கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் ஆயு ஆகிய தாங்களால் அமைக்கப்பட்ட காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலையில் அமையப்பெற்றுள்ள உருவங்கள் மற்றும் பொம்மைகள் சம்பந்தமாக  பத்வாக் கோரி 07.06.2015 ஆந் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்டுகிறது.

 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு செய்திருக்கும் அர்ப்பணிப்புகளையும், உயிர்த்தியாகங்களையும், சேவைகளையும் மேலும் அவர்களின் பூர்வீகத்தை அடையாளப்படுத்தும் சின்னங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந் நூதனசாலை மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். இந்த முயற்சியில் ஈடுபட்ட தங்களுக்கு அல்லாஹ் சிறந்த நற்கூலியை வழங்குவானாக.

இருப்பினும் ஒரு முஸ்லிமின் அனைத்து செயற்பாடுகளும், உணர்வுகளும் இஸ்லாமிய வரையறைக்குள் இருப்பது மிக அவசியமாகும். அந்த வகையில் இந்நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சிற்பங்கள், உருவங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாப்பிரிவினர் கீழ்க்காணும் விடயங்களை அடிப்படையாக வைத்து நன்கு ஆய்வுசெய்தனர்.

01. உருவங்கள், சிற்பங்கள், மற்றும் பொம்மைகள் போன்றவற்றைப் பற்றி மார்க்கத்தில் வந்திருக்கும் பொதுவான தடைகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள்.
02. புராதன காலத்தில் செதுக்கப்பட்ட உருவங்களை நூதனசாலையில் பாதுகாத்து வைப்பதற்கும், புதிதாக ஒரு உருவத்தைச் செதுக்கி வைப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்.
03. முஸ்லிம்களுக்காக சேவை செய்த, அல்லது சேவை செய்யும் தலைவர்களின் உருவங்கள் நிறுவப்படவேண்டும் என்ற சிந்தனை எதிர்காலத்தில் வலுப்பெறக் கூடும் என்ற ஐயப்பாடு.
04. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் சஹாபாக்களின் உருவங்கள், கற்பித்தல் நோக்கத்திற்காகப் பாதுகாக்கப்படவேண்டிய பலத்த தேவையிருந்தும்கூட அவர்களின் வரலாறுகளைத் தொகுத்த எமது முன்னோர்களான ஸலபுஸ் சாலிஹீன்கள் அந்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதை நிராகரித்தமை.
05. ஒரு விடயத்தில் பிரயோசனம், தீங்கு ஆகிய இரண்டும் இருக்கும் நிலையில் தீங்கைக் கருத்திற் கொண்டு அதனைத் தவிர்ப்பதையே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை விதி.

மேற்கூறப்பட்ட அடிப்படைகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய குறித்த நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உருவங்களுக்குப் பதிலாக அந்த இடங்களில் பொருத்தமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைக் காட்சிப்படுத்தும்படியும், தற்போது காணப்படும் உருவங்கள் மற்றும் பொம்மைகளை முற்றாக அகற்றி விடும்படியும் வேண்டிக்கொள்கிறோம்.

மேலும் இவ்விடயத்தை மார்க்க அடிப்படைகளுக்கு உட்பட்ட வகையில் வடிவமைப்பதற்கு காத்தான்குடி, எமது கிளை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளும்படி ஆலோசனை வழங்குகின்றோம்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.