நானும் எனது கணவரும் விவாகம் செய்து சுமார் 18 வருடங்கள் வாழ்ந்தோம். எமக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக இருவரும் பேசி தீர்மானித்து கம்பளை காதி நீதவானிடம் சென்று விவாகரத்து செய்து கொண்டோம். எமது விவாகரத்து முபாராஹ் விவாகரத்து என்று கூறினார். அதாவது அது ஒரு முறை மாத்திரம் தலாக் கூறியதாக கணக்கெடுக்கப்படும் என்று கூறினார்.

நானும் எனது முன்னாள் கணவரும் மீண்டும் இணைவதாயின் மார்க்கச் சட்டம் என்ன என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். நாம் விவாகரத்து செய்து கொள்ளும் போது இத்தா சம்பந்தமான விளக்கம் ஒன்றை காதியாரிடம் பெற்றுக் கொண்டேன். அதன் பிரதியொன்றை இத்துடன் வைத்துள்ளேன். எனவே எனக்குரிய தீர்ப்பைத் தருமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

முத்தலாக் சொல்லப்பட்ட பெண் அதே கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடியாது. அவ்வாறு அவரை மீண்டும் திருமணம் முடிக்க விரும்பினால், அப்பெண் இன்னும் ஒருவரை திருமணம் செய்து தாம்பத்திய உறவு கொண்டதன் பின் விவாகரத்துப் பெற்று இத்தாவுடைய காலமும் முடிந்த பின்னர் தனது முன்னைய கணவனை மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஒரு தலாக் அல்லது இரண்டு தலாக் மட்டும் சொல்லப்பட்ட பெண்ணை அவளுடைய இத்தாவுடைய காலம் முடிவடைவதற்கு முன்னர் புதிய திருமண ஒப்பந்தம் எதுவுமின்றி அவளது கணவனுக்கு மீட்டியெடுக்கலாம்.

ஒரு தலாக் அல்லது இரண்டு தலாக் சொல்லப்பட்டு இத்தாவும் முடிவடைந்த பின்னர் அவளது கணவன் அவளை மீட்டெடுக்க விரும்பினால் வலீ, சாட்சி, மஹ்ர் மூலம் புதிதாக திருமணம் செய்து கொள்வது அவசியமாகும்.

பொதுவாக தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலம் என்பது மாதவிடாய் ஏற்படக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தால் மூன்று சுத்தங்கள் முடியும் வரையுள்ள காலமாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு துப்பரவு காலத்தின் இடையில் தலாக் சொல்லப்பட்டால், எஞ்சியுள்ள துப்பரவு காலத்துடன், அடுத்து வரும் இரண்டு துப்பரவு காலங்கள் நிறைவடைந்தவுடன் இத்தாவுடைய காலம் முடிந்து விடும். மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லப்பட்டிருந்தால் தொடர்ந்து வரும் மூன்று சுத்தங்கள் பூர்த்தியாக முடிந்ததும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும்.

வயதான ஒரு பெண் தனக்கு மாதவிடாய் ஏற்படாது என்று உறுதியாகத் தெரிந்தால் அவளது இத்தாவுடைய காலம் மூன்று சந்திர மாதங்களாகும்.

உங்களது வினாவில் நீங்களும் உங்களது கணவரும் பேசித் தீர்மானித்து, காழியிடம் முபாரஅஹ் முறையில் விவாகரத்துப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். முபாரஅஹ் என்பது கணவன் மனைவி இருவரும் சம்மதத்துடன் திருமண ஒப்பந்தத்தை தலாக் மூலம் முறித்துக்கொள்வதாகும்.

நீங்கள் மீண்டும் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால் உங்களது இத்தாவுடைய காலம் முடிவடைந்திருப்பின், புதிதாகத் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம். அவ்வாறு இத்தாவுடைய காலம் பூர்த்தி அடையாவிட்டால், உங்களை அவர் புதிதாகத் திருமணம் இன்றியே இத்தாவுடைய காலத்திற்குள் மீட்டெடுத்துக் கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடரலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.