அலங்காரமுள்ள விரிப்புகளில் தொழுதல் சம்பந்தமாக பத்வாக் கோரி 2016.01.28 ஆந் திகதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகை, அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தும் ஓர் அமலாக இருப்பதால், அதை கடமை உணர்வுடனும், நன்மையை எதிர் பார்த்தும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையில் பயபக்தி மிக முக்கியமாகும். பயபக்தியற்ற தொழுகை குறைவுடைய தொழுகையாகும். தொழுகையில் உடல், உடை மற்றும் தொழும் இடம் ஆகிய அனைத்தும் தொழுகையை விட்டும் உள்ளத்தைத் திசைதிருப்பக் கூடியதாக இருக்கக்கூடாது. தொழுகையின் பொழுது பிற சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய, பார்வைகளைத் திருப்பக்கூடிய, கவனத்தை மாற்றக்கூடிய அனைத்து விடயங்களும் (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கவைகளாகும். 

உள்ளச்சத்துடன் தொழுவது பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

' وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ '    (سورة البقرة : 238)

அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (அல் பகரா : 238)

'قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ'                                    (سورة المؤمنون : 1.2)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.' (அல் முஃமினூன் : 1,2)

பின்வரும் ஹதீஸும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது.

عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلَامٌ، وَقَالَ: «شَغَلَتْنِي أَعْلَامُ هَذِهِ فَاذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ، وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةٍ» (صحيح مسلم - 556)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடிந்ததும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்து விட்டன. எனவே இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் கொடுத்து விட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். (நூல் : ஸஹீஹு முஸ்லிம், ஹதீஸ் என்- 556)

ஷாபிஈ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள். 

தொழுகையில் உள்ளச்சத்தை நீக்கக்கூடியவைகளின் மீதோ அல்லது உருவம் மற்றும் சிலுவைகள் வரையப்பட்டுள்ள துணிகளின் மீதோ, அவற்றை நோக்கியோ அல்லது அவற்றை அணிந்துகொண்டோ தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்க விடயமாகும். (அல்-மஜ்மூஃ)

ஹனபி, மாலிகி மற்றும் ஹன்பலி மத்ஹப்களைச் சார்ந்த அறிஞர்களின் கருத்துக்களும் இதுவேயாகும். என்றாலும் ஹன்பலி மத்ஹபின் இன்னுமொரு கருத்தின்படி இவ்வாறு தொழுவது ஹராமாகும்.

ஆகவே, மஸ்ஜிதின் சுவர்கள், தூண்கள் மற்றும் விரிப்புகள் போன்றவற்றை தொழக்கூடியவர்களின் உள்ளச்சத்தை நீக்கக்கூடிய, அலங்காரங்கள் மற்றும் வரையப்பட்ட படங்களை விட்டும் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் உங்களது கடிதத்தில்; தொழுகைக்காக விரிக்கப்படவுள்ள விரிப்பில் அலங்காரங்கள் இருப்பதால் அதில் தொழுவதற்கு அனுமதியுள்ளதா என்பதை நேரடியாக பார்வையிட்டு அதுபற்றி முடிவெடுக்குமாறு கேட்டிருந்தீர்கள். இந்த வேண்டுகோளுக்கேற்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுவில் சிலர் தங்களது மஸ்ஜிதுக்கு நேரடியாக வந்து பார்வையிட்டதன் பின் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வரும் மார்க்கத் தீர்ப்பை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

உங்களது மஸ்ஜிதில் தொழுகைக்காக விரிக்கப்படவுள்ள விரிப்பில் இருக்கும் அலங்கார வேலைப்பாடுகள் தொழுகையாளிகளின் கவனத்தை தொழுகையை விட்டும் திருப்பக்கூடியதாக இருக்கின்றது என்பதனால் அதில் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கதாகும்.

பொதுவாக மஸ்ஜித்களில் தொழுகைக்காக விரிக்கப்படும் விரிப்புகளில் அலங்கார வேலைப்பாடுகள் உள்ள விரிப்புகளைத் தவிர்த்து, அலங்காரமற்ற விரிப்புகளைத் தெரிவு செய்து கொள்வது தொழுகையை உள்ளச்சத்துடன் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு