எமது ஊர் ஜுமுஆப் பள்ளிவாசலை சூழவுள்ள புராதன மையவாடியை மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் சென்ற வருடம் புணர் நிர்மான வேலைகளை ஆரம்பித்தோம். மையவாடியை சூழவிருந்த பழைய கல், மதில்களை அகற்றி காண்களை வெட்டிப் புதிதாக கல் கட்டுக்களை அமைத்துள்ளோம். 

சென்ற வாரம் நாம் மையவாடிக்குப் புதிதாக மண் நிரப்பும் நோக்கில் ஏற்கனவே இட்ட கற்கள் காடுகள் மற்றும் (அத்திவாரம் வெட்டிய) மண் குவியல்களை அகற்றிப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியிலுள்ள குழி ஒன்றில் இட்டோம். (வேறு மண்ணால் மூடி விடும் நோக்கில்) ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது கொண்டு சென்றவற்றை மீண்டும் கொண்டு வந்து இடுங்கள் என பல அழுத்தங்கள் நிர்வாக சபைக்கு வந்த வண்ணம் உள்ளன. 

எனவே இவ்விரு செயல்களில் எது சரியானது எனும் பத்வாவை எழுத்து மூலம் மிக விரைவாக எமக்கு பெற்றுத் தரும்படி வேண்டிக்கொள்கின்றோம். 

அத்துடன் கொண்டு சென்றவற்றை மீண்டும் மையவாடிக்கே கொண்டுவந்து இடுவதாயின் எமது திட்டப்படி புனர் நிர்மான வேலைகளை செய்து கொள்வதில் பல தடங்கல்கள் ஏற்படுவதால் இவ்வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டுபோகவும் தாங்களின் பத்வாவை பெற்றுத் தரும்படி பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம். 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மையவாடியானது மறுமையின் சிந்தனை மற்றும் அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் இடமாகும். நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் “கப்ருகளைத் தரிசியுங்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي، فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ. (رواه مسلم - كتاب الجنائز- بَابُ اسْتِئْذَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ عَزَّ وَجَلَّ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ - تبويب الإمام النووي رحمه الله)

அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று கூறியுள்ளார்கள். மையவாடிக்கென ஷரீஅத்தில் தனித்துவமான ஒரு கண்ணியம் இருக்கின்றது.

عَنْ جَابِرٍ قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ»: حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، (رواه الترمذي - 1052 – أبواب الجنائز - بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ تَجْصِيصِ القُبُورِ، وَالكِتَابَةِ عَلَيْهَا)

மையவாடி வக்ப் செய்யப்பட்டதாக இருந்தால் அல்லது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கென ஒதுக்கப்பட்ட, பொதுக்காணியாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய மண்ணை அகற்றுவதோ அல்லது வேறு தேவைக்குப் பயன்படுத்துவதோ கூடாது. ஏனெனில் ஒரு விடயத்திற்கு வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் தேவைக்கு அல்லாமல் வேறு தேவைக்குப் பயன்படுத்துவது கூடாது.

வக்ப் செய்யப்பட்ட மையவாடியின் மண்ணை நகர்த்துவது பற்றி ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய அறிஞர்களில் ஒருவரான இமாம் ரமலீ றஹிமஹ{ல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் அவ்வாறு எடுப்பது கூடாது. எடுத்த மண் மீதியாக இருந்தால் அதை அதில் திரும்பப் போட்டுவிடுவது கட்டாயமாகும். அவ்வாறில்லையென்றால் அது போன்றதையும் அந்தப் பூமியில் எற்பட்ட குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்குரிய நஷ்டஈட்டையும் கொடுப்பது கட்டாயமாகும் என பதிலளித்தார்கள்.

(سُئِلَ) عَمَّنْ أَخَذَ تُرَابًا مِنْ أَرْضٍ مَوْقُوفَةٍ مَا يَجِبُ عَلَيْهِ (فَأَجَابَ) بِأَنَّهُ يَجِبُ عَلَيْهِ رَدُّهُ إنْ بَقِيَ وَإِلَّا فَمِثْلُهُ وَأَرْشُ نَقْصِ الْأَرْضِ وَيَكُونُ لِلْمَوْقُوفِ عَلَيْهِ. ( بَابُ الْغَصْبِ - فتاوى الرملي)

நீங்கள் உங்களது கடிதத்தில் புராதன மையவாடியை புனர்நிர்மானம் செய்யும் நோக்கில் அதிலிருந்த மண், கற்கள் போன்றவற்றை பள்ளிவாசலுக்குச் சொந்தமான மைதானத்தில் இட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தீர்கள். குறித்த மையவாடி ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு வக்ப் செய்யப்பட்டதாக இருந்தால், அதிலிருந்து எந்தப் பொருட்களையும் அகற்றுவது கூடாது. மேலும், அதிலிருந்து மண்ணை நகர்த்துவது, ஜனாஸாக்களுடைய கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் ஒரு செயலுமாகும்.


எனவே நீங்கள் அதிலிருந்து அகற்றிய மண் கற்கள் போன்றவற்றை குறித்த இடத்திற்கு மீண்டும் கொண்டு சேர்ப்பது அவசியமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ.