ஜனாஸாவை சுமந்து செல்லும் போது சப்தமிட்டு திக்ரு செய்தல்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மேற்படி விடயமாக 2011-10-13 அன்று கூடிய ஃபத்வாக் குழு நீண்ட ஆலோசனைகளின் பின்னர் பின்வரும் விடயங்களை முடிவு செய்தது.

அவையாவன:

அல்லாஹ்வை திக்ர் செய்வது என்பது எல்லா நேரங்களிலும் வேண்டப்பட்ட ஒரு விடயமாகும். இதனையே அல்குர்ஆனும் அல் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.

எனினும், அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும் மரணத்தை ஞாபகம் செய்வதற்கும் இந்த இடம் மிகப்பொருத்தமான இடமாக இருப்பதால் இவ்விடத்தில் அவற்றைச் செய்வது மிகவும் பொருத்தமானதாகும். எனவே, பின்வரும் சில விடயங்களை கவனத்தில் கொள்வதும் இன்னும் சில விடயங்களை தவிர்த்துக் கொள்வதும் அவசியமாகும்.

  1.  ஜனாஸாவைச் சுமந்து செல்லும் போதும் அதனைப் பின்தொடர்ந்து செல்லும் போதும் திக்ர் செய்வதற்கு குறிப்பான ஒரு ஓதல் நபி வழியில் காணப்படவில்லை.
  2.  ஜனாஸாவை பின்தொடரும் போது கூட்டாகவோ தனித்தோ சப்தமிட்டு திக்ர் செய்வது வெறுக்கத்தக்க (மக்ரூஹான) விடயமாகும்.
  3.  இவ்வாறே சிலர் சொல்லிக் கொடுக்க ஏனையவர்கள் சொல்வதும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  4. வீணான, தேவையற்ற பேச்சுக்கள் போன்றவற்றைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தனக்கு மாத்திரம் கேட்கும் விதத்தில் திக்ருடனும் மரண சிந்தனையுடனும் செல்வதே சாலச்சிறந்ததாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.