குல்உ என்றால் என்ன? குல்உவுடைய சந்தர்ப்பத்தில் கணவன் கொடுத்த மஹரின் சட்டம் என்ன? அந்த பெண்ணுடைய இந்தாவின் சட்டம் என்ன, போன்றவற்றுக்கான முழுத் தெளிவையும் குர்ஆன், ஹன்னா அடிப்படையிலும் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் முழுத் தெளிவையும் எனக்கு எழுத்து மூலம் பத்வாவாக அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன். 

பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

“குல்உ” என்பது மனைவி கணவனுடன் வாழ விரும்பாத பட்சத்தில், இருவரும் இணங்கும் தொகையை, மனைவி கணவருக்குக் கொடுத்து தலாக் அல்லது “குல்உ” வுடைய வார்த்தையின் மூலம் விவாகரத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.

மனைவி கொடுக்கும் தொகையானது கணவன் கொடுத்த மஹ்ராகவோ அல்லது வேறு ஏதாவது சொத்தாகவோ இருக்கலாம். அத்தொகை மஹ்ர் தொகையை விட கூடியதாகவோ அல்லது குறைந்ததாகவோ இருக்கலாம்.

  ( وهو ) في الشرع ( فرقة ) بين الزوجين ( بعوض ) مقصود راجع لجهة الزوج ( بلفظ طلاق أو خلع ) كقوله طلقتك أو خالعتك على كذا فتقبل (كتاب الخلع – مغني المحتاج )

குல்உ பற்றி அல் குர்ஆன் மற்றும் ஹதீஸில் பின்வருமாறு வந்துள்ளன.

{فَإِنْ خِفْتُمْ أَلاَّ يُقِيمَا حُدُودَ اللهِ فَلاَ جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ} البقرة: 229}

“அல்லாஹ்வின் கட்டளைகளை அவர்களால் (கணவன், மனைவி இருவரும்) நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்துப் பிரிந்து விடுவதில் குற்றமில்லை.

இப்னு அப்பாஸ்  றழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள். 

ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களின் துணைவியார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “சரி! அவர் மஹ்ராகக் கொடுத்த தோட்டத்தை அவரிடமே திருப்பித் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் “ஆம்” என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து தலாக் கூறிப் பிரிந்துவிட்டார்.

عن ابن عباس رضي الله عنهما: أن امرأة ثابت بن قس أتت النبي - صلى الله عليه وسلم - فقالت: يا رسول الله، ثابت بن قيس، ما أعتب عليه في خلق ولا دين، ولكني أكره الكفر في الإسلام، فقال النبي - صلى الله عليه وسلم -: " أتردّين عليه حديقته " قالت: نعم. فقال رسول الله - صلى الله عليه وسلم: اقبل الحديقة، وطلِّقها تطليقة. (رواه البخاري - بَابُ الخُلْعِ وَكَيْفَ الطَّلاَقُ فِيهِ)

குல்உ முறையில் பிரிவதை மார்க்க அறிஞர்களில் சிலர் பஸ்கு என்றும் இன்னும் சிலர் தலாக் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் குல்உ முறையில் பிரிவதும் தலாக் ஆகவே கணிக்கப்பட்டு, தலாக் உடைய அனைத்து சட்டங்களும் குல்உவிலும் கவனிக்கப்படும். அவ்வடிப்படையில் ஒருவர் ஒரு குல்உ, செய்து விட்டால் அது ஒரு தலாக்காகவும், இரண்டு குல்உ நடைபெற்று விட்டால் இரண்டு தலாக்குகளாகக் கணக்கெடுக்கப்படும்.

மேலும், குல்உவுடைய இத்தாவும், தலாக்குடைய இத்தாவைப் போன்றே மூன்று சுத்தங்கள் பூர்த்தியாகுவதாகும். என்றாலும், குல்உ மூலம் பிரிந்த கணவன் மீண்டும் அப்பெண்ணுடன் குடும்ப வாழ்க்கை நடாத்த விரும்பினால் இத்தாவுடைய காலத்திலோ அல்லது இத்தாவுடைய காலத்தின் பின்னரோ வலீ, சாட்சி, மஹர் மூலம் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், மூன்று குல்உ நிகழ்ந்துவிட்டால் அல்லது குல்உவுக்கு முன் இரண்டு தலாக்குகள் நிகழ்ந்திருந்தால், அது முத்தலாக் ஆகக் கணிக்கப்படும். முத்தலாக் சொல்லப்பட்ட பெண் அதே கணவருடன் மீண்டும் வாழ முடியாது. அவ்வாறு  மீண்டும் அவருடன் வாழ விரும்பினால் அப்பெண், இன்னுமொருவரைத் திருமணம் செய்து தாம்பத்திய உறவு நடந்ததன் பின் விவாகரத்துப் பெற்று இத்தாவுடைய காலமும் முடிவுற்றதன் பின்னர் அவரை மீண்டும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம்.

மேலும், குல்உ செய்த கணவன் அல்லாத வேறு ஒருவரை அவள் திருமணம் செய்ய விரும்பினால், இத்தா முடிந்ததன் பின்னரே திருமணம் செய்து கௌளல் வேண்டும்.

மேலும், மஹ்ரைப் பொறுத்தவரையில், உடலுறவு நடைபெற்றதன் பின் குல்உ நிகழ்ந்திருந்தால் நிர்ணயிக்கப்பட்ட முழு மஹ்ரும் மனைவிக்குச் சொந்தமாகிவிடும்.  உடலுறவு கொள்வதற்கு முன்னர் குல்உ நிகழ்ந்திருந்தால் நிர்ணயிக்கப்பட்ட மஹ்ரில் அரைவாசி மனைவிக்குக் கொடுப்பது கடமையாகும். 

 وَإِنْ أَرَدْتُمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا * وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا. وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ.  وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏  {النساء: 20، 21}


وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير (البقرة - 237 )

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்