கேள்வி : ஊருக்குள் ஜனாஸாவினை அடக்கம் செய்ய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மையவாடிக்குச் செல்லலாமா?

பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளான குளிப்பாட்டுதல், கபன் செய்தல், தொழுவித்தல் மற்றும் அடக்கம் செய்தல் என்பவை பர்ளு கிபாயாவாகும். இவற்றை ஓர் ஊரில் உள்ள எவரும் நிறைவேற்றாவிட்டால், அவ்வூர் மக்கள் அனைவரும் பாவத்திற்கு உள்ளாக்கப்படுவர்.

ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக அதைச் சுமந்து செல்வது உயர்வான நற்காரியமும் அதனை கண்ணியப்படுத்தும் ஒரு செயலுமாகும். நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் ஜனாஸாவைத் தமது தோள்களில் சுமந்து சென்றுள்ளார்கள்.

இமாம் ஷாபிஈ றஹிமஹல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

"ஜனாஸாவை சுமந்து செல்வது பர்ளு கிபாயா என்பதில் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை.  மேலும், அவ்வாறு சுமந்து செல்வதில் எந்தவொரு இழிவும் இல்லை. சஹாபாக்கள் மற்றும் தபிஈன்கள் அதன் பின் வந்த மார்க்க அறிஞர்கள் அதைச் செய்துள்ளார்கள்"

قَالَ الشَّافِعِيُّ وَالْأَصْحَابُ رَحِمَهُمُ اللَّهُ حَمْلُ الْجِنَازَةِ فَرْضُ كِفَايَةٍ وَلَا خِلَافَ فِيهِ قَالَ الشَّافِعِيُّ وَالْأَصْحَابُ وَلَيْسَ فِي حَمْلِهَا دناءة وسقوط مروءة بل هو بر وَطَاعَةٌ وَإِكْرَامٌ لِلْمَيِّتِ وَفَعَلَهُ الصَّحَابَةُ وَالتَّابِعُونَ وَمَنْ بَعْدَهُمْ مِنْ أَهْلِ الْفَضْلِ وَالْعِلْمِ وَاَللَّهُ أَعْلَمُ. (باب حمل الجنازة والدفن – كتاب الجنائز – المجموع)

 ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக தோளில் சுமந்துகொண்டு அல்லது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். எவ்வாறு சென்றாலும் அதன் கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

என்றாலும், ஜனாஸாவை வாகனத்தில் எடுத்துச் செல்வதை விட தோளில் சுமந்து நடந்து செல்வது ஏற்றமாகும். ஏனெனில், அவ்வாறு சுமந்து செல்லும் போது அதிகமான மக்கள் பார்த்து அதற்காக துஆ செய்யவும், மரணத்தை நினைக்கவும் காரணமாக அமையும். அத்துடன், நடந்து செல்வது ஆடம்பரமற்றதாக இருப்பதோடு பற்றற்ற தன்மையையும் பிரதிபலிக்கும்.

எனினும், மையவாடி மிகவும் தூரத்தில் இருக்கும் இடங்களில் ஜனாஸாவை சுமந்துகொண்டு நடந்து செல்வது சிரமமாக இருத்தல், மழை பெய்து கொண்டிருத்தல் மற்றும் ஜனாஸாவை சுமந்து செல்ல நபர்கள் இல்லாதிருத்தல் போன்ற தங்கடமான சந்தர்ப்பங்களில் ஜனாஸாவை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லலாம்.

قَالَ أَصْحَابُنَا رَحِمَهُمُ اللَّهُ يَحْرُمُ حَمْلُ الْجِنَازَةِ عَلَى هَيْئَةٍ مُزْرِيَةٍ كَحَمْلِهِ فِي قُفَّةٍ وَغِرَارَةٍ وَنَحْوِ ذَلِكَ وَيَحْرُمُ حَمْلُهُ عَلَى هَيْئَةٍ يُخَافُ مِنْهَا سُقُوطُهُ. قَالَ الشَّافِعِيُّ فِي الْأُمِّ وَالْقَاضِي أَبُو الطَّيِّب وَالْأَصْحَابُ وَيُحْمَلُ عَلَى سَرِيرٍ أَوْ لَوْحٍ أَوْ محمل قالوا وأى شئ حمل عليه اجزأ. (باب حمل الجنازة والدفن – كتاب الجنائز – المجموع)

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்