மேற்படி நான் அநுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான முகிரியாவ எனும் கிராமத்தில் நிரந்தர வதிவிடமுடைய ஓர் இளைஞன். என்னை அன்மித்த சுமார் 10 கிராமங்கள் மிகவும் பி;ன்னடைவிலேயே காணப்படுகின்றன. நகரத்துக்கும் எமக்கும் சுமார் 15 தொடக்கம் 20 கிலோ மீட்டர் தூரம் காணப்படுகின்றது.

இக்கிராமங்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளிலே வேலை பார்க்கின்றனர். ஆனாலும் எந்த வளர்ச்சியையும் நாம் இதுவரைக்கும் காணவில்லை. என்ன காரணம் என நாம் மேற்கொண்ட ஆய்வின் போது எமது வருமானத்தை விட செலவே அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு சரியான வீதிகள், வங்கி, வைத்தியசாலை, தொலைத்தொடர்பு போன்றவைகள் காணப்படாமைதான் காரணம் என கண்டறிந்தோம்.

உதாரணமாக வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தைப் பெற்றுவர சுமார் 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இச்செலவைக் குறைக்க அரச அல்லது தனியார் வங்கி ஒன்றினை எமது கிராமத்தில் அமைக்க முடிவு செய்துள்ளோம். எனவே மார்க்க அறிஞர்களாகிய தங்களுடைய ஆலோசனையையும் வேண்டி நிற்கின்றோம்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்று வங்கியுடன் தொடர்புகளுடனேயே வாழ்ந்து வருகின்றோம். இதற்காக நான் தனிப்படட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன். உண்மையிலேயே இது மக்களின் தேவைகளை இழகுபடுத்துவதற்காகவே மேற்கொள்கின்றேன். எனவே இதனை அமைப்பதனால் தனிப்பட்ட ரீதியில் எனக்கு பாவங்கள் வந்து சேருமா? என்ற கேள்வி என்னிடம் உள்ளது. தயவுசெய்து இதற்கான ஆலோசனைகளை பெற்றுத்தருமாறு தாங்களிடம் மிகப்பணிவாய் வேண்டி நிற்கின்றேன்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:

வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே' எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான். (2:275)

விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள். (2:278, 279)

அவ்வாறே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் பல்வேறு பொன்மொழிகள் வட்டியை ஹராம் என தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றன.

அழிவை உண்டாக்கும் ஏழை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறிய போது, அவை எவை என தோழர்கள் வினவினர். அதற்கு நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆண்மாவை உரிமையின்றி கொலை செய்தல், வட்டி உண்ணல், அநாதையின் சொத்தை உண்ணல், யுத்த தினத்தில் புறமுதுகுகாட்டி ஓடுதல், விசுவாசிகளான பத்தினிப் பெண்களை அவதூறு கூறல் என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்)

வட்டி 73 வாயல்களாகும். அவற்றில் மிக எளிதானது மனிதன் தன் தாயுடன் புணர்வதாகும்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: முஸ்தத்ரக்குல் ஹாக்கிம்)

வட்டிக்கொடுமை முன்னைய வேதங்களிலும் தடுக்கப்பட்டிருந்தமை நோக்கற்பாலது. இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு கூறுகின்றது:

வட்டியை விட்டு அவர்கள் (யூதர்கள்) தடுக்கப்பட்டிருந்தும் ... (4:161)

நன்மையான காரியங்களைப் புரிவோருக்கு நன்மைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றைச் செய்வதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் நன்மைகளை வாக்களிக்கின்றது. அது போலவே தீய காரியங்களைப் புரிவோருக்கு தண்டனைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றுக்குத் துணைபோவோருக்கும் தண்டனைகளை வாக்களிக்கின்றது. நன்மைக்குத் துணைபோவதும் நன்மையே. தீமைக்குத் துணைபோவதும் தீமையே.

மனிதனை அழித்துவிடும் மாபெரும் பாவங்களுள் ஒன்றான வட்டிக்கு வழங்கப்படும் தண்டனைகள் வட்டிசார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருடன் மாத்திரம் நின்று விடுவதில்லை. மாறாக அதனை எழுதுவோர், அதற்கு சாட்சிகளாக நிற்போர் போன்ற அனைவருக்கும் அத்தண்டனைகள் கிடைக்கவே செய்கின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகின்றது:

வட்டி உண்பவனையும், அதனை (பிறருக்கு) உண்ணக்கொடுப்பவனையும், அதனை எழுதுபவனையும், அதன் இரு சாட்சிகளையும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமம் எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: சஹீஹு முஸ்லிம்)

இவ்வடிப்படையில் வட்டியை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளை உருவாக்குவதற்காக, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியைத் தவிர்த்து, தகுந்த இஸ்லாமிய வங்கி முறைமைகளில் அனுபவமுள்ள மார்க்க அறிஞர்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய வங்கிகளை அல்லது பாரம்பரிய வங்கிகளின் இஸ்லாமிய வங்கிக் கிளையை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.