வாடகை பெறாது பெருந் தொகைப் பணத்தை முற்பணமாகக் கொடுத்து குத்தகைக்குப் பெறுதல் சம்பந்தமாகப் பத்வாக் கோரி தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்டுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வாடகைக்கு விடல் என்பது ஒரு சொத்தின் பயன்பாட்டை அதன் உரிமையாளர் குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகைப் பணத்துக்காக இன்னொருவருக்குக் கொடுப்பதாகும்.  இந்த முறை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

வாடகைத் தொகையை மாதாந்தம் எடுக்கவும் முடியும் அல்லது அதை வாடகை ஒப்பந்தத்தின் போதே முழுமையாகப் பெற்று மாதாந்தம் ஒரு தொகையை கழிக்கவும் முடியும்.ஒத்தி முறை என ஓர் ஒப்பந்தம் தற்காலத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

أَيْ شَرْعًا، وَعَرَّفَهَا بَعْضُهُمْ بِأَنَّهَا عَقْدٌ عَلَى مَنْفَعَةٍ مَعْلُومَةٍ مَقْصُودَةٍ قَابِلَةٍ لِلْبَذْلِ وَالْإِبَاحَةِ بَعُوضٍ مَعْلُومٍ وَضْعًا. "حاشية القليوبي على كنز الراغبين للإمام جلال الدين محمد بن أحمد المحلي)

அதை சிங்கள மொழியில் “Bபடீத்த”  என அழைப்பர். அதன் விபரம் யாதெனில் ஒருவர் பெரும் தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது சொத்தை வாடகை ஏதுமின்றி அல்லது மாதாந்தம் சிறு தொகையை வாடகையாக செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையில் குறிப்பிட்ட காலத்துக்கு பாவனைக்குக் கொடுப்பார்.அக்காலம் முடிந்ததும் பணத்தை மீளக் கொடுத்து விட்டு தனது சொத்தை மீண்டும் எடுத்துக் கொள்வார்.

இம்முறை ஷரீஆவின் பார்வையில் கூடாது. ஏனெனில் மீளத்தரவேண்டும் என்ற நிபந்தனையில் கொடுக்கப்படும் பணம் கடனாகும். கடனை மையமாக வைத்து எவ்வித பலனும் அடையக் கூடாது. அவ்வாறு அடைந்தால் அது வட்டியாகும்.

 

ஒத்தி முறையில் பணம் கொடுத்தவர் அதற்காக பணம் பெற்றவரது சொத்தைப் பயன்படுத்துவதானது, கொடுக்கப்பட்ட பணத்திற்கு இலாபம் பெறுவதாகவே கொள்ளப்படும். ஏனெனில் பணம் கொடுத்தவர் குறித்த சொத்தை பயன்படுத்த தனக்கு அனுமதிக்க வேண்டுமென்ற நிபந்;தனையிலேயே பணத்தைக் கொடுக்கிறார். அனுமதி மறுக்கப்பட்டிருப்பின் பணத்தைக் கொடுக்கமாட்டார். மேலும் ஒத்திமுறையில் சிறு தொகையை மாதாந்தம் வாடகையாக எடுத்தாலும் அது வட்டியாகவே அமையும்.

அதற்கான காரணம் யாதெனில் சொத்தின் உரிமையாளர் தான் பெற்ற பெரும் தொகைப் பணத்திற்காகவே சிறிய அளவு வாடகை அறவிட உடன்படுகிறார். இல்லாவிடின் அவர் உடன்பட்டிருக்கமாட்டார்.

எனவே, ஒத்தி முறை மார்க்கத்தில் எவ்விதத்திலும் அனுமதியில்லை. சொத்தை குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்குக் கொடுத்து அக்காலத்திற்குரிய வாடகைப் பணத்தை மொத்தமாகவோ அல்லது மாதாந்தமோ பெற்றுக்கொள்வதே அனுமதிக்கப்பட்ட முறையாகும்.

 فَإِنْ فَعَلَ فَسَدَ الْعَقْدُ لِخَبَرِ «كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ رِبًا» وَجَبَرَ ضَعْفَهُ مَجِيءُ مَعْنَاهُ عَنْ جَمْعٍ مِنْ الصَّحَابَةِ وَمِنْهُ الْقَرْضُ لِمَنْ يَسْتَأْجِرُ مِلْكَهُ أَيْ مَثَلًا بِأَكْثَرَ مِنْ قِيمَتِهِ لِأَجْلِ الْقَرْضِ إنْ وَقَعَ ذَلِكَ شَرْطًا إذْ هُوَ حِينَئِذٍ حَرَامٌ إجْمَاعًا وَإِلَّا كُرِهَ عِنْدَنَا وَحَرُمَ عِنْدَ كَثِيرٍ مِنْ الْعُلَمَاءِ قَالَهُ السُّبْكِيُّ. "تحفة المحتاج"

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ்.