Subject : புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு

FATWA # 023/ACJU/F/2006

ஆக 03, 2021

வெளியிடப்பட்ட

ஹலால் மற்றும் ஹராம்

புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

புகையிலை உபயோகத்தின் மூலம் ஏற்படும் விபரீதங்கள் பற்றி ஆய்வு ரீதியிலான தீர்க்கமான ஒரு முடிவு கண்ணியமிக்க இமாம்கள் வாழ்ந்த காலப்பகுதியில் காணப்படாமையினால் புகைத்தல் பற்றிய தீர்க்கமான ஒரு மார்க்கத் தீர்ப்பை அவர்கள் கூறாது பெரும்பாலும் அது 'மக்ரூஹ்' என்று தீர்ப்பளிப்பதுடன் நிறுத்திக்கொண்டனர்.

எனினும், நவீன கால விஞ்ஞான, அறிவியல் ஆய்வுகள் மூலம் சிகரட் போன்ற புகைப் பொருட்களின் மூலப் பொருளான புகையிலையில் 3800 க்கும் மேற்பட்ட இரசாயணப் பொருட்கள் உள்ளனவென்றும், அவற்றில் சிகரட் உற்பத்தியின் போது அதிகமானவை நீக்கப்படுகின்றனவாயினும் அதில் தொடர்ந்தும் Nicotine 40.1%, Carbohydrade 20.2%, Protein 13.1%, Organic acid 17.5%, Volatile oils 1.5% போன்றவையும், Pyrolidine, Mathyl Pyrotine போன்ற மிகக் கடுமையான நச்சுத் தன்மையும்,  Tar, Carbon Monoxide, Arsenic, Butane போன்ற நச்சுப் பதார்த்தங்களும் புகையிலையில் இருக்கவே செய்கின்றன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 1mg Nicotine ஐ ஒருவர் உள்ளெடுப்பதுவே அவரைக் கொலை செய்வதற்குப் போதுமானதாகும். அத்துடன் மேற்படி புகைத்தலினால்

 • புற்றுநோய்கள் ஏற்படல்,
 • ஈரல் பாதிக்கப்படல்,
 • அதிக கர்ப்பிணிகளின் கருச்சிதைவுகள் ஏற்படல்,
 • சுவாசப்பைக் குழாயழற்சி ஏற்படல்,
 • இருதய நோய் ஏற்படல்,
 • இரத்தக் குழாய்களில் குருதி உறைதல்,
 • மூத்திரப்பை வீக்கம் ஏற்படல்,
 • மாரடைப்பு ஏற்படல்,
 • ஆண்மைக் குறைவு ஏற்படல்,
 • குருதிக் குழாய்கள் சிதைவடைதலும், சுருங்களும்,
 • உயர் குருதி அழுத்தம் (High blood preasure) ஏற்படல்,
 • பணம் வீணாகச் செலவிடப்படல்,
 • வாய் நாற்றமேற்படுதல் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல்.

போன்ற தீமைகளையும், விபரீதங்களையும் உருவாக்கக்கூடிய விடயங்களை பின்வரும் அல்-குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் கடுமையாகத் தடைசெய்துள்ளன. இவை போன்ற இன்னும் பல கெடுதிகள் இனங்காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 • 'நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்' (அந்-நிஸாஃ : 29)
 • 'உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்  (அல்-பகரா : 195)
 • 'வீணாகப் பொருட்களை விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷத்தானின் சகோதரர்களாவர்'  (பனீ இஸ்ராயீல் : 27)
 • 'மனிதர்கள் துன்புறும் சகலவற்றிலிருந்தும் வானவர்களும் துன்பமடைகின்றனர்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.   (சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்)
 • 'மயக்கத்தை உண்டாக்கக்கூடியவற்றையும், சடைவை ஏற்படுத்தக்கூடியவற்றையும் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  (அபூ தாவூத்)

 

மேற் கூறப்பட்ட அல்-குர்ஆன் வசனங்களினதும், ஹதீஸகளினதும் ஒளியில் 'புகைத்தல் ஹராமானதாகும்' என்ற தீர்ப்பை மக்கா, மதீனா, எகிப்து, துருக்கி, யெமன், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல மார்க்க அறிஞர்கள் வழங்கியுள்ளனர்.   (அல்-ஃபவாக்கிஹுல் அதீதஹ் : பாகம் : 02, பக்கம் : 80-88)

'நஞ்சு, கண்ணாடி, கல் போன்ற தீங்கு செய்யும் பொருட்களைச் சாப்பிடுவது ஹராமாகும்' என்று இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  (ரவ்ழதுத் தாலிபீன் : பாகம் : 02, பக்கம் : 458)

நஞ்சு, கண்ணாடி, கல் போன்றவற்றை உட்கொள்வதால் ஏற்படும் தீங்குகளை விடவும் மோசமான தீங்குகளும், இழப்புக்களும் புகைத்தலினால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், புகைத்தல், புகைப் பொருள் விற்பனை செய்தல் ஆகியனவும் ஹராமாகும் என்பதை இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது மேற்படி கருத்து உறுதி செய்வதாக மற்றும் சில ஆலிம்கள் குறிப்பிட்டுள்ளனர்.                                

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ்