்.

உழ்ஹிய்யாவின் பெறுமானத்தை ஸதக்காவாக கொடுக்க முடியும் என்று இப்னு அப்பாஸ் மற்றும் பிலால் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைத் தொட்டும் சில அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு அறிவிப்பில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், தனது அடிமையிடம் இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து இதற்கு இறைச்சி வாங்கி உங்களை சந்திப்பவரிடம் 'இது இப்னு அப்பாஸ் அவர்களின் உழ்ஹிய்யா என்று கூறி கொடு' என்று கூறி அனுப்பினார்கள்; என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்கூற்றின் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலவீனமானதாகும். இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபுல் மஃஷர் அல் மதனீ என்பவர் மிகவும் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு இது உறுதியான கூற்று என்று எடுத்துக் கொண்டாலும், 'உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாயம் என்ற கருத்;து அக்காலத்தில் சிலரிடம் இருந்துள்ளதால் இதை மறுக்கும் முகமாகவே மேற்கூறிய கருத்தை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் என்று இமாம்; ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.   அதாவது நான் உழ்ஹிய்யாக் கொடுக்கவில்லை. ஏனெனில் அது கடமையான ஒரு விடயமல்ல. இரண்டு திர்ஹம்கள் மட்டுமே ஸதகாவாகக் கொடுத்தேன் என்பதே இவர்களது கூற்றின் விளக்கமாகும். 

இன்னும் சிலர் இதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றனர்;:

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிராணியை குர்பான் கொடுக்கும் வழக்கம் இருந்தது. உழ்ஹிய்யாவுடைய தினமன்று அவர்களிடம் இரண்டு திர்ஹம்களைத் தவிர உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வேறு எந்த ஒன்றும் இருக்கவில்;லை. அந்த இரண்டு திர்ஹம்களையும் ஸதகாவாகக் கொடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

மேலும், பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஒரு கோழியையேனும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தாலும் நான் பொறுட்படுத்த மாட்டேன். உழ்ஹிய்யாவுடைய பெறுமதியை ஒரு ஏழைக்குக் கொடுப்பது உழ்ஹிய்யாக் கொடுப்பதை விட சிறந்ததாகும்.' எனக் கூறினார்கள் என்ற விடயமும் சில அறிவிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே சம்பவம் இன்னுமொறு அறிவிப்பில், இதை பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்களா அல்லது ஸுவைத் பின் கغபலா என்பவர் கூறினாரா என்ற சந்தேகத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ மற்றும் கியாஸ் என்பவையாகும். 'சஹாபாக்களின் சொல் அல்லது செயல்' அடிப்படை மூலாதாரமாகக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சில அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ மற்றும் கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படை விதியாகும்.

ஹனபி,  ஷாபிஈ  மற்றும் ஹன்பலி  ஆகிய மத்ஹப்களின் அறிஞர்களும் உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா செய்தால் உழ்ஹிய்யாவின் நன்மை கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதுவே மாலிக்கி மத்ஹபில்  அங்கீகரிக்கப்பட்ட கருத்துமாகும்.

இவ்வடிப்படையில், ஆடு, மாடு, ஒட்டகத்தையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தல் வேண்டும். அதுவல்லாமல் உழ்ஹிய்யாப் பிராணியின் பெறுமதிக்குரிய பணத்தை ஸதகாச் செய்வதன் மூலம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது.

உழ்ஹிய்யா கொடுக்க விரும்புவோர் தாம் வாழும் பிரதேசங்களில் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாத நிலை இருக்குமென்றால், உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு முடியுமான பிரதேசங்களை இனங்கண்டு அங்கு உழ்ஹிய்யாவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.