பெண்கள் மையவாடியினுள் சென்று கப்ருகளை தரிசிப்பதற்கான சன்மார்க்க தீர்ப்பினை வழங்குமாறு கனிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கப்ருகளைத் தரிசிப்பது சிறந்த அமலாகும். அவ்வாறு தரிசிப்பது மரண சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளவும், மறுமை வாழ்வை ஞாபகமூட்டிக் கொள்ளவும் சந்தர்ப்பமாக அமைகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் கப்ரைத் தரிசனம் செய்வதைத் தடுத்தாலும், பின்னர் கப்ரை தரிசிப்பதற்கு அனுமதியளித்து, அது மரண சிந்தனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார்கள்.

'கப்ருகளை தரிசிப்பதை விட்டும் நான் உங்களைத் தடுத்திருந்தேன். எனது தாயின் கப்ரை தரிசிப்பதற்கு எனக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கப்ருகளை தரிசனம் செய்யுங்கள். நிச்சயமாக கப்ருகளை தரிசனம் செய்வது மறுமையை ஞாபகமூட்டும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல் : சுனன் அல்-திர்மிதி : 1054)

பொதுவாக ஆண்கள் அடிக்கடி கப்ருகளைத் தரிசிப்பது சுன்னத்தான விடயமாகும். என்றாலும், பெண்கள் கப்ருகளைத் தரிசிக்கும் விடயத்தில் மார்;க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஹனபி மத்ஹபுடைய சில அறிஞர்கள் ஆண்களைப் போன்று பெண்களும் கப்ருகளைத் தரிசிப்பதற்கு அனுமதியுள்ளது என்று கூறியுள்ளார்கள், இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்வரும் கூற்றை ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு பெண்மணியின் அருகாமையால் சென்றார்கள். அந்தப் பெண், (இறந்துபோய்விட்ட) தன் குழந்தையின் கப்ரின் அருகே அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையாக இரு' என்று கூறினார்கள். அதற்கு அப்பெண் 'என் துயரத்தை நீங்கள் உணரவில்லை' என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றதன் பின் அப்பெண்ணிடம் 'அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று கூறப்பட்டது.
(இதைக்கேட்டதும்) அப்பெண்ணுக்கு மரணமே வந்துவிட்டதைப் போன்று வருத்தம் ஏற்பட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுவாசலுக்கு வந்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வீட்டுவாசலில் வாயிற்காவலர் எவரும் இருக்கவில்லை. அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களை (யாரென) அறியவில்லை' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு (நூல் : முஸ்லிம் : 926)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண் தனது பிள்ளையின் கப்ரைத் தரிசனம் செய்யும் போது பொறுமையாக இரு என்று கூறினார்களேயன்றி, கப்ரை தரிசனம் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை என்பது பெண்கள் கப்ரைத் தரிசிக்க அனுமதியுண்டு எனக்கூறும் மார்க்க அறிஞர்களின் ஆதரமாகும்.
என்றாலும், இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், போன்ற பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் பெண்கள் கப்ருகளைத் தரிசிப்பது அனுமதிக்கப்பட்ட ஒரு விடயமாக இருந்தாலும், அவ்வாறு தரிசிப்பது வெறுக்கத்தக்க விடயம் என்றும், பெண்கள் கப்ருகளைத் தரிசிப்பதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஆண் பெண் கலப்பு போன்ற பித்னாக்கள் ஏற்படுமாக இருந்தால் கப்ருகளைத் தரிசிப்பது ஹராம் என்றும் கூறியுள்ளனர். இத்தகைய பித்னாவை ஏற்படுத்தும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்ததாக ஹதீஸில் வந்துள்ளது.

இந்த ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் இலக்கம் 2030, சுனன் அபீ-தாவூத் 3236, ஜாமிஉத் திர்மிதி 320 போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இமாம் திர்மிதி றஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்றும் எழுதியுள்ளார்கள்.

மேலும், பெண்கள் சோதனைகளைச் சகித்துக்கொள்ளும் ஆற்றல் குறைந்தவர்கள், அவர்களது உள்ளம் மென்மையானது என்பனவும், பெண்கள் கப்ருகளைத் தரிசிப்பது வெறுக்கத்தக்கது என்பதற்கான காரணங்களாகும். மேலும், அவர்கள் கப்ருகளைத் தரிசிக்கும் பொழுது பொறுமை இழந்து சப்தத்தை உயர்த்தி அழுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, கப்ருகளைத் தரிசிக்கும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்திருப்பதாக ஆதாரபூர்வமான ஹதீஸ் வந்திருப்பதாலும், பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இது வெறுக்கத்தக்க செயலாக இருப்பதோடு அதில் பித்னாக்கள் ஏற்படுமாயின் ஹராமாகிவிடும் என்று கூறியிருப்பதனாலும் பொதுவாக பெண்கள் கப்ருகளைத் தரிசிப்பதை தவிர்த்துக் கொள்வது மிகவும் பொருத்தமானதாகும்.

என்றாலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கப்ரை பெண்கள் தரிசிப்பதற்கு அனுமதியுள்ளது என்பதுடன் சுன்னத்தான அமலாகவும் உள்ளது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு