அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் அர்த்தமுடைய வசனங்கள், கவிதைகள் ஆகியவற்றை மொழிவது, இறை நேசர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்து அற்புதம் நிகழ்த்துவது என்பன பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும் நோக்கில் தங்களால் எமக்கு அனுப்பப்பட்ட திகதியிடப்படாத கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஈமான் என்பது ஒருவருக்கு கிடைக்கும் மிகப் பெரும் பாக்கியமாகும். சரியான இறை நம்பிக்கையே ஈருலக வெற்றிக்கான அடிப்படையாகும். அந்த ஈமானிற்கு சொல், செயல், எண்ணங்கள் போன்றவற்றால் பாதகம் ஏற்படாமல் அதனைப் பாதுகாத்துக் கொள்வதில் ஒரு இறை விசுவாசி மிகவும் கவனமெடுத்து நடந்துகொள்வது அவசியம்.

சில குறிப்பிட்ட செயல்கள், எண்ணங்கள் மூலமாக ஈமான்  பாழாகி விடுவதைப் போல சில பேச்சுக்கள், வார்த்தைகள் ஆகியன மூலமும் பாழாகிவிட வாய்ப்பு உண்டு. இதனடிப்படையில் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் அர்த்தம்கொண்ட வசனங்களை, அவை எவ்வகையாயிருப்பினும் சரியே அதே அர்த்தத்துடன் அதை விளங்கி சுய நினைவுடன் நிர்ப்பந்தம் அற்ற நிலையில் மொழிவது ஈமானை இல்லாதொழிக்கும் விடயமாகும்.

மேலும் மரணித்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது இறை நேசர்களுக்கு அற்புதங்கள் நிகழும் அடிப்படையில் வல்ல அல்லாஹ்வின் உத்தரவின்படி நடக்க வாய்ப்பு உண்டு.  மாறாக மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி இயல்பாகவும், பொதுவாகவும் ஒரு மனிதருக்கு உண்டு என்று நம்புவதும், சில இறை நேசர்கள் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி அவனில் இரண்டறக் கலந்து அவனுக்கே உரிய சக்திகளை, வல்லமைகளை தமக்கும் இயல்பாகவே பெற்றுக்கொள்கின்றார்கள் என்று நம்புவதும் ஈமானை பாதிக்கும் மிக மோசமான  அம்சங்களாகும்.

வல்ல அல்லாஹ்; நம் அனைவரின் ஈமானையும் பாதுகாத்தருள்வானாக!

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.