எமது ஜமாஅத்தைச் சேர்ந்த மையவாடி வளவினுள் மரங்கள் வைக்க உத்தேசித்துள்ளோம். இம்மரங்களில் இருந்து பறிக்கும் வஸ்துக்களை சாப்பிடுவது கூடுமா? கூடாதா? விளக்கத்தைத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மையவாடி என்பது மக்கள் மறுமை வாழ்வின் சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ளவும், அல்லாஹ்வின் அச்சத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் உள்ள ஒரு இடமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மையவாடியைத் தரிசியுங்கள் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் ' என்று கூறியுள்ளார்கள்.

மேலும், இது ஒரு பொதுச் சொத்து என்பதனால் அதனைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஊர் மக்களினதும், குறிப்பாக மஸ்ஜித் நிர்வாகத்தினதும் கடமையாகும்.

மையவாடிக்கு வக்ப் செய்யப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட காணியை, பழங்கள் அல்லது காய்கறிகளுக்காக மரங்களை நட்டி, வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் இல்லை. ஏனெனில், மையவாடியை அடக்கம் செய்வதற்கல்லாமல், வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது கூடாது.

இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைத்தமி றஹிமஹுல்லாஹ் தனது 'துஹ்பத்துல் முஹ்தாஜ்' எனும் கிரந்தத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

وَلَا يَجُوزُ زَرْعُ شَيْءٍ مِنْ الْمُسَبَّلَةِ وَإِنْ تَيَقَّنَ بِلَى مَنْ بِهَا لِأَنَّهُ لَا يَجُوزُ الِانْتِفَاعُ بِهَا بِغَيْرِ الدَّفْنِ فَيُقْلَعُ وَقَوْلُ الْمُتَوَلِّي يَجُوزُ بَعْدَ الْبِلَى مَحْمُولٌ عَلَى الْمَمْلُوكَةِ ( تحفة  المحتاج / فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ من كتاب الجنائز)

(فِي مَقْبَرَةٍ مُسَبَّلَةٍ) وَهِيَ مَا اعْتَادَ أَهْلُ الْبَلَدِ الدَّفْنَ فِيهَا عُرِفَ أَصْلُهَا وَمُسَبِّلُهَا أَمْ لَا وَمِثْلُهَا بِالْأَوْلَى مَوْقُوفَةٌ ( تحفة المحتاج / فَصْلٌ فِي الدَّفْنِ وَمَا يَتْبَعُهُ من كتاب الجنائز)

'வக்ப் செய்யப்பட்ட அல்லது மைய்யித்தை அடக்குவதற்கென வழமையாக்கிக் கொண்ட காணியில் (மரங்கள் அல்லது பயிர்கள்) எதையும் நட்டுவது கூடாது. அதில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இத்துப் போய்விட்டார்கள் என்று உறுதியாகத் தெரிந்தாலும் சரியே.'

மேலும், இவ்வாறு மையவாடியில் மரங்கள் போன்றவற்றை நடுவதால் பின்வரும் விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  1. மரங்கள் பெருத்து அவற்றின் வேர்கள், புதிதாகக் கப்றுகள் தோண்டப்படும் போது இடையூறாக இருக்கலாம்.
  2. பழங்கள் பறிக்கப்படும் பொழுது, கப்றுகள் மிதிக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படலாம்.
  3. அதிகமான மரங்களை நடுவதால், மையவாடி எனும் பெயரை இழந்து மரந்தோப்பாக மாறலாம்.

மையவாடிக்கென்று மக்கள் வழமையாக்கிக்கொண்ட காணியில், இதுவரை ஜனாஸாக்கள் அடக்கப்படாத, எதிர்காலத்திலும் தேவைப்படாத, ஊரின் தேவைக்கு மேலதிகமாக, குறிப்பிட்ட காணியில் போதியளவு இடம் இருப்பின், அதைத் தனியாகப் பிரித்து அதில் மரங்களை நட்டுவதற்காக ஒதுக்கிக்கொள்ளலாம். என்றாலும், குறிப்பிட்ட காணி மையவாடிக்கென்று வக்பு செய்யப்படாமல் இருப்பது நிபந்தனையாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை 'இரு கப்றுகளுக்கு அருகாமையில் நடந்து சென்ற சமயம், ஒருவர் புறம் பேசித் திரிந்தமையாலும், மற்றவர் சிறு நீர் விடயத்தில் பேணுதல் குறைவாக இருந்தமையாலும், கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறி, ஈச்ச மட்டையொன்றை எடுத்து அதை இரண்டாகக் கிழித்து அவ்விரு கப்ருகளிலும் நட்டினார்கள்' எனும் நிகழ்வு, கப்றுகளில் உள்ளவர்களின் நலனுக்காகவேயாகும். உயிருடன் இருப்பவர்களின் நலனுக்காக அம்மரக் கொப்புகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மையவாடியில் முளைக்கும் மரங்களின் பழங்களை ஊர்மக்கள் சாப்பிடுவதற்கு அனுமதி உள்ளது. என்றாலும், அவற்றை விற்று மையவாடியின் நலன்களுக்காகச் செலவளிப்பது சிறந்தது.

'فلو نبتت شجرة بمقبرة فثمرتها مباحة للناس تبعا للمقبرة وصرفها إلى مصالح المقبرة أولى من تبقيتها للناس' (مغنى المحتاج / كتاب الهبة) 

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.  

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு.