வக்ப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாற்றமாக வக்ப் சொத்தைப் பாவிப்பது சம்பந்தமாக பத்வாக் கோரி தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

'வக்ப்' என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு அவர்கள் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் கூற்றை அடிப்படையாகக் கொள்கிறார்கள்.

ஒரு தடவை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யாரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது வரை எனக்குக் கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக்கொண்டுள்ளேன். அதை நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால், அது விற்கப்பட, நன்கொடையாக வழங்கப்பட, அனந்தரமாக்கப்பட முடியாத ஸதகாவாக, 'வக்ப்' செய்துவிடுங்கள் என்று கூறினார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்டவர்களுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ப் செய்தார்கள். (நூல் : சஹீஹ் அல் புகாரி) 

ஒரு பொருளை வக்ப் செய்த நபர் எந்த நோக்கத்துக்காக அதை வக்ப் செய்தாரோ அந்நோக்கத்திற்கு பங்கம் ஏற்படாமலும், அதனை மாற்றாமலும் அதனைப் பயன்படுத்துவது அதன் நிருவாகிகளின் கடமையாகும் என்பதுடன் தக்க காரணம் இன்றி அப்பொருளை அது வக்ப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாற்றமாகப் பயன்படுத்துவதும் மிகப் பெரிய தவறாகும்.

உங்களது கடிதத்தில் மத்ரஸாவுக்கென வக்ப் செய்யப்பட்ட காணியில் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜிதை இடம் மாற்றுவது சம்மந்தமாக மார்க்கத் தீர்ப்புக் கோரியிருந்தீர்கள். இவ்விடயம் சம்பந்தமாக மேலதிகத் தெளிவுகள் தேவை என்ற அடிப்படையில் எமது பத்வாக் குழுவில் சிலர் நேரடியாக வந்து குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிட்டதன் பின் மீண்டும் சம்பந்தப்பட்டவர்களுடன் தலைமைக் காரியாலயத்தில் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப் பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1959 ஆம் ஆண்டு ஹாஜி ஏ. மரிக்கார் அவர்கள் தனது காணியை 3229 ஆம் இலக்க உறுதிப் பத்திரத்தின் படி பல நிபந்தனைகளிட்டு வக்ப் செய்துள்ளார்கள். அப்பத்திரத்தில் ஆறாவது நிபந்தனையில்  'மேற்குறிப்பிட்ட சொத்துக்களில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட நிலம் அரபுக் கல்லூரி கட்டுவதற்காக மட்டும் பாவிக்கப்பட வேண்டும். அல்லது அவ்வாறான கல்லூரி ஒன்றுக்கு வருமானம் பெறக்கூடியவகையில் பயன்படுத்தப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வக்ப் செய்தவர் குறித்த சொத்தை மத்ரஸா கட்டுவதற்கு அல்லது வேறு மத்ரஸா ஒன்றிற்கு வருமானம் பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படவேண்டும் என்று நிபந்தனையில் குறிப்பிட்டிருப்பதால், அதை வேறு தேவைக்குப் பயன்படுத்துவதற்கு எவ்வகையிலும் அனுமதியில்லை என்பதே மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்தும், மார்க்க அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் தெளிவாகின்றது.

குறித்த காணியில் வக்ப் செய்தவரது நோக்கத்திற்கமைய மத்ரஸா ஒன்றையே நிர்மாணிக்க வேண்டும். இருப்பினும் மத்ரஸாவின் தேவைக்காக மஸ்ஜித் ஒன்றைக் கட்டி, அம்மஸ்ஜிதில் மத்ரஸா மாணவர்களுடன் ஊர்மக்களும் தொழுது கொள்ள முடியும். அதே வேளை குறித்த காணியில் மத்ரஸா ஒன்றை நிர்மாணிக்காத பட்சத்தில் வக்ப் செய்தவரின் நிபந்தனைகளுக்கேற்ப வேறு ஒரு மத்ரஸாவுக்கு இக்காணியின் வருமானத்தை வழங்குவது அவசியமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.