பள்ளிவாசல் நிர்வாகக் குழு அங்கத்தவர் ஒருவர், பள்ளிவாசலில் கட்டப்படவிருந்த மலசலகூடத்துக்கு பொருத்துவதற்குத் தேவையான பொருட்களை நன்கொடையாக வழங்கினார். பின்பு ஏற்பட்ட சில பிணக்குகளின் காரணமாக அப்பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. மேலும், அப்பொருட்களை சில மாத காலம் பள்ளிவாசல் அறையில் வைத்திருந்தமைக்காக நன்கொடையாகக் கொடுத்தவரிடமிருந்து வாடகை அறவிடப்பட்டுள்ளது. எனவே, அப்பொருட்களை இன்னுமொரு மஸ்ஜிதுக்கு தேவைப்படும்போது கொடுக்கலாமா? அவ்வாறு கொடுப்பதாயின் நன்கொடையாகக் கொடுத்தவரின் அனுமதி அவசியமா? விளக்கம் தரவும்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் நன்கொடை நிய்யத்துடன் ஒரு பொருளை ஒரு மஸ்ஜிதுக்குக் கொடுத்து விட்டால் அது மஸ்ஜிதுக்கு சொந்தமாகி விடும். நன்கொடையாக கொடுத்தவர் கொடுக்கும்போது குறிப்பிட்ட ஒரு தேவையைக் கூறி, அத்தேவைக்கு இந்த நன்கொடைப் பொருள்களைப் 

பயன்படுத்த வேண்டும் என்று கூறினால், அவர் கூறியது போன்று நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது மஸ்ஜித் நிர்வாகிகளின் பொறுப்பாகும். 

மேலும், நன்கொடை கொடுப்பவர் ஒரு பொருளை நன்கொடையாகக் கொடுத்த பின்னர் மீண்டும் அதை மீளப் பெறுவது கூடாது. அவ்வாறு மீளப் பெறுவது 'நாய் எடுத்த வாந்தியை மீள உண்ணுவதைப் போன்றதாகும்' என்கிறது ஹதீஸ். (ஸஹீஹு முஸ்லிம்)

குறித்த நபர் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பொருளை, எத்தேவைக்காக வழங்கினாரோ குறித்த அந்தத் தேவைக்கு பயன்படுத்தாமல், காலம் தாமதித்துவிட்டு அவரிடமே கூலியைப் பெறுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத்திலும் அனுமதியில்லை. மாறாக இவ்விடயம் தர்மம் செய்தவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே கருதப்படும். எனவே, பெறப்பட்ட கூலியை அவரிடம் திருப்பிக் கொடுப்பதற்கு ஆவன செய்தல் வேண்டும்.

அவர் நன்கொடையாகக் கொடுத்த பொருளின் பயன்பாடு தற்பொழுது உங்களது மஸ்ஜிதுக்கு அவசியமில்லையெனில், அதன்பால் தேவையுள்ள வேறொரு மஸ்ஜிதுக்குக் கொடுத்தல் வேண்டும். இதற்கு நன்கொடையைக் கொடுத்தவரின் சம்மதம் அவசியமில்லை.