கொடும்பாவி எரித்தல் சம்பந்தமாக வினவி தங்களால் அனுப்பப்பட்ட 2004.05.22 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவரது மாதிரி உருவத்தை பிடவைகள், கடதாசிகள் போன்றவற்றால் செய்யப்படுவதை கொடும்பாவி எனப்படும். இவ்வாறு உயிருள்ளவற்றின் உருவங்களை கடதாசிகளில் வரைவதையோ, கற்களில் செதுக்குவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:

'நான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களது சமூகத்தில் இருந்த வேளை, ஒருவர் வந்து தான் உருவப் படங்ளைச் செய்து உழைப்பதாக சொன்னார். அப்பொழுது இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு விடயத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கூறிவிட்டு, நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு சொன்னதை நான் செவியுற்றிருக்கின்றேன்: 'யார் உருவத்தை வரைகின்றாரோ, அவர் அவ்வுருவத்துக்கு உயிர் கொடுக்கும்  வரை அவரை அல்லாஹ் வேதனை செய்வான்.  அதற்கு அவரால் ஒரு போதும் உயிர் கொடுக்கமுடியாது' என்று சொன்னார்கள். இச் செய்தி கேட்டதும் அம்மனிதர் திகைத்து, முகம் மஞ்சனித்துப் போனார். அதைக் கண்ணுற்ற இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், உங்களுக்கு கேடு உண்டாகட்டும். நீங்கள் இதனை மறுத்தால், இதோ இருக்கக்கூடிய மரங்களை வரையுங்கள் என்று அம்மனிதனுக்குச் சொன்னார்கள்' என்று ஸஈத் இப்னு அபில் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (சஹீஹுல் புகாரி, ஹதீஸ் எண் : 2225)

'உயிருள்ள விலங்குகளின் உருவங்களை வரைவது கடுமையாகத் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். அது ஒரு பெரும் பாவமுமாகும். அதனைச் செய்பவர் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கைக்குரியவராவார். அவர் அவ்வுருவத்தை சங்கைப்படுத்தினாலும், சங்கைப்படுத்தாவிட்டாலும் ஹராமாகும். அவ்வுருவங்களை புடவை, விரிப்பு, திர்ஹம், தீனார் (முற்கால நாணயங்களைக் குறிக்கும்), பாத்திரங்கள், சுவர்கள்; போன்ற எவற்றில் வரைந்தாலும் அது ஹராமாகும். எனினும் மரங்கள் போன்ற உயிரற்றவைகளை வரைவது குற்றமாகாது' என்று இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேற்படி ஹதீஸுக்கு விரிவுரை செய்துள்ளார்கள்.

கொடும்பாவி எரிக்கும் சமயம் ஒருவருடைய உருவம் நெருப்பினால் தண்டிக்கப்படுகின்றது. அத்துடன் கொடும்பாவி எரிப்பதன் அர்த்தம் அக்கொடும்பாவி மூலம் நாடப்படுபவர் கையில் அகப்பட்டால் அவரைத் தீயிட்டுக் கொழுத்துவோம் என்பதாம். இவ்வாறு எதனையும் நெருப்பினால்; தண்டிக்கக்கூடிய அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. அது ஒரு மாதிரி உருவமாயினும் அதனையும் எரிக்கும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துவதாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

'ஒரு படையில் எம்மை அனுப்பும் போது (குரைஷிகளான) இருவருடைய பெயர்களைச் சுட்டிக்காட்டி அவ்விருவரையும் பிடித்து எரித்துவிடுமாறு நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். நாம் அவ்விருவரையும் பிடித்து எரிப்பதற்காக வெளியிறங்கிய போது, (மீண்டும்) எம்மை அழைத்;து நான் அவ்விருவரையும் எரித்துவிடுமாறு உங்களை ஏவினேன். எனினும் நெருப்பினால் தண்டிக்கக்கூடிய அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ளதாகும். நீங்கள் அவ்விருவரையும் பிடித்தால் கொலை செய்துவிடுங்கள்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதாக அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (சஹீஹுல் புகாரி : ஹதீஸ் எண் : 3016)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.