ஒரு நபர் ஆரம்பத்தில் ஒரு திருமணம் செய்து பின்பு அப்பெண்ணை முத்தலாக் மூலம் பிரிந்து வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். சில காலங்களுக்கு பின்பு அப்பெண்; மனைவியாக இருக்கும் போதே முத்தலாக் சொல்லப்பட்ட தனது முன்னைய மனைவியை முத்தலாக்கிற்கு அப்பாற்பட்டு மணந்துள்ளார். இதற்குரிய மார்க்கச் சட்டம் யாது?

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் தனது மனைவியை மூன்று தடவைகள் தலாக் கூறிவிட்டால்; அவளுடன் சேர்ந்து வாழ முடியாது. அவ்வாறு அவளை மீண்டும் திருமணம் முடிக்க விரும்பினால், அப்பெண் தலாக்கின் இத்தாவை பூர்த்தி செய்ததன் பின் வேறொருவரை உரிய முறையில் திருமணம் செய்து  அவருடன் தாம்பத்திய உறவில் அவசியம் ஈடுபட வேண்டும். பின்னர் இரண்டாவது கணவர் அவளை தலாக் சொல்வதன் மூலமாக அல்லது மரணத்தின் மூலமாக பிரிந்தால் அவற்றின் இ;தாக்களை நிறைவு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர், அவளை மீண்டும் புதிய திருமண ஒப்பந்தத்தின் மூலமாக திருமணம் செய்துகொள்ளலாம்.

இவ்விடயம் பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருந்து தெளிவாகின்றது.

 '(இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்துகொள்ளும் வரையில் அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று  எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டுகொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை.' 'அல்-பகரஹ் - 230'

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். ரிஃபாஆ அல் குரழீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'நான் ரிஃபாஆவிடம் (அவரை திருமணம் முடித்தவளாக) இருந்தேன். பிறகு, அவர் என்னை மூன்று தலாக் சொல்லிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் ரழியல்லாஹ அன்ஹு அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பை போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)' என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது' என்று கூறினார்கள்.

இதுவே, நான்கு மத்ஹப்களுடைய இமாம்களின் கருத்தாகும்.

இந்த தலாக் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு சந்தர்ப்பத்தில் முதலாவது தலாக்கையும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் இரண்டாம், மூன்றாம் தலாக்குகளை ஒன்றாகவும் காழியின் முன்னிலையில் கூறி, அவ்வாறு மூன்று தலாக்குகளையும் கூறிவிட்டதாக அத்தாட்சிப் பத்திரத்தையும் காழியிடமிருந்து பெற்றுள்ளார் என அவருடன் தொலைபேசியூடாக பேசியதிலிருந்தும், அவரால் எமக்கு அனுப்பப்பட்ட கடிதங்களிலிருந்தும் அறிய முடிகிறது. 

எனவே, மேல் கூறப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகுமிடத்து, குறிப்பிட்ட நபருக்கு, குறித்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்துகொள்ள முடியும். அவ்வாறு இந்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில் அவருக்கு அப்பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது ஹராமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு