தற்போது அல்லாஹ்வின் கிருபையால் இலங்கையில் அதிகமான மஸ்ஜித்களில் ஒலிபெருக்கியில் அதான் சொல்லப்படுகிறது. எனவே நாம் கேட்டுக்கொள்வது ஒவ்வொரு தொழுகைக்கும் வழமை போல் முஅத்தின் மஸ்ஜிதின் உள்ளே அதான் உரைக்க, வெளியே உள்ள ஒலிபெருக்கியில் ஊனு மூலமாகவோ அல்லது கெஸட் மூலமாகவோ அதான் ஒலிபரப்புச் செய்ய அனுமதி உண்டா? இவ்வாறு ஏனைய சில நாடுகளில் நடை பெறுகிறது.

எனவே இதற்கான சரியான உறுதியான ஒரு பத்வாவை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அதான் என்பது சொல் ரீதியான வணக்கங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் கணிக்கப்படுகின்றது. பர்ளான தொழுகையின் நேரம் நுழைந்துவிட்டது என்பதை மக்களுக்கு அறிவிப்பது இதன் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைக்கலாம் என்பது பற்றி சஹாபாக்களுடன் ஆலோசனை செய்த பொழுது சில சஹாபாக்கள் யஹுதிகளைப் போன்று ஊதுகுழல்; ஊதி மக்களை அழைக்கலாம் என்றும், இன்னும் சிலர் கிறிஸ்தவர்களைப் போன்று மணி அடித்து மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகளைக் கூறினார்கள். இம்முறைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை.

மக்களைத் தொழுகைக்காக எவ்வாறு அழைக்கலாம் என்ற கவலையில் எல்லா சஹாபாக்களும் இருக்கும் வேளையில், ஒரு நாள் ஒரு சஹாபி அதான் கூறும் முறையை கனவு கண்டார். அந்த அதானை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறிக்காட்டிய போது அதனை விரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து இம்முறையில் அதான் கூறுமாறு ஏவினார்கள். பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இம்முறைப்படி முதன் முதலாக அதான் கூறினார்கள். இதுவே நாம் தற்பொழுது கூறும் அதானாகும்.

அதான் கூறுவது பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் பல சிறப்புகள் வந்துள்ளன. அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, தானும் நல்லதைச் செய்து நிச்சயமாக நான் அல்லாஹ்விற்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில் ஒருவன் என்றும் கூறுகின்றாரோ அவரை விட அழகான வார்த்தை கூறுபவர் யார்'. (ஹாமீம் ஸஜ்தா : 33)

மக்களைத் தொழுகைக்காக அழைக்கும் அழைப்பை விட சிறந்த அழைப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. இதனாலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

'அதானுக்கும், தொழுகையில் முதல் வரிசைக்கும் உள்ள சிறப்புகளை மக்கள் அறிவார்களேயானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக்குலுக்கி எடுக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்' .  (நூல்: ஸஹீஹுல் புஹாரி – எண் - 2689 ) 

அதான் கூறுவதன் சிறப்புகள் பற்றி இன்னும் பல ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன.

பர்ளான தொழுகை;கான நேரம் நுழைந்தவுடன் தகுதியான ஒரு நபர் நேரடியாக அதான் கூறுவது சுன்னத்தாகும். இம்முறையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதல் இன்றுவரை பேணப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட இந்த அதானுக்குப் பகரமாக ஊனு மூலம் அல்லது கெஸட் மூலம் பதிவு செய்யப்பட்ட அதான் ஒன்றை ஒலிபரப்புவது கூடாது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்குப் பின்வரும் காரணங்களை முன்வைத்துள்ளனர்.

  1. தொழுகைக்கான நேரம் வந்தவுடன் மஸ்ஜித்களில் முஅத்தின்களால் அதான் கூறப்படுவது இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். பதிவு செய்யப்பட்ட அதானை ஒலிபரப்பும் வழமை உருவாகினால் காலப்போக்கில் மேற்கூறப்பட்ட அடையாளச் சின்னம் இல்லாமல் ஆகிவிடும்.
  2. பல சிறப்புகளைக் கொண்டுள்ள சொல் ரீதியான வணக்கங்களில் முக்கியமான ஒன்றான அதானை ஒலிப்பதிவுக் கருவி மூலம் ஒலி பரப்பப்படும் வேளையில், நேரடியாக ஒரு மனிதர் அதான் கூறும் பொழுது கிடைக்கும் நன்மைகள் மற்றும் சிறப்புகள் யாவும் கிடைக்காமற் போகின்றன.
  3. ஒரு மனிதர் நேரடியாக அதான் கூறும் போதுள்ள உயிரோட்டம் பதிவு செய்யப்பட்ட அதானை ஒலிபரப்பும் போது இருப்தில்லை.
  4. அதானுக்கு பதில் கூறுவதால் பல நன்மைகள் இருப்பதாக ஹதீஸ்களில் வந்துள்ளன. இந்த நன்மைகளைப் பெறுவதற்கு ஒரு மனிதர் நேரடியாக அதான் கூறும் வேளையில்  அதைக் கேட்போர் பதில் கூறவேண்டும். ஒலிபரப்பப்படும் பதிவுசெய்யப்பட்ட அதானுக்கு பதில் கூறுவதால் இந்த நன்மை கிடைப்பதில்லை என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மஸ்ஜிதுக்குள் முஅத்தின் நேரடியாக அதான் கூறும் அதேவேளை மஸ்ஜிதுக்கு வெளியில் உள்ள மக்களுக்குக்  கேட்பதற்காக இருவட்டு (ஊனு) மூலம் அல்லது ஒலிப் பேழை (ஊயளளநவவந) மூலம் பதிவு செய்யப்பட்ட அதானை ஒலிபரப்புவதானல் காலப் போக்கில் நேரடியாக அதான் கூறும் வழக்கம் படிப்படியாக கைவிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட அதானை மாத்திரம் ஒலிபரப்பும் வழக்கம் நடைமுறைக்கு வந்துவிடும்.

நேரடியாகக் கூறும் அதான் மற்றும் ஒலிப்திவுக் கருவியில் கூறப்படும் அதான் ஆகிய இரு வகையான அதான்களையும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பும் முறையானது இதுவரை எங்கும் நடைபெறாத ஒரு செயலாகும். மஸ்ஜிதுக்கு வெளியே ஒலிபரப்பாகும் அதான் ஒலியானது இனிமையாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பிரசித்தி பெற்ற முஅத்தின்மார்களின் பதிவு செய்யப்பட்ட அதானை ஒலிபரப்பச் செய்வதானால் கிடைக்கும் நன்மைகளை விட பாதகமான விளைவுகளே அதிகம் உள்ளன என்று கருதுகின்றோம். இதில் முஅத்தின்மார்கள் புறக்கணிக்கப்படுதல், அதிகமானவர்கள் அதானுக்குப் பதில் கூறுவதனால் கிடைக்கும் நன்மைகளை இழத்தல் போன்ற பாதகங்களை உதாரணமாகக் கூறலாம்.

சில நாடுகளில் ஒரு மஸ்ஜிதில் நேரடியாகக் கூறப்படும் அதானை அந்நாடுகளில் உள்ள ஏனைய மஸ்ஜித்களிலும் ஒலிபரப்புச் செய்யப்படும் வழமை உள்ளது. ஆனால் ஒரு மஸ்ஜிதில் கூறப்படும் அதானை இன்னும் ஒரு மஸ்ஜித் போதுமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும் தனித்தனியாக ஒவ்வொரு மஸ்ஜிதிலும் அதான் கூறப்பட வேண்டும் என்றும் மார்;க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். 

எனவே, மஸ்ஜிதுக்குள் முஅத்தின் நேரடியாக அதான் கூறும் அதேவேளை மஸ்ஜிதுக்கு வெளியில் உள்ள மக்களுக்குக்  கேட்பதற்காக இருவட்டு (ஊனு) மூலம் அல்லது ஒலிப் பேழை (ஊயளளநவவந) மூலம் பதிவு செய்யப்பட்ட அதானை ஒலிபரப்புவதைத் தவிர்த்து, வழமை போன்று தொழுகைக்கான நேரம் ஆனவுடன் ஒரு நபர் அதான் கூறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், நல்ல குரல் வளமுள்ள தகுதியுள்ள முஅத்தின்களை அதான் கூறுவதற்கு நியமிப்பதும் மஸ்ஜித் நிர்வாகிகளின் பொறுப்பாகும்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.