மஸ்ஜித்களில் நடைபெறும் தொழுகைகள் உபதேசங்கள் மற்றும் குத்பாக்கள் போன்றவற்றை பதிவு நாடா (video) மூலம் பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் சம்பந்தமாக.


 

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு 

மஸ்ஜித்களில் நடைபெறும் தொழுகைகள் உபதேசங்கள் மற்றும் குத்பாக்கள் போன்றவற்றை பதிவு நாடா (video) மூலம் பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் சம்பந்தமாக.

மேற்படி விடயம் சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மஸ்ஜித் என்பது ஒரு புனிதமான இடமாகும். அது அல்லாஹ்வை ஞாபகம் செய்வதற்கும், அவனை வணங்குவதற்கும் உரிய இடமாகும். மஸ்ஜிதின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிப்பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

வீடியோ எடுக்கும் விடயத்தில் தற்கால மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்வாறு கருத்து வேறுபாடு நிலவுவதற்கான காரணம் உருவங்கள் வரைவது, காட்சிப்படுத்துவது, சேமித்து வைப்பது சம்பந்தமாக மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ள பொதுவான தடைகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் என்பனவாகும்.

வீடியோ எடுப்பது கூடாது என்று கூறும் மார்க்க அறிஞர்கள், வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு அதனைத் திரையில் பார்க்கும் பொழுது, அது உருவமாகவே காட்சியளிக்கின்றது என்றும், வீடியோ எடுப்பது ஆகும் என்று கூறும் மார்க்க அறிஞர்கள், அது ஓரு நிலையற்ற அசையும் சலனப்படமாக இருப்பதால், இது உருவங்கள் பற்றி வந்துள்ள ஹதீஸ்களுக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் கூறுகின்றனர்.

என்றாலும், நேரத்தை வீணாக்கும் பயனற்ற வீடியோக்கள் எடுப்பதும் மற்றும் ஆண் பெண் கலப்புள்ள வீடியோக்கள் எடுப்பதும் கூடாது என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.

மஸ்ஜித்களில் நடைபெறும் உபதேசங்கள், குத்பாக்கள் மற்றும் தொழுகைகள் போன்றவற்றை பதிவு நாடா கருவி மூலம் பதிவு (video) செய்வதாலும், அதைப் புகைப்படம் எடுப்பதாலும் மஸ்ஜித்களின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படக் காரணமாக அமைந்து விடும். மேலும், வீடியோ எடுக்கும் நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் மஸ்ஜிதின் புனித்துவத்தை பாதுகாக்க முடியாமற் போகும்.

குறிப்பாக பிரபல்யமான காரிகளின் தொழுகைகளை பதிவு நாடா கருவிகளில் பதிவு (video) செய்வது தொழக்கூடியவர்களின் கவனத்தை தொழுகையை விட்டும் திசை திருப்பக் காரணமாக அமைந்து விடும்.

தொழும்பொழுது உள்ளச்சத்தை நீக்கக்கூடியவைகள் இருப்பதை மார்க்க அறிஞர்கள் வெறுத்துள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்: 

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலங்கார வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடிந்ததும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் அலங்கார வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்து விட்டன. எனவே இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொடுத்து விட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண் - 556)

மேலும், பிரபல்யமான மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும், காரிகளின் ஓதல்களும் ஒலி நாடா (audio) பதிவு நாடா (video) க்களில் பதிவு செய்யப்பட்டு இணைய வலைத்தளங்களிலும் இருவட்டுகளிலும் தாரளமாக கிடைக்கப்பெறுகின்றன. அவர்களின் உபதேசங்களையும் ஓதல்களையும் புதிதாக மஸ்ஜித்களில் பதிவு செய்து மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனவே, மஸ்ஜித்களில் நடைபெறும் பொது நிகழ்வுகளைப் பதிவு நாடாக் கருவி மூலம் பதிவு (video) செய்வதையும், அவற்றைப் புகைப்படம் எடுப்பதையும் தவிர்ந்து கொள்வது மஸ்ஜிதின் கண்ணியத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

என்றாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக மஸ்ஜித்களில் பதிவு நாடாக் கருவி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் அதனைப் பதிவு செய்யலாம்.

அவ்வாறு மஸ்ஜிதில் நடைபெறும் சொற்பொழிவுகள், கிராஅத்கள் மூலம் ஏனைய மக்களும் பயன்பெறவேண்டும் எனக்கருதினால் ஒலி நாடா (audio)  வில் பதிவு செய்யலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு