ஒரு நிறுவனம் (தபர்ருஃ) நன்கொடை திட்டத்தினை உருவாக்கி அதன் அங்கத்தவர்களிடம் நன்கொடை உடன்படிக்கை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை அறவிட்டு அவர்களுக்கு தேவை ஏற்படும் போது குறித்த நன்கொடை நிதியில் இருந்து உதவி வழங்கப்படுகின்றது.

குறித்த நன்கொடைத் திட்டத்தில், எமது கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்திற்கு உட்பட்ட இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் இணைந்து செயற்படுவது கூடுமா?

1442.08.08

2021.03.22

 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு 

 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

நன்மையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசை செய்வதையும் நன்கொடை வழங்குவதையும் இஸ்லாம் வரவேற்கின்றது. இதனை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஆர்வமூட்டுகின்றன.

 

இதைப் பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

 

وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ  (سورة المائدة : 02)

(இறை நம்பிக்கையாளர்களே), நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். (05:02)

 

عنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ،... ( صحيح مسلم : 2699)

ஒருவர் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டிருக்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் : 2699)

 

நடைமுறையில் உள்ள தகாபுல் இஸ்லாமிய காப்புறுதி முறை என்பது, ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்யும் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறையாகும். இவ்வாறு ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து கொள்வதற்காக அவர்களுக்கிடையில் பொருட்களை ஒன்று சேர்த்து தேவையானவர்களுக்கு உதவி செய்யும் இந்த நடைமுறை சஹாபாக்களின் காலத்திலும் இருந்துள்ளது.

 

இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

عَنْ أَبِي مُوسَى رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ، جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ، بِالسَّوِيَّةِ، فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ. (صحيح مسلم : 2500)

அஷ்அரீ குலத்தினர் அல்லாஹ்வின் பாதையில் இருக்கும் பொழுது கையிருப்பிலுள்ள பயண உணவு குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு குறைந்து போய்விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்;; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; கூறியதாக, அபூ மூஸா அல்-அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (நூல் : ஸஹீஹு முஸ்லிம் : ஹதீஸ் இலக்கம் : 2500)

 

يقول الإمام النووي رحمه الله : وإنما المراد هنا إباحة بعضهم بعضا ومواساتِهم بالموجود (شرح صحيح مسلم للنووي رحمه الله  : بَاب مِنْ فَضَائِلِ الْأَشْعَرِيِّينَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ)

 

இமாம் நவவி றஹிமஹ{ல்லாஹ் அவர்கள் குறித்த ஹதீஸ் “ஸஹாபாக்கள் தங்களுக்குச் சொந்தமான பொருட்களை ஒருவர் மற்றவருக்கு பாவிப்பதற்கு அனுமதிப்பவர்களாகவும் தம்மிடமுள்ளவற்றைக் கொண்டு பிறருக்கு உதவிக் கொள்பவர்களாகவும் இருந்துள்ளார்கள், என்பதைத் தெளிவுபடுத்துகின்றது என்று கூறுகின்றார்கள். (ஷரஹுன் நவவீ அலா முஸ்லிம் : அஷ்அரிய்யூன்களின் சிறப்புக்கள் பற்றிய பாடம்)

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا قِبَلَ السَّاحِلِ، فَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ وَهُمْ ثَلاَثُ مِائَةٍ، وَأَنَا فِيهِمْ، فَخَرَجْنَا حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَنِيَ الزَّادُ، فَأَمَرَ أَبُو عُبَيْدَةَ بِأَزْوَادِ ذَلِكَ الجَيْشِ، فَجُمِعَ ذَلِكَ كُلُّهُ، فَكَانَ مِزْوَدَيْ تَمْرٍ، فَكَانَ يُقَوِّتُنَا كُلَّ يَوْمٍ قَلِيلًا قَلِيلًا حَتَّى فَنِيَ، فَلَمْ يَكُنْ يُصِيبُنَا إِلَّا تَمْرَةٌ تَمْرَةٌ، فَقُلْتُ: وَمَا تُغْنِي تَمْرَةٌ، فَقَالَ: لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَنِيَتْ، قَالَ: ثُمَّ انْتَهَيْنَا إِلَى البَحْرِ، فَإِذَا حُوتٌ مِثْلُ الظَّرِبِ، فَأَكَلَ مِنْهُ ذَلِكَ الجَيْشُ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَمَرَ أَبُو عُبَيْدَةَ بِضِلَعَيْنِ مِنْ أَضْلاَعِهِ، فَنُصِبَا ثُمَّ أَمَرَ بِرَاحِلَةٍ، فَرُحِلَتْ ثُمَّ مَرَّتْ تَحْتَهُمَا فَلَمْ تُصِبْهُمَا. (صحيح البخاري - 2483 : بَابُ الشَّرِكَةِ فِي الطَّعَامِ وَالنِّهْدِ وَالعُرُوضِ)

 

அதே போன்று ஸீபுல் பஹ்ர் என்ற நிகழ்வினில் ஸஹாபாக்கள் அவர்களின் உணவு குறைந்த பொழுது, அவர்களின் தளபதியாக இருந்த அபூ உபைதா றழியல்லாஹு அன்ஹு அவர்கள், கூட்டத்தில் இருந்த அனைவரிடத்திலும் எஞ்சியிருந்த உணவுகளை ஒன்று சேர்த்து அதனை அவர்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2483 : கூட்டுச் சேருதல்)

 

பிரயாணத்தில் இருப்பவர்கள் அவர்களது பிரயாணச் செலவுகளின் போது அவர்களிடம் இருக்கும் பொருட்களை ஒன்று சேர்த்து ஒன்றோடு ஒன்று கலந்து அதிலிருந்து அனைவருக்கும் செலவு செய்வது குற்றம் இல்லை என்ற விடயம் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

بَابُ الشَّرِكَةِ فِي الطَّعَامِ وَالنِّهْدِ وَالعُرُوضِ,  وَكَيْفَ قِسْمَةُ مَا يُكَالُ وَيُوزَنُ مُجَازَفَةً أَوْ قَبْضَةً قَبْضَةً، لَمَّا لَمْ يَرَ المُسْلِمُونَ فِي النَّهْدِ بَأْسًا أَنْ يَأْكُلَ هَذَا بَعْضًا وَهَذَا بَعْضًا، وَكَذَلِكَ مُجَازَفَةُ الذَّهَبِ وَالفِضَّةِ وَالقِرَانُ فِي التَّمْرِ»  (النهد) هو أن يخرج كل من الرفقاء نفقة سفره وتوضع النفقات كلها ويخلط بعضها ببعض وينفق الجميع منها وإن تفاوتوا في الأكل.  (صحيح البخاري - بَابُ الشَّرِكَةِ فِي الطَّعَامِ وَالنِّهْدِ وَالعُرُوضِ)

 

தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய காப்புறுதி முறை (அத்-தஃமீன் அத்தக்லீதீ) முஆவழா (பரிமாற்ற) உடன்படிக்கையாக இருப்பதால், மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள வட்டி, சூது,  க(G)ரர் என்னும் நிச்சயமற்ற தன்மை போன்ற விடயங்கள் காணப்படுகின்றன.

 

 1. இம்முறையில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் அங்கு வட்டிமுறை ஏற்படுகிறது. அதாவது, இழப்பீட்டின் போது கூடுதல் குறைவு ஏற்படுல், ஒன்று சேர்க்கும் பணத்தை நிறுவனம் வட்டி அடிப்படையில் முதலீடு செய்வதல், ஆயுள் காப்புறுதியில் காலம் முடிந்தபின் செலுத்திய பணத்தை விட கூடுதலாகப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றினால் வட்டி முறை ஏற்படுகின்றது.

 

 1. இம்முறையில் ஒரு தரப்பில் கொடுத்தல் உறுதியாகவும், மறுதரப்பில் கிடைத்தல் உறுதியற்றதாகவும் இருப்பதால், இங்கு கிமார் என்னும் சூதுக்கு ஓப்பாகின்றது.

 

 1. மறுதரப்பிலிருந்து இழப்பீடு கிடைக்குமா இல்லையா, எவ்வளவு, எப்போது கிடைக்கும் போன்றவை ஒப்பந்த நேரத்தில் உறுதியில்லாததன் காரணமாக ஓப்பந்தத்தில் க(பு)ரர் என்னும் நிச்சயமற்ற தன்மை உண்டாகிறது.

 

ஆகவே, தற்போது நடைமுறையில் உள்ள (அத்-தஃமீன் அத்தக்லீதீ) பாரம்பரிய காப்புறுதி முறை முஆவழா (பரிமாற்ற) உடன்படிக்கையாக இருப்பதனால், மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட மேற்கூறப்பட்ட விடயங்கள் நிகழ்வதன் காரணமாக இம்முறை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

 

எனவே, நடைமுறையில் உள்ள பாரம்பரிய காப்புறுதி முறை தடுக்கப்பட்டதனால், தற்காலத்தில் வியாபாரக் கொடுக்கல் வாங்கலின் போதும், ஏற்றுமதி இறக்குமதியின் போதும், கட்டிட நிர்மானப் பணிகளின் போதும், வாகனப் போக்குவரத்து போன்ற சந்தர்ப்பங்களில் காப்புறுதி செய்வது அத்தியவசியமாக இருப்பதனால், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விடயங்கள் இடம்பெறாத வேறு ஏதேனும் முறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டதனால், தற்கால மார்க்க அறிஞர்கள் அதற்காக இரு வகையான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

1. காப்புறுதி செய்யும் பொழுது (முஆவழா உடன்படிக்கைக்குப் பகரமாக) தபர்ருஃ எனும் நன்கொடை உடன்படிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்வதாகும்.

 

 • இதனடிப்படையில் சேர்க்கப்படும் பணம் ஒரு நிதியமாக ஆக்கப்படும். இந்த நிதியம் சட்ட ஆளுமை உள்ள ஒன்றாகும். சுயமாக கொடுக்கல் வாங்கல் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
 • அதில் ஒருவர் தாமாக விரும்பி இணையும் போது, குறிப்பிட்ட தவணையில் குறிப்பிட்ட தொகையை இந்நிதியத்திற்கு தர்மம் செய்வதாக அவர் தனக்குக் கட்டாயப்படுத்திக் கொள்ளல் நடைபெறுகின்றது.
 • அவ்வாறே அந்நிதியமும் தனது அங்கத்தவர்களுக்கு ஏதாவது ஓர் அபாயம் ஏற்படுமாயின் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாகக் கொடுப்பதாக தமக்குக் கட்டாயப்படுத்திக் கொள்ளல் நடைபெறுகின்றது.

இவ்வாறு தமக்கு ஒரு விடயத்தை கட்டாயப்படுத்திக் கொள்வதற்கு (அல்இல்திஸாம் பித்தபர்ருஃ) என்று கூறப்படும்.

 

இவ்வாறு தன்மீது கட்டாயப்படுத்திக்கொண்ட ஒரு விடயத்தை நிறைவேற்றுவது கட்டாயமானது, நிறைவேற்றாத போது வழக்குத் தொடர முடியும் என்ற மாலிகி மத்ஹப் அடிப்படையில் மேற்கூறப்பட்ட முறை அமைக்கப்பட்டதாகும்.

 

எனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு மத்ஹப்களில் ஒன்றான மாலிகி மத்ஹபின் அடிப்படையில் இந்த நன்கொடை ஒப்பந்த முறை செயற்படுத்தப்படுகிறது.

 

அந்நிறுவனத்தை நடத்துபவர்கள் தமது செயற்பாட்டிற்குக் கூலியாக வகாளா பில் உஜ்ரா (கூலியை அடிப்படையாக வைத்துப் பொறுப்பேற்றல்) என்ற அடிப்படையில் பயன்பெற முடியும்.

 

மேலும், இந்த நன்கொடை ஒப்பந்த முறையில் கிடைக்கும் பணத்தொகையை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறைகளில் முதலீடு செய்து இலாபமீட்டுவது அவர்களின் பொறுப்பாகும்.

 

இம்முறையை இஸ்லாமிய வங்கியியலில் தேர்ச்சிபெற்ற ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த  அறிஞர்களில், அஷ்ஷைக் வஹ்பா அஸ்ஸுஹைலீ, அஷ்ஷைக் அப்துஸ் ஸத்தார் அபூ கு(G)த்தா றஹ்மத்துல்லாஹி அலைஹிமா மற்றும் தற்கால அறிஞர்களான அஷ்ஷைக் அலீ முஹ்யித்தீன் கர்ரா தா(பG)ஈ, அஷ்ஷைக் நிழாம் முஹம்மத் ஸாலிஹ் யஃகூபீ ஹபிழஹுமுல்லாஹ் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும், தற்காலத்தில் உள்ள நான்கு மத்ஹப்களையும் சார்ந்த முக்கிய அறிஞர்களில் பலர் அங்கம் வகிக்கும் “இஸ்லாமிய நிறுவனங்களுக்கான கணக்கியல் மற்றும் தணிக்கை அமைப்பு” (AAOIFI) இலும் இந்த முறையை ஏற்று அவர்களுடைய ஷரீஆ வழிகாட்டலில் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

المعيار الشرعي رقم 26 – "التأمين الإسلامي"  (المعايير الشرعية النص الكامل للمعايير الشرعية التي تم اعتمادها حتى صفر 1439 هـ نوفمبر 2017 م)

 

 1. காப்புறுதி செய்யும் பொழுது (முஆவழா உடன்படிக்கைக்குப் பகராமாக) வக்ப் முறையில் உடன்படிக்கை செய்து கொள்வதாகும்.

 

இம்முறையில் காப்பீடு செய்வதாயின் ஏதேனும் ஒரு பொருளை வக்ப் செய்ய வேண்டும். அது அசையாச் சொத்தாக அல்லது அசையும் சொத்தாக இருக்கலாம்.

 

பணத்தை வக்ப் செய்யும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் இரு கருத்துக்கள் உள்ளன. ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் ஆகுமென்றும், ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்தவர்கள் அது நிலைத்திருக்காதது என்பதால் பணத்தை வக்ப் செய்வது செல்லுபடியாகாது என்றும் கூறியள்ளனர்.

 

 • வக்ப் செய்யப்படும் பொருள் அல்லாஹ்வுக்கு சொந்தமாகி விடுகிறது. ஆகவே, மனிதர்களில் எவரும் அதில் உரிமை கொண்டாட முடியாது.
 • வக்புக்கு, வாங்கும் விற்கும் உரிமையை மார்க்கம் வழங்கியுள்ளது. எப்பொருளையும் வாங்குவதற்கும் நன்கொடையாகப் பெறுவதற்கும் வக்புக்கு உரிமையுள்ளது. அவ்வாறு கிடைப்பவைகள் அனைத்தும் வக்புக்குச் சொந்தமானவையாகும்.
 • வக்ப் செய்பவர் வக்ப் செய்யும் போது விதிக்கக்கூடிய நிபந்தனைகள் அனைத்தையும் எவ்வித மாற்றமுமின்றி நிறைவேற்றுவது கட்டாயமாகும். எனவே, குறிப்பிட்ட தவணையில் குறிப்பிட்ட தொகையை இவ்வக்புக்கு அன்பளிப்புச் செய்பவர்களுக்கு, தேவை ஏற்படும் போது பொருத்தமான ஒரு தொகையை அன்பளிப்புச் செய்ய வேண்டுமென வக்ப் செய்பவர், வக்ப் செய்யும் போது நிபந்தனையிட வேண்டும். அந்நிபந்தனை அவ்வாறே பூர்த்தி செய்யப்படுவது கட்டாயமாகி விடுகிறது.
 • வக்பை பராமரிப்பவர் அதற்குரிய கூலியை தகுந்த அளவில் எடுத்துக் கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

 

வக்புக்கு கிடைக்கும் நன்கொடைப் பணத்தை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் முதலீடு செய்து இலாபமீட்டி, அதனை வக்ப் செய்தவரின் நிபந்தனைப்படி தேவையுடையோருக்குக் கொடுக்க வேண்டும்.

 

இம்முறையை இஸ்லாமிய வங்கியியலில் தேர்ச்சி பெற்ற ஹனபீ மத்ஹபைச் சேர்ந்த தற்கால பிரபல்யமான அறிஞர்களில் ஒருவரான மௌலானா முஹம்மத் தகீ உஸ்மானீ ஹபிழஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

تأصيل التأمين التكافلي على اساس الوقف والحاجة الداعية اليه – القاضي تقي العثماني

 

மேற்கூறப்பட்ட இரு முறைகளையும் தற்காலத்து பிரபல்யமான அறிஞர்களில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த அல்-ஆலிம் காலித் ஸைபுல்லாஹ் றஹ்மானி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

المؤسسات المالية الحديثة في ضوء الفقه اللإسلامي : 110, 111, 112

பொதுவாக ஒருவர் ஒரு நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் பொழுது அல்லது முதலீடு செய்யும் பொழுது அந்த நிறுவனம் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுள்ளதா என்பதையும் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் அது மார்க்க அடிப்படையில் சரியான முறையில் நடைபெறுகின்றதா என்பதையும் கவனத்திற் கொள்வது அவரது பொறுப்பாகும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - பத்வா பிரிவு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

  

அஷ்-ஷைக் ஏ. ஜே. அப்துல் ஹாலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா