முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடி ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு புதிய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடம் அற்ற நிலையில் உள்ளது. எனவே, வேறு இடத்தை வாங்குவதற்கோ பெற்றுக் கொள்வதற்கோ முடியாத ஒரு நிலையில் இப்பகுதி மக்கள் இருக்கின்றனர். இதன் காரணமாக தற்போது பாவனையில் உள்ள மையவாடியில் புதிய ஜனாஸாக்களை எவ்வாறு அடக்க வேண்டும் என்ற விளக்கத்தை தருமாறு வேண்டுகின்றோம்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒரு முஸ்லிமின் கண்ணியம் மிக உயர்ந்ததாகும். அவன் உயிருடன் இருக்கும் போது  சங்கைப்படுத்துவதைப் போன்று மரணித்த பிறகும் அவனைச் சங்கைப்படுத்துவது அவசியமாகும். மேலும், ஒரு கப்ரில் அடக்கப்பட்ட ஜனாஸா அது உக்கி மண்ணோடு மண்ணாகி அழிந்து போகும் வரைக்கும் அந்த இடம் குறித்த ஜனாஸாவுக்கே சொந்தமானதாகும்.

பொதுவாக ஒரு கப்ரை அதிலிருக்கும் ஜனாஸா உக்கிப் போவதற்கு முன்னர் ஷரீஅத்துடைய காரணங்களுக்காகவே அன்றி மீண்டும் தோண்டுவது ஹராமாகும். என்றாலும், அதில் அடக்கப்பட்டிருக்கும் ஜனாஸா உக்கி மண்ணோடு மண்ணாகி போனதன் பின்பு இன்னுமொரு ஜனாஸாவை அடக்கம் செய்யத் தோண்டுவதற்கு அனுமதியுண்டு.

இதுபற்றி இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ எனும் நூலில் “ஒரு ஜனாஸா ஒரு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அதன் எலும்புகள் மற்றும் சதையும் உக்கி அழிந்து போகும் வரைக்கும் புதிய ஜனாஸாவை அடக்கம் செய்வது கூடாது. அவைகள் உக்கி மண்ணோடு மண்ணாகி போனதன் பின்பு அவ்விடத்தில் புதிய ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதியுண்டு” என்று கூறுகின்றார்கள்.

لَا يَجُوزُ أَنْ يُدْفَنَ مَيِّتٌ فِي مَوْضِعِ مَيِّتٍ حَتَّى يبلي الاول بحيث لا يبقى منه شئ لالحم وَلَا عَظْمٌ .... فَأَمَّا إذَا بَلِيَ وَلَمْ يَبْقَ عَظْمٌ بَلْ انْمَحَقَ جِسْمُهُ وَعَظْمُهُ وَصَارَ تُرَابًا فَيَجُوزُ بَعْدَ ذَلِكَ الدَّفْنُ فِي مَوْضِعِهِ بِلَا خِلَافٍ.  (المجموع شرح المهذب  – كتاب الجنائز - باب حمل الجنازة والدفن)

நீங்கள் உங்களது கடிதத்தில் புதிய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு மையவாடியில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், அதற்கென புதிய ஒரு காணியை கொள்வனவு செய்வதற்கு சிரமமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். மேலும், உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது குறித்த காணி மையவாடிக்கு வக்ப் செய்யப்பட்ட காணி என்றும் சுமார் நாற்பது வருடத்திற்கும் மேலாக ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டதன் அடிப்படையில், வக்ப் செய்யப்பட்ட மையவாடிக் காணியில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்கள் உக்கி அழிந்திருக்கும் என நம்பிக்கையான மண்ணியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தும் கால எல்லை கடந்திருக்குமாயின் அவ்வாறான கப்ருகளைத் தோண்டி புதிய ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம்.

ஆகவே, இதன் அடிப்படையில் உங்களது மையவாடியில் புதிய ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போது ஆரம்பத்தில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட பழைய இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பது பிரச்சினையாக இருக்காது என கருதுகின்றோம். அவ்வாறு தோண்டும் போது ஏற்கனவே அடக்கப்பட்ட ஜனாஸாக்களின் எலும்புகள் ஏதும் காணப்பட்டால் அதைத் தொடர்ந்தும் தோண்டாமல் மூடிவிடுவது கட்டாயமாகும்.

கப்ரைத் தோண்டி முடித்ததன் பிறகு எலும்பின் பாகங்கள் ஏதும் கிடைத்தால், புதிய ஜனாஸாவை அடக்கும் போது அந்த எலும்புகளை கப்ரின் ஓரப் பகுதியில் வைத்து அடக்கம் செய்தல் வேண்டும்.

يحرم نبش قبر الميت ودفن غيره فيه قبل بلائه عند أهل الخبرة بتلك الأرض ، فإن حفر فوجد فيها شيء من عظم الميت قبل تمام الحفر وجب رد ترابه عليه ، وإن وجدها بعد تمام الحفر جعلها في جانب من القبر وجاز لمشقة استئناف قبر دفن الآخر معه"  (الفتاوى الفقهية الكبرى – باب الجنائز)

என்றாலும், குறித்த இடத்தைத் தவிர ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு வேறு இடம் இல்லாத நிர்ப்பந்தமான சந்தர்ப்பத்திலும், அதிகமான ஜனாஸாக்களை அடக்கம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் நிலையிலும் கப்ரைத் தோண்டும் போது எலும்புகள் தென்பட்டாலும் தொடர்ந்தும் தோண்டி ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதி உண்டு. கிடைக்கப்பெற்ற எலும்புகளை கப்ரின் ஓரப்பகுதியில் வைத்து மூடிவிடுதல் வேண்டும்.

ولو حفر قبراً فوجد عظام الميت قبل تمام الحفر .. أعاده حتماً، ولا يتم الحفر إلا لضرورة، أو بعده جعله في جانب من القبر ودفن الميت معه فيه.  )شرح المقدمة الحضرمية)

(وقوله: قبل تمام الحفر) أي قبل أن يكمل حفر القبر.  (قوله: وجب رد ترابه) أي ويحرم تكميل الحفر والدفن فيه لما يلزم عليه من الإدخال المحرم. وهذا إذا لم يحتج إلى الدفن في ذلك القبر، بأن كثر الموتى، وإلا فلا بأس بذلك. (إعانة الطالبين)

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.