எமது பள்ளிவாயலில் ஒரு புதிய நுழைவாயிலை அமைப்பதற்காக பள்ளி மையவாடியின் நிலத்தில் இருந்து 6 அடி நிலம் தேவைப்படுகின்றது. அவ்வாறு மையவாடியின் நிலத்தை நுழைவாயிலாக பயன்படுத்துவதற்கான ஒரு மார்க்கத் தீர்ப்பினை எழுத்து மூலம் எமக்கு வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மையவாடி, ஜனாஸாக்களை அடக்கம் செய்யவும், மக்கள் மறுமை வாழ்வின் சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளவும், அல்லாஹ்வின் அச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் உள்ள ஓர் இடமாகும். நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் “மையவாடியைத் தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று கூறியுள்ளார்கள்.  (நூல் : அத்-திர்மிதி - 1054)

 عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ القُبُورِ، فَقَدْ أُذِنَ لِمُحَمَّدٍ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ، فَزُورُوهَا فَإِنَّهَا تُذَكِّرُ الآخِرَةَ» وَفِي البَاب عَنْ أَبِي سَعِيدٍ، وَابْنِ مَسْعُودٍ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُمِّ سَلَمَةَ.: «حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، " وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ: لَا يَرَوْنَ بِزِيَارَةِ القُبُورِ بَأْسًا، وَهُوَ قَوْلُ ابْنِ المُبَارَكِ، وَالشَّافِعِيِّ، وَأَحْمَدَ، وَإِسْحَاقَ " (رواه التبرمذي – أبواب الجنائز - بَابُ مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي زِيَارَةِ القُبُورِ رقم الحديث : 1054) 

பொதுவாக இலங்கையைப் பொறுத்தவரையில் மையவாடிக்குரிய காணிகள் பின்வரும் ஏதேனும் ஒரு முறையில் அமைந்திருக்கின்றன.

  1. ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கு மாத்திரம் வக்ப் செய்யப்பட்ட காணிகள்.
  2. மையவாடியாக வக்ப் செய்யப்படாமல், தொடர்ந்து ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டு மையவாடியாகப் பயன்படுத்தப்படும் பொதுக் காணிகள்.
  3. தனியாருக்குச் சொந்தமான காணிகள்.
  4. மஸ்ஜிதுக்கு அல்லது வேறு ஒன்றுக்குப் பொதுவாக வக்ப் செய்யப்பட்டிருந்த போதிலும், ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கெனப் பயன்படுத்தப்படும் காணிகள்.

மேற்கூறப்பட்ட காணிகளில், மையவாடிக்கென வக்ப் செய்யப்பட்ட காணியில் அடக்கப்பட்ட மையித்துக்கள் உக்கிப் போய், அதன் அடையாளங்கள் இல்லாமல் அழிந்து போயிருந்தாலும், அக்காணியை கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாது.

ஏனெனில், ஒரு பொருளை வக்பு செய்த நபர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ, அந்த நோக்கத்துக்கே அதைப் பயன்படுத்துவது அவசியமாகும். அத்துடன் அதை வக்பு செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறாகும்.

“உமர் றழியல்லாஹ அன்ஹ அவர்கள் தனது பேரீத்தம் பழத் தோட்டம் ஒன்றின் விடயத்தில் ஆலோசனை செய்தபோது நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோட்டத்தை வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்யும் படியும் அவ்வாறு வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்தால் அத்தோட்டம் மீண்டும் விற்கப்படவும் மாட்டாது, நன்கொடையாக வழங்கப்படவும் மாட்டாது, அனந்தரச் சொத்தாக்கப்படவும் மாட்டாது, இருப்பினும் அத்தோட்டத்தின் பழங்கள் தர்மம் செய்யப்படும் என்று கூறினார்கள்.” 

أن عمر بن الخطاب رضي الله عنه أراد أن يتصدق بنخل له ، فاستشار النبي صلى الله عليه وسلم ، فأمره أن يوقفه ، فقال صلى الله عليه وسلم : ( تَصَدَّقْ بِأَصْلِهِ ، لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَلَكِنْ يُنْفَقُ ثَمَرُهُ ) رواه البخاري – رقم الحديث : 2764 - كتاب الوصايا - باب وما للوصي أن يعمل في مال اليتيم وما يأكل منه بقدر عمالته) . ولفظ مسلم : ( لَا يُبَاعُ أَصْلُهَا، وَلَا يُبْتَاعُ ) رواه مسلم – رقم الحديث 1632 - كتاب الوصية – باب الوقف – تبويب الإمام النووي رحمه الله ).

தாரகுத்னியின் அறிவிப்பில் “வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அது வக்பு செய்யப்பட்டதாகவே இருக்கும்” என வந்துள்ளது. 

قال الحافظ ابن حجر رحمه الله : زَادَ الدَّارَقُطْنِيُّ مِنْ طَرِيقِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ : ( حَبِيسٌ [أي : وقف] مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ )  - باب الوقف للغني والفقير والضيف، كتاب الوصايا، فتح الباري

ஒரு நோக்கத்துக்காக வக்ப் செய்யப்பட்ட பொருளை, இன்னும் ஒரு தேவைக்குப் பயன் படுத்தக் கூடாது என்பது பற்;றி இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி றஹிமஹல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் அடிப்படைத் தோற்றத்திலிருந்து மாற்றுவது கூடாது. அதாவது, வீடாக வக்ப் செய்யப்பட்டதைத் தோட்டமாகவோ அல்லது குளியலறையாகவோ அல்லது தோட்டமாக வக்ப் செய்யப்பட்டதை வீடாகவோ மாற்றுவது கூடாது. ஆனால், வக்ப் செய்தவர் வக்ப் செய்யும் பொழுது, வக்பைக் கண்காணிப்பவர் தேவையைக் கருதி பயன்படுத்த முடியும் என்று கூறினால் மாத்திரம் தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ளலாம்.”

ஆகவே, மேற்கூறப்பட்ட நான்கு வகை மையவாடிக் காணிகளிலும், மையவாடிக்கென வக்ப் செய்யப்பட்ட காணிகளைத் தவிர ஏனைய காணிகளில், ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு, ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் உக்கி அடையாளங்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டன என நம்பிக்கையான மண்ணியல் நிபுணர்கள் உறுதியாகக் கூறுமிடத்து அக்காணிகளை கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட வேறு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதியுள்ளது.

يَجُوزُ نَبْشُ الْقَبْرِ إذَا بَلِيَ الْمَيِّتُ وَصَارَ تُرَابًا وَحِينَئِذٍ يَجُوزُ دَفْنُ غَيْرِهِ فِيهِ وَيَجُوزُ زَرْعُ تِلْكَ الْأَرْضِ وبنائها وَسَائِرُ وُجُوهِ الِانْتِفَاعِ وَالتَّصَرُّفِ فِيهَا بِاتِّفَاقِ الْأَصْحَابِ وَإِنْ كَانَتْ عَارِيَّةً رَجَعَ فِيهَا الْمُعِيرُ وَهَذَا كُلُّهُ إذَا لَمْ يَبْقَ لِلْمَيِّتِ أَثَرٌ مِنْ عَظْمٍ وَغَيْرِهِ قَالَ أَصْحَابُنَا رَحِمَهُمُ اللَّهُ وَيَخْتَلِفُ ذَلِكَ بِاخْتِلَافِ الْبِلَادِ وَالْأَرْضِ وَيُعْتَمَدُ فِيهِ قَوْلُ أَهْلِ الْخِبْرَةِ بِهَا.  (المجموع شرح المهذب - كتاب الجنائز – كيفية ادخال الميت القبر)

وَلَا يَجُوزُ زَرْعُ شَيْءٍ مِنْ الْمُسَبَّلَةِ وَإِنْ تَيَقَّنَ بِلَى مَنْ بِهَا لِأَنَّهُ لَا يَجُوزُ الِانْتِفَاعُ بِهَا بِغَيْرِ الدَّفْنِ فَيُقْلَعُ وَقَوْلُ الْمُتَوَلِّي يَجُوزُ بَعْدَ الْبِلَى مَحْمُولٌ عَلَى الْمَمْلُوكَةِ (تحفة  المحتاج - فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ من كتاب الجنائز)

(فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ) وَهِيَ مَا اعْتَادَ أَهْلُ الْبَلَدِ الدَّفْنَ فِيهَا عُرِفَ أَصْلُهَا وَمُسَبِّلُهَا أَمْ لَا وَمِثْلُهَا بِالْأَوْلَى مَوْقُوفَةٌ (تحفة المحتاج  - فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ من كتاب الجنائز)

தற்பொழுது மஸ்ஜிதில் நிறுவப்பட்டுள்ள மின்தூக்கி (lift) க்கு செல்வதற்காக மஸ்ஜிதுடன் சேர்ந்துள்ள காணியில் இருந்து 6 அடி நிலம் தேவைப்படுவதாகவும் அதனை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா எனவும் கோரியிருந்தீர்கள்.

நீங்கள் உங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் மஸ்ஜித் மீன்தூக்கிக்கு செல்வதற்காக மஸ்ஜிதுடன் சேர்ந்துள்ள காணியில் பாதை அமைப்பதற்குக் கோரியிருந்த 6 அடி அளவிலான நிலம் மையவாடிக்கென்று வக்ப் செய்யப்பட்ட இடமாக இல்லை என்பதை, குறித்த இடத்தை நேரடியாக பார்வையிட வருகை தந்த பத்வாக் குழுவின் உறுப்பினர்களிடமும், நீங்கள் அவசர பத்வாக் குழுவின் கூட்டத்துக்கு நேரடியாக சமுகமளித்த பொழுதும் கூறியிருந்தீர்கள்.

நீங்கள் கூறியதற்கமைய குறித்த இடத்தில் ஏற்கனவே ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவில்லையென்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள மஸ்ஜிதின் தேவைக்கு அதனைப் பயன்படுத்த முடியும். அவ்வாறு ஜனாஸாக்கள் ஏதும் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஜனாஸாக்களின் எச்சங்கள் ஏதும் மிச்சம் இல்லை என நம்பிக்கையான மண்ணியல் நிபுணர்கள் உறுதிப்படுத்துவது அவசியமாகும். மேலும், அவ்வாறு பயன்படுத்துவதற்கு குழிகள் தோண்டும் வேளையில் ஜனாஸாக்களின் எச்சங்கள் ஏதும் தென்பட்டால், அதை உடனடியாக மூடிவிடுவதுடன், அவ்விடத்தில் அவ்வெச்சங்கள் அனைத்தும் பூரணமாக இத்துப் போகும் வரை பயன்படுத்தாது விட்டுவிடுதல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.