நான் ஓய்வூதியம் பெறும் ஒரு அரச வங்கி ஊழியன் ஆவேன். கண்ணியமிக்க உலமாக்கள் பலரின் ஆலோசனையுடன் எனது மாதாந்த ஓய்வூதியத்தையும் ஏனைய வசதிகளையும் நிறுத்திக் கொள்ளத்  தீர்மானின்துள்ளேன். எனினும் அப்பணம் மாதந்தோறும் எனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுகின்றது.

இந்நிலையில் அந்தப் பணத்தை சமூக நலன்களுக்காக செலவிட முடியுமா? உதாரணமாக பள்ளிவாயல்களின் தேவைகள், சமூகத்தின் கல்வித் தேவைகள், பொது வசதிகளை எற்படுத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா என்பதை அறியத்தருமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கான மேலான கூலியைத் தங்களுக்கு வழங்குவானாக.

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வட்டி எடுப்பது வட்டிக்குக் கொடுப்பது மேலும் அதற்கு உடந்தையாக இருப்பது என்பவை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் உள்ளதாகும். வட்டிசார்ந்த கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் மாத்திரம் அன்றி அதனை எழுதுவோர், சாட்சியாக நிற்போர் போன்ற அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எச்சரிக்கைகள் வந்துள்ளன.

பின்வரும் ஹதீஸ் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அதாவது

'வட்டி உண்பவன், அதனை (பிறருக்கு) உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சிகள் அனைவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமம் எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு, நூல் : சஹீஹு முஸ்லிம். ஹதீஸ் : 1598)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டியை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் தொழில் செய்வது கூடாது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமும் ஹராமாகும்.

எனவே, வங்கி ஒன்றில் தொழில் புரிந்த நீங்கள் இதை உணர்ந்து தற்பொழுது உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தை தங்களது சுயதேவைகளுக்கும் பயன்படுத்தாது விட்டுவிடத் தீர்மானித்துள்ளமை உண்மையில் பாராட்டத்தக்க விடயமாகும்.

யார் அல்லாஹ்வுக்காக ஒன்றை விட்டுவிடுவாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அதைவிடச் சிறந்த ஒன்றைக் கொடுப்பான் என்பது நபி மொழியாகும்.

நீங்கள் அந்த ஓய்வூதியப் பணத்தைப் பெறாமல் அதிலிருந்து முற்றாக நீங்கிக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் இதன்பின்னர் ஓய்வூதியத்தை நிறுத்திக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவித்து, அதை நிறுத்துவதற்கு முடியுமாக இருந்தால் அவ்வாறு செய்துகொள்ளவது ஏற்றமாகும்.

அவ்வாறு முறையாக நிறுத்த முடியாவிட்டால், கிடைக்கப்பெறும் ஓய்வூதியத்தை, பாதைகள் அமைத்தல், பாடசாலைகள் கட்;டுதல், பாலம் அமைத்;தல் போன்ற சமூக நலன்களுக்காகவும், ஏழை எழிய மக்களின் மற்றும் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற விடயங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். இதைப் பகிரங்கப்படுத்தாமல் மேற்குறிப்பிடப்பட்ட அமைப்பில் கொடுத்துவிடுதல் வேண்டும்.

இருப்பினும், அல்லாஹ்வின் பரிசுத்த இல்லங்களாகிய மஸ்ஜித்கள் மற்றும் மார்க்கக் கல்வியைப் போதிக்கும் இடங்களாகிய மத்ரஸாக்களுக்கள் ஆகியவற்றின் தேவைகளுக்குப் பரிசுத்தமான பணத்தைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததும் மஸ்ஜித்களின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க மிக ஏற்புடையதுமாகும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு