மையவாடியில் உபதேசம் செய்வதற்கு தகுதியானவர் யார் என்பது பற்றி ஃபத்வாக் கோரி 05.04.2014 ஆந் திகதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒரு மையித்திற்கு செய்ய வேண்டிய கடமைகளாகிய குளிப்பாட்டுதல், கபன் செய்தல், தொழுவித்தல், அடக்கம் செய்தல் போன்றவை முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். அதாவது, அக்கடமைகளை அவ்வூரிலுள்ள மக்கள் யாரும் நிறைவேற்றாவிட்டால் எல்லோரும் பாவியாகிவிடுவார்கள். யாராவது அக்கடமைகளை நிறைவேற்றிவிட்டால் மற்றவர்களின் பொறுப்பு நீங்கிவிடும்.

மையித்தைக் குளிப்பாட்டுவது, தொழுவிப்பது போன்ற மையித்துக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதற்கு தந்தை அல்லது பாட்டன் அல்லது மகன் அல்லது பேரப்பிள்ளை அல்லது சகோதரன் போன்ற நெருங்கிய குடும்பத்தினர்களே மிகத் தகுதியானவர்கள். அவர்கள் விரும்பின் வேறு எவரையும் அக்கருமங்களை நிறைவேற்ற பொறுப்புச் சாட்டலாம்.

மையவாடியில் மைய்யித்தை அடக்கம் செய்யும் வரை அல்லது அடக்கம் செய்த பின்பு அங்குள்ளவர்களுக்கு மௌத்தைப் பற்றி ஞாபகமூட்டி உபதேசமொன்றை செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அது ஒரு ஆகுமான காரியமாகும்.

ஏனென்றால், மையவாடியில் உபதேசம் செய்வது மரணத்தைப் பற்றிய எண்ணத்தை மக்களுக்கு நினைவூட்ட நல்லதொரு சந்தர்ப்பமாகும். சந்தர்ப்பம் பார்த்து மக்களுக்கு உபதேசம் செய்வது நபியவர்களின் வழமையாகும்.

என்றாலும், ஐனாஸாவை அடக்கம் செய்யும் வரை அல்லது அடக்கம் செய்ததன் பின்பு மையவாடியில் உபதேசம் செய்வதை வழமையான ஒரு சுன்னத் என்று கருதக் கூடாது. ஏனெனில், நபியவர்கள் சில சந்தர்ப்பங்களிலேதான் இவ்வாறு மையவாடியில் உபதேசம் செய்துள்ளார்கள் என ஹதீஸ்களில் வந்துள்ளது.

நிகழ்த்தப்படும் உபதேசத்தை மஸ்ஜிதின் இமாம் அல்லது மைய்யித்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பேணுதல், அல்லாஹ்வின் இறையச்சம், இஃக்லாஸ் உள்ள யாராவது ஒருவர் அதை நிகழ்த்தலாம். 

மையவாடியில் உபதேசம் செய்வதற்கு கருத்து வேறுபாடின்றி சுமுகமாக ஒருவர் வேண்டிக்கொள்ளப்பட்டால் அது வரவேற்கத்தக்கது. யாரை நியமிப்பது என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சமூக ஒற்றுமையைப் பாதிக்குமென்றால் அதை நிகழ்த்தாமல் இருப்பதே நல்லது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு