மேற்குறிப்பிட்ட எமதூர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு மையவாடியும் பள்ளிவாசலுக்குக் கீழ் பகுதியில் மையவாடியில் மற்றைய பகுதியும் அமைந்துள்ளது.

பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள மையவாடி இற்றைக்கு சுமார் 40 வருடங்களாக ஜனாஸாக்கள்; அடக்கப்படாத மையவாடியாக இருந்த நிலப்பரப்பாகும். எனினும் பள்ளிவாசலுக்குக் கீழுள்ள காணி மையவாடியாகப் பாவிக்க முன்னர் இக்காணியே மையவாடியாகப் பயன்படுத்தப்பட்டது. 

2006 - 2008 ஆம் ஆண்டளவில் பள்ளிவாசலுக்கு அருகில் சிறிய அளவிலான திருமண வைபவங்கள் நடத்துவதற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வாகன தரிப்பிடத்துக்கு வேறு இட வசதி இல்லாமையாலும் தொழுகைக்காக வரும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காகவும் எமது பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள இக்காணியை வாகன தரிப்பிடமாகப் பாவிப்பதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மையவாடியில் வாகனத் தரிப்பிடம் அமைக்கலாம் அமைக்கக் கூடாது என இரு தரப்பு வாதங்கள் இருப்பதனால் ஷரீஆ அடிப்படையில் இதன் பொருத்தப்பாடு பற்றிய ஒரு தீர்ப்பை எழுத்து மூலமாக எமக்குத் தந்துதவுமாறு நிர்வாக சபையின் சார்பாக பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறிப்பிட்ட 40 வருடங்களுக்கு முன் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட  

காணி பள்ளிக்கு வக்பு செய்யப்பட்ட காணியாகும். பொதுவாக ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்காக வழங்கப்பட்ட காணியல்ல என நான் இத்தால் உறுதிப்படுத்துகிறேன். 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


“வக்ப்” என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ அல்லது வக்ப் செய்யப்பட்ட நோக்கத்துக்கன்றி வேறு தேவைக்காகப் பயன்படுத்துவதோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள காணி மஸ்ஜிதின் தேவைகளுக்காக வக்பு செய்யப்பட்டுள்ள காணி என்பதையும், அதில் 40 வருடங்களுக்கு மேலாக ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவில்லை என்பதையும் உங்களது கடிதத்தின் மூலமாகவும் உங்களுடன் தொலைபேசியில் உரையாடியதன் மூலமாகவும் நாம் விளங்கிக்கொண்டோம்.

மஸ்ஜிதின் தேவைக்கென வக்பு செய்யப்பட்ட காணியை மஸ்ஜிதின் வருமானத்திற்காக வாகனத் தரிப்பிடமாக பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. இருந்தாலும், குறித்த காணியில் ஏற்கனவே ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் அவற்றின் உடற் பாகங்களில் எப்பகுதியும் தற்பொழுது மிகுதமாக இல்லை என நம்பிக்கையான மண்ணியல் நிபுணர்கள் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

يجوز نبش القبر إذا بلي الميت وصار ترابا وحينئذ يجوز دفن غيره فيه ويجوز زرع تلك الأرض وبنائها وسائر وجوه الانتفاع والتصرف فيها باتفاق الأصحاب وإن كانت عارية رجع فيها المعير وهذا كله إذا لم يبق للميت أثر من عظم وغيره قال أصحابنا رحمهم الله ويختلف ذلك باختلاف البلاد والأرض ويعتمد فيه قول أهل الخبرة بها. (  المجموع  شرح المهذب - كتاب الجنائز – كيفية إدخال الميت القبر)

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ