நீர்கொழும்பு பெரியமுல்லை, ஜுமுஆ மஸ்ஜித் மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பொது மையவாடியை, நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல், காமச்சோடை ஜுமுஆ பள்ளிவாசல், டவுன் ஜுமுஆ பள்ளிவாசல் என்பன வருகின்றன.

மையவாடிக் காணியை ஒரு பரோபகாரி கப்றுஸ்தானத்திற்காக வக்பு செயதுள்ளார். சுமார் மூன்று ஏக்கர்; காணியில் இரண்டு ஏக்கர் பகுதி ஜனாஸா நல்லடக்கத்திற்காக மதில் அமைத்து வேறாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு ஏக்கர் காணி வெறும் மைதானமாக உள்ளது.

இந்த மைதானத்தை தற்போது, நல்லடக்கத்தின்போது நல்லடக்கத்தின்போது வாகன தரிப்பிடமாகவும் ஏனைய நேரங்களில் எமது இளைஞர்கள் விளையாடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

மிக நீண்ட காலமாக எந்தவித பிரயோசனமுமின்றி இருக்கும் இக்காணியில் மக்கள் பிரயோசனமடையக்கூடிய, சமூகத்திற்கு தேவையான வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்த எத்தனித்த போதெல்லாம் கருத்து முரண்பாட்டால் தடைப்பட்டன.

எனவே இக்காணியை எதற்கு பயன்படுத்த முடியும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தீர்ப்பை பெற்று செயல் படுத்த மூன்று பள்ளிவாசல்களும் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமாவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்த எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை கூடிய சீக்கிரம் ஒதுக்கித் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வக்பு என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்பு செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

ஒரு பொருளை வக்பு செய்த நபர் எந்த நோக்கத்துக்காக வக்பு செய்தாரோ, அந்த நோக்கத்துக்குப் பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் பயன்படுத்துவது  நிருவாகிகளின் கடமையாகும் அத்துடன் அப்பொருளை அது வக்பு செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாகப் பயன்படுத்தவது மிகப் பெரிய தவறாகும்.

'உமர் ரழி அவர்கள் தனது பேரீத்தம் பழத் தோட்டம் ஒன்றின் விடயத்தில் ஆலோசனை செய்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோட்டத்தை வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்யும் படியும் அவ்வாறு வக்பு நிய்யத்துடன் ஸதகா செய்தால் அத்தோட்டம் மீண்டும் விற்கப்படவும் மாட்டாது, நன்கொடையாக வழங்கப்படவும் மாட்டாது, அனந்தரச் சொத்தாக்கப்படவும் மாட்டாது, இருப்பினும் அத்தோட்டத்தின் பழங்கள் தர்மம் செய்யப்படும் என்று கூறினார்கள்.' 

தாரகுத்னியின் அறிவிப்பில் 'வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் காலமெல்லாம் அது வக்பு செய்யப்பட்டதாகவே இருக்கும்' என வந்துள்ளது. 

ஒரு நோக்கத்துக்காக வக்ப் செய்யப்பட்ட பொருளை, இன்னும் ஒரு தேவைக்குப் பயன் படுத்தக் கூடாது என்பது பற்;றி இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

'வக்ப் செய்யப்பட்ட பொருளை அதன் அடிப்படைத் தோற்றத்திலிருந்து மாற்றுவது கூடாது. அதாவது, வீடாக வக்ப் செய்யப்பட்டதைத் தோட்டமாகவோ அல்லது குளியலறையாகவோ அல்லது தோட்டமாக வக்ப் செய்யப்பட்டதை வீடாகவோ மாற்றுவது கூடாதாகும். ஆனால், வக்ப் செய்தவர் வக்ப் செய்யும் பொழுது, வக்பைக் கண்கானிப்பவர் தேவையைக் கருதி பயன்படுத்த முடியும் என்று கூறினால் மாத்திரம் தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ளலாம்.'

உங்களுடைய கடிதத்தில், காணியை வக்ப செய்த பரோபகாரி கப்றுஸ்தானத்திற்காக வக்பு செயதுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரது நோக்கம் மையவாடிக்கென்றே தெளிவாக இருப்பதனால் அக் காணியை வேறு தேவைக்காகப் பாவிப்பது கூடாது. அத்துடன் குறித்த காணியைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்வதும் அவசியமாகும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு