வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களாக தொழில் செய்வோரின் உதவிகளை மஸ்ஜித்களுக்குப் பயன்படுத்துதல் கூaடுமா?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

வெளிநாடுகளில் தொழில் செய்வதற்காக ஆண்களை அனுப்புவதும் அதன்மூலம் இலாபமீட்டுவதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். என்றாலும், பெண்களை மாத்திரம் தொழில் புரிவதற்காக வெளிநாடுகளுக்கு  அனுப்புவதாக இருந்தால், பின்வரும் நிபந்தனைகளைப் பேணுவது அவசியமாகும்.

 1. குறித்த பெண் தொழில் புரிந்தாக வேண்டுமென்ற மிகுந்த தேவையுள்ளவராக இருத்தல்.
 2. பெண்ணின் செலவினங்களைக் கொடுப்பதற்கு கணவனோ அல்லது பாதுகாவலரோ இல்லாமலிருத்தல் அல்லது அவர்கள் கொடுப்பது போதாமலிருத்தல்.
 3. பெண் பிரயாணம் செய்யும் பொழுது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் கூடவே இருத்தல்.
 4. தொழில் புரியும் இடத்தில் ஆண், பெண் கலப்பு இல்லாதிருத்தல்.
 5. பெண்களுக்கு உகந்த தொழிலாக இருத்தல்.
 6. ஷரீஆவில் கடமையாக்கப்பட்ட மாதர் மறைப்பைப் பேணுதல்.
 7. கணவன் மற்றும் பிள்ளைகளின் கடமைகளை நிறைவேற்றுவதில் குறைவு செய்யாதிருத்தல்.

ஒரு பெண் தொழிலுக்காக வெளிநாடு ஒன்றிற்கு பிரயாணம் செய்யும் போது அவருடன் அவரது கணவன் அல்லது நம்பிக்கையான மஹ்ரமான ஓர் ஆண் கூடவே இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒரு நிபந்தனையாகும்.

இந்நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரு பெண் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு மார்;க்கத்தில்  அனுமதியுள்ளது. மேலும், இம்முறையில் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலம் ஒரு முகவர் இலாபமீட்ட முடியும்.             

ஆனால், மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமாக கணவன் அல்லது நம்பிக்கையான மஹ்ரமான துணை இன்றி தனியாக ஒரு பெண் வெளிநாட்டுக்குச் செல்வது கூடாது. அவ்வாறு வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலம் ஒரு முகவர் ஈட்டும் இலாபமும் ஹலாலானதாக இருக்காது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஒரு பெண் மஹ்ரமான ஆண் இன்றி பிரயாணம் செய்ய மாட்டாள்'. என்று கூறினார்கள். (நூல்: புஹாரி. முஸ்லிம்.) 

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி பிரயாணம் செய்வது கூடாது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களாக தொழில் செய்வோரது பண உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் பின்வரும் அடிப்படைகளைக் கவனிப்பது அவசியமாகும்.

 1. வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் ஆண்களை அல்லது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பெண்களை தொழிலுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பவதன் மூலம் இலாபமீட்டுபவர்களாக இருந்தால் அவர்களது உதவிகளை எடுப்பதற்கு அனுமதியுள்ளது.
 1. மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்படாதவாறு பெண்களை மாத்திரம் வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலம் ஒரு முகவர் இலாபம் ஈட்டியிருப்பின் அது ஹராமான முறையில் ஈட்டப்பட்டதாக இருப்பதால் அவ்வுதவிப் பணத்தை பெற்றுக்கொள்வது கூடாது.
 1. மேற்கூறப்பட்ட இரு முறைகளிலும் இலாபமீட்டும் முகவர்களாக இருந்தால் அவர்களது வருமானம் ஹலால் மற்றும் ஹராம் கலந்த ஒன்றாகும். இவ்வாறு இரண்டும் கலந்த வருமானமாக இருந்து, ஹலால் அதிகமாக இருந்தால் அவர்களது உதவிகளைப் பெறுவதற்கு அனுமதி உள்ளது. அல்லது ஹராம் அதிகமாக இருந்தால் அவர்களது உதவிகளைப் பெறுவது மக்ரூஹ் ஆகும். அதிகமாக உள்ளது ஹலாலானதா அல்லது ஹாரமானதா என்பது சந்தேகமாக இருந்தால், இந்நிலையிலும் அவர்களது உதவிகளைப் பெறுவதற்கு அனுமதி உள்ளது.
 1. ஒருவர் தன்னிடம் ஹலால் மற்றும் ஹராமான பணம் இருந்து, அவர் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட பணம் ஹராமான வழியில் சம்பாதிக்கப்பட்ட பணமாக இருப்பது உறுதியாகத் தெரிந்தால் அந்தப் பணத்தை எடுப்பது கூடாது. இவர்களது உதவிகளை மஸ்ஜிதின் தேவைகளுக்காகப் பெறுவதாக இருந்தாலும் இதுவே சட்டமாகும்.

என்றாலும், அல்லாஹ்வின் பரிசுத்த இல்லங்களாகிய மஸ்ஜித்களின் தேவைகளுக்குப் பரிசுத்தமான பணத்தைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததும், மஸ்ஜித்களின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க மிக ஏற்புடையதுமாகும்;.  மேலும், முஸ்லிம்கள் என்ற வகையில் எமது வருமானங்களை தூய்மையானதாகவும், ஹலாலானதாகவும் ஆக்கிக் கொள்வது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹு