எமது ஜுமுஆ மஸ்ஜித் சுமார் 25 வருடங்களாக ஜுமுஆ மஸ்ஜிதாக இயங்கி வருகின்றது. அதற்கு முன்னர் பல காலமாக ஜுமுஆ மஸ்ஜிதாக இயங்கிவந்த எமது பழைய மஸ்ஜிதில் தற்பொழுது ஜுமுஆ நடைபெறுவதில்லை. ஆனால் அங்கு காணப்படும் மிம்பர் மிஹ்ராப் உள்ளிட்ட மஸ்ஜிதுக்குரிய அனைத்து அம்சங்களும் அவ்வாறே காணப்படுகின்றன. உழ்ஹிய்யா உள்ளிட்ட சில பணிகளை அங்கு மேற் கொண்டு வருகிறோம்.

எமக்குள்ள பிரச்சினை இதுதான். கடந்த சில காலங்களாக அதனை ஒரு பாலர் பாடசாலைக்கு கூலிக்கு வழங்கியுள்ளோம். எனவே இங்கு ஆடல் பாடல் நடனம் இடம் பெறுவதும் முஸ்லிமல்லாத அசுத்த நிலையிலுள்ள அந்நிய பெண்கள் பாட போதனைகள் நடத்துவதும் அண்மைய காலங்களில் சில விமர்சனங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பான தங்களது பத்வா தீர்ப்பினை எமக்கு மிக விரைவில் தந்துதவுமாறு தயவாய் வேண்டுகின்றோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


“வக்ப்” என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ அல்லது வக்ப் செய்யப்பட்ட நோக்கத்துக்கன்றி வேறு தேவைக்காகப் பயன்படுத்துவதோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

أن عمر رضي الله عنه قال : يا رسول الله ! إني أصبت مالاً بخيبر لم أصب قط مالاً أنفس عندي منه ؛ فما تأمرني فيه ؟ قال إن شئت حبست أصلها وتصدقت بها , غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث فتصدق بها عمر في الفقراء وذوي القربى والرقاب وفي سبيل الله وابن السبيل والضيف....الحديث   (بَابُ الشُّرُوطِ فِي الوَقْفِ)


ஓர் இடத்தில் கட்டிடம் அமைத்து, அக்கட்டிடத்தையும், அது அமைந்துள்ள நிலத்தையும் மஸ்ஜிதாக வக்ப் செய்தால், மஸ்ஜித் அமையப்பெற்றுள்ள நிலம் கியாம நாள்வரை மஸ்ஜிதாக இருக்கும். அக்கட்டிடம் இடிக்கப்பட்டாலும் அல்லது தானாக விழுந்தாலும், ஸ்ஜித்
அமையப்பெற்றுள்ள அந்நிலம் மஸ்ஜிதாகவே கருதப்படும். மஸ்ஜிதுக்குக் கொடுக்கப்படும் அனைத்து சட்டங்களும் இதற்குக் கொடுக்கப்படல் வேண்டும்.


அவ்வாறு, நிலத்தை வக்ப் செய்யாமல், மஸ்ஜித் அமைக்கப்படடிருக்கும் கட்டிடத்தை மாத்திரம் வக்ப் செய்யவும் முடியும். மேலும், அக்கட்டிடம் இடிக்கப்பட்டு அல்லது தானாக விழுந்து, நிலம் மட்டும் மீதமாக இருந்தால், அந்நிலத்துக்கு மஸ்ஜிதுடைய சட்டம் பொருத்தமாகமாட்டாது. அதில் மீண்டும் மஸ்ஜித் கட்டி மீண்டும் வக்ப் செய்தால் வக்ப் உடைய சட்டங்கள் பேணப்படும்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள மஸ்ஜித் பல வருடங்களாக தொழுகை நடாத்தப்பட்ட இடமாகும். அதில் தற்பொழுது தொழுகை நடாத்தப்படாவிட்டாலும், மஸ்ஜிதுக்குரிய அனைத்து சட்டங்களையும் அதற்குக் கொடுப்பது கட்டாயமாகும்.


புதிய மஸ்ஜிதைக் கட்டியதனால் பழைய மஸ்ஜிதை வணக்க வழிபாடுகளைக் கொண்டு செழிப்பாக்காமலும் அதன் கண்ணியத்தைப் பேணாமலும் இருப்பது தவறாகும்.


அம்மஸ்ஜிதில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தரிப்பதும், ஆடல் பாடல் மற்றும் நடனங்கள் போன்றவைகளை நடாத்துவதும், உழ்ஹிய்யா பிராணிகளை அறுத்து அசுத்தமாக்குவதும் மஸ்ஜிதுடைய கண்ணியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் காரியங்களாக இருப்பதால் இவ்வாறான செயல்களைச் செய்வதும் குற்றமாகும்.


எனவே, குறித்த மஸ்ஜிதின் புனிதத்துவத்தைப் பாதுகாப்பதுடன் ஷரீஆவின் வரையறையைப் பேணி பகுதி நேர மத்ரஸா, குர்ஆன் மத்ரஸா அல்லது பாலர் பாடசாலை நடாத்த முடியுமென்றால் அதற்கு அனுமதி உண்டு.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ