பள்ளிவாசல்களில் ஏலம் விடப்படும் பொருட்களை விலைக்கு வாங்கி உபயோகிக்கலாமா?  

ஒரு பொருளை ஏலம் முறையில் விற்பனை செய்வது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட முறைமைகளில் ஒன்றாகும். இதற்கு கீழ்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரிப்பொன்றையும் பாத்திரம் ஒன்றையும் விற்பதற்காக, இவற்றை யார் வாங்குவது என்று கேட்டார்கள். அதற்கு ஒரு மனிதர், நான் அவற்றை ஒரு திர்ஹத்திற்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் ஒரு திர்ஹத்தை விட அதிகமாக யார் எடுப்பது என்று கேட்டார்கள். இன்னுமொரு மனிதர் நான் இரண்டு திர்ஹங்களுக்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவருக்கு அவ்விரண்டையும் விற்றார்கள்.' (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல் : திர்மிதி)

மஸ்ஜிதுக்காக வக்ப் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடாது. என்றாலும், இத்துப்போன பாய்போன்ற, பாவனைக்கு உதவாத வக்ப் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஸதகாவின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களாக இருந்தால் அவற்றை விற்பனை செய்யலாம். அதன் வருமானத்தை மீண்டும் மஸ்ஜிதின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.

ஏலம் செய்யும் பொழுது மஸ்ஜிதிற்குள் இல்லாமல், அதன் வெளி வளாகத்தில் அல்லது வேறு இடத்தில் வைத்துக்ககொள்ளல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.