Fatwa

Fatwa

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

 

உணவு அல்லது பானமாக உட்கொள்ளக்கூடிய ஏதும் வயிற்றுக்குள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்துவிடும் எனும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்தொற்றுமை உள்ளது. இதற்கு அல்-குர்ஆனில் அல்-பகரஹ் - 187 ஆம் வசனம் மற்றும் பல ஹதீஸ்கள் ஆதாரங்களாக உள்ளன.

 

وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى الْفِطْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ بِمَا يُتَغَذَّى بِهِ، فَأَمَّا مَا لَا يَتَغَذَّى بِهِ، فَعَامَّةُ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ الْفِطْرَ يَحْصُلُ بِهِ (المغنى لابن قدامة)

 

அவ்வாறே, உணவு அல்லது பானமாக உட்கொள்ளப்படாத கற்கள், இரும்பு போன்றவை வயிற்றிற்குள் சென்று விட்டாலும் நோன்பு முறிந்து விடும் என்று நான்கு மத்ஹபுகள் உற்பட பெரும்பான்மை மார்க்க அறிஞர்கள் கூறுகினற்னர்.

 

இதற்கு இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் கூற்று ஆதாரமாக உள்ளது.

 

'உடம்பிற்குள் (துவாரங்களினால்) ஏதாவது ஒரு பொருள் நுழைவதினாலே நோன்பு முறியும்' (ஸஹீஹுல் புகாரி)

 

وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَعِكْرِمَةُ الصَّوْمُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ صحيح البخاري كتاب الصوم - بَابُ الحِجَامَةِ وَالقَيْءِ لِلصَّائِمِ)

 

ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள், ஒரு நோன்பாளி தான் நோன்பாளி என்ற ஞாபகத்துடன் வேண்டுமென்று சுய விருப்பத்துடன் வாயில் ஏதேனுமொரு பொருளை உட்செலுத்தி அப்பொருள் தொண்டையின் மத்திய பகுதியைத் தாண்டி விடுமானால் அவரது நோன்பு முறிந்து விடும் என்றும், அவ்வாறே ஒரு நோன்பாளி மூக்கில் ஏதேனுமொரு பொருளை உட்செலுத்தி அப்பொருள் (கைஷூம் எனப்படும்) மூக்குத் துளையின் உட்பகுதியைத் தாண்டிச் சென்றால் அவரது நோன்பு முறிந்து விடும் என்றும் கூறுகின்றனர். இதுவே, ஹன்பலி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தாகும்.

 

(وَأَمَّا) السُّعُوطُ فَإِنْ وَصَلَ إلَى الدِّمَاغِ أَفْطَرَ بِلَا خِلَافٍ قَالَ أَصْحَابُنَا: وَمَا جَاوَزَ الْخَيْشُومَ فِي الِاسْتِعَاطِ فَقَدْ حَصَلَ فِي حد الباطن وَحَصَلَ بِهِ الْفِطْرُ قَالَ أَصْحَابُنَا وَدَاخِلُ الْفَمِ وَالْأَنْفِ إلَى مُنْتَهَى الْغَلْصَمَةِ وَالْخَيْشُومِ لَهُ حُكْمُ الظَّاهِرِ فِي بَعْضِ الْأَشْيَاءِ حَتَّى لَوْ أَخْرَجَ إليه القئ أَوْ ابْتَلَعَ مِنْهُ نُخَامَةً أَفْطَرَ  (المجموع شرح المهذب)

ثُمَّ دَاخِلُ الْفَمِ وَالْأَنْفِ إلَى مُنْتَهَى الْغَلْصَمَةِ وَالْخَيْشُومِ لَهُ حُكْمُ الظَّاهِرِ فِي الْإِفْطَارِ بِاسْتِخْرَاجِ الْقَيْءِ إلَيْهِ وَابْتِلَاعِ النُّخَامَةِ مِنْهُ وَعَدَمِهِ بِدُخُولِ شَيْءٍ فِيهِ... قَالَ فِي الْمِصْبَاحِ وَالْغَلْصَمَةُ أَيْ: بِمُعْجَمَةٍ مَفْتُوحَةٍ فَلَامٍ سَاكِنَةٍ فَمُهْمَلَةٍ رَأْسُ الْحُلْقُومِ، وَهُوَ الْمَوْضِعُ النَّاتِئُ فِي الْحَلْقِ وَالْجَمْعُ غَلَاصِمُ وَقَوْلُهُ م ر ثُمَّ دَاخِلُ الْفَمِ أَيْ: إلَى مَا وَرَاءَ مَخْرَجِ الْحَاءِ الْمُهْمَلَةِ وَدَاخِلُ الْأَنْفِ إلَى مَا وَرَاءَ الْخَيَاشِيمِ اهـ وَقَالَ الْكُرْدِيُّ: عَلَى بَافَضْلٍ فَالْخَيْشُومُ جَمِيعُهُ مِنْ الظَّاهِرِ قَالَ فِي الْعُبَابِ وَالْقَصَبَةُ مِنْ الْخَيْشُومِ اهـ وَهِيَ فَوْقَ الْمَارِنِ وَهُوَ مَا لَانَ مِنْ الْأَنْفِ اهـ   (حاشية الشرواني)

(قوله: ولا يفطر بوصول إلى باطن قصبة أنف) أي لأنها من الظاهر، وذلك لأن القصبة من الخيشوم، والخيشوم جميعه من الظاهر. (قوله: حتى يجاوز منتهى الخيشوم) أي فإن جاوزه أفطر، ومتى لم يجاوز لا يفطر.(وقوله: وهو) أي المنتهى.

 

ஹனபி மத்ஹபின் அறிஞர்கள், உட்செலுத்தப்படும் ஏதேனுமொரு பொருள் பூர்த்தியாக உடலினுள்ளே சென்று மறைந்தால் மாத்திரமே நோன்பு முறியும் என்றும், அதில் சில பகுதிகள் வெளியில் தெரிந்துகொண்டிருந்தால் அல்லது உட்சென்றுவிட்டு வெளியில் திரும்பி வந்துவிட்டால் நோன்பு முறியாது என்றும் கூறுகின்றனர்.

 

 (قَوْلُهُ: وَكَذَا لَوْ ابْتَلَعَ خَشَبَةً) أَيْ عُودًا مِنْ خَشَبٍ إنْ غَابَ فِي حَلْقِهِ أَفْطَرَ وَإِلَّا فَلَا (قَوْلُهُ: مُفَادُهُ) أَيْ مُفَادُ مَا ذُكِرَ مَتْنًا وَشَرْحًا وَهُوَ أَنَّ مَا دَخَلَ فِي الْجَوْفِ إنْ غَابَ فِيهِ فَسَدَ وَهُوَ الْمُرَادُ بِالِاسْتِقْرَارِ وَإِنْ لَمْ يَغِبْ بَلْ بَقِيَ طَرَفٌ مِنْهُ فِي الْخَارِجِ أَوْ كَانَ مُتَّصِلًا بِشَيْءٍ خَارِجٍ لَا يَفْسُدُ لِعَدَمِ اسْتِقْرَارِهِ. (رد المحتار على الدر المختار)

 

மாலிகி மத்ஹபின் அறிஞர்கள், திண்மமான ஏதேனும் பொருட்கள் தொண்டையை அடைந்தால் நோன்பு முறியாது, அவை வயிற்றை அடைந்தாலே நோன்பு முறியும் என்று கூறுகினற்னர். 

 

எனவே, ஹனபி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப் பிரகாரம் வாய் அல்லது மூக்கினால் அனுப்பப்படும் கருவி வெளியில் வந்துவிடுவதால் COVID 19 பரிசோதனையினால் நோன்பு முறியாது. மாலிகி மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்துப் பிரகாரமும் வயிற்றிற்குள் ஏதும் செல்லவில்லை என்பதால் நோன்பு முறியாது.

 

وَاحْتُرِزَ بِالْمَائِعِ عَنْ غَيْرِهِ كَحَصَاةٍ وَدِرْهَمٍ فَوُصُولُهُ لِلْحَلْقِ لَا يُفْسِدُ بَلْ لِلْمَعِدَةِ. حاشية الصاوي على الشرح الصغير)

 

இவ்வடிப்படையில், ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்களின் கருத்தின் பிரகாரம் Covid 19 பரிசோதனையில் மூக்கிலும் வாயிலும் செலுத்தப்படும் கருவி மேற்குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை என இத்துறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் உறுதிபடக் கூறுவதால் இவ்வாறு பரிசோதனை செய்வதால் நோன்பு முறியாது.

 

எனினும், ஏதேனுமொரு விதத்தில் மேற்கூறப்பட்ட எல்லையை குறித்த கருவி தாண்டியது உறுதியாகத் தெரிந்தால் நோன்பு முறிந்து விடும். அதனைப் பிரிதொரு தினத்தில் கழா செய்து கொள்ள வேணடும்.

 

وفى نهاية المحتاج فى مسألة مضغ العلك للصائم: فَإِنْ تَيَقَّنَ وُصُولَ بَعْضِ جُرْمِهِ عَمْدًا إلَى جَوْفِهِ أَفْطَرَ وَحِينَئِذٍ يَحْرُمُ مَضْغُهُ، بِخِلَافِ مَا إذَا شَكَّ أَوْ وَصَلَ طَعْمُهُ أَوْ رِيحُهُ لِأَنَّهُ مُجَاوِرٌ، وَكَالْعِلْكِ فِي ذَلِكَ اللِّبَانُ الْأَبْيَضُ فَإِنْ كَانَ لَوْ أَصَابَهُ الْمَاءُ يَبِسَ وَاشْتَدَّ كُرِهَ مَضْغُهُ وَإِلَّا حَرُمَ.

 

இப்பரிசோதனை விடயத்தில் முஸ்லிம்கள் உரிய அதிகாரிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸுரி
மேற்பார்வையாளர் - பத்வாப் பிரிவு 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 


அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்த

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


வியாபாரம் உட்பட அனைத்து வர்த்தக, வாணிப, கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளிலும் ஒரு முஸ்லிம் தவிர்க்கவேண்டிய அம்சங்களுள் வட்டி பிரதானமானதாகும். எவ்வகையிலும் வட்டித் தொடர்பு வைத்துக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. அத்துடன் அதனைப் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.


“அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதனை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம். மறுமையிலோ) அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அன்-நிஸா : 161)


விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் (உண்மையாக) விசுவாசம் கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். (அல்-பகரா: 278)

அல்குர்ஆனைப் போன்று ஸன்னாவும் வட்டியின் பாரதூரத்தைப் பற்றி விளக்குகின்றது. வட்டி உண்பதை நபியவர்கள் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிட்டார்கள். இதுபற்றிய ஹதீஸ் பின்வருமாறு:


“நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அவை யாவை? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவியபோது அண்ணலார் பின்வருமாறு விளக்கினார்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆன்மாவை நியாயமின்றிக் கொலை செய்தல், வட்டி உண்ணல், அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், யுத்தத்தில் புறமுதுகு காட்டுதல், கற்புடைய முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” (புகாரி, முஸ்லிம்)

عن أبي هريرة - رضي الله عنه - أن رسول الله - صلى الله عليه وسلم - قال: (اجتنبوا السبع الموبقات) ، قالوا: يا رسول الله، وما هن؟ قال: الشرك بالله، والسحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وأكل الربا، وأكل مال اليتيم، والتولي يوم الزحف، وقذف المحصنات المؤمنات الغافلات؛ متفق عليه.

மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள் என ஜாபிர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

عَنْ جَابِرٍرضي الله عنه، قَالَ: ( لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ ، وَشَاهِدَيْهِ ) ، وَقَالَ: (هُمْ سَوَاءٌ). رواه مسلم


எனவே, வட்டியில் இருந்து தூரமாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். ஒருவர் தான் அறியாத நிலையில் வட்டியுடன் தொடர்பு வைத்து விட்டால் அவர் தௌபா செய்து மீளுவது அவசியமாகும்.


“ஹராமான பணம் உள்ள ஒருவர், அதை விட்டும் நீங்கி தௌபா செய்ய நாடினால், அப்பணத்தின் உரிமையாளர் அல்லது அவரது பிரதிநிதியிடம் அதனை ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் மரணித்திருந்தால் அவரது அனந்தரக்காரரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். உரிமையாளர் யார் என்பது அறியப்படாமல் இருந்தால் அப்பணத்தைப் பொதுவாக மக்கள் பயனடையும் விதத்தில் பாலங்கள் கட்டுதல், பிரயாணிகள் தங்கும் மடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்காக செலவிடுவது கட்டாயமாகும். அல்லது ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும், இவ்வாறான பணத்தை அழிப்பதோ கடலில் எறிவதோ முறையாகாது, அதனை முஸ்லிம்களின் பொது நலன்களுக்கே செலவிடுவது நல்லது என்றும் பல மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளதாக இமாம் நவவி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் தனது மஜ்மூஃ எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

قَالَ الْغَزَالِيُّ إذَا كَانَ مَعَهُ مَالٌ حَرَامٌ وَأَرَادَ التَّوْبَةَ وَالْبَرَاءَةَ مِنْهُ فَإِنْ كَانَ لَهُ مَالِكٌ مُعَيَّنٌ وَجَبَ صَرْفُهُ إلَيْهِ أَوْ إلَى وَكِيلِهِ فَإِنْ كَانَ مَيِّتًا وَجَبَ دَفْعُهُ إلَى وَارِثِهِ وَإِنْ كَانَ لِمَالِكٍ لَا يَعْرِفُهُ وَيَئِسَ مِنْ مَعْرِفَتِهِ فَيَنْبَغِي أَنْ يَصْرِفَهُ فِي مَصَالِحِ الْمُسْلِمِينَ الْعَامَّةِ كَالْقَنَاطِرِ وَالرُّبُطِ وَالْمَسَاجِدِ وَمَصَالِحِ طَرِيقِ مَكَّةَ وَنَحْوِ ذَلِكَ مِمَّا يَشْتَرِكُ الْمُسْلِمُونَ فِيهِ وَإِلَّا فَيَتَصَدَّقُ بِهِ عَلَى فَقِيرٍ أَوْ فُقَرَاءَ وَيَنْبَغِي أَنْ يَتَوَلَّى ذَلِكَ الْقَاضِي إنْ كَانَ عَفِيفًا فَإِنْ لَمْ يَكُنْ عَفِيفًا لَمْ يَجُزْ التَّسْلِيمُ إلَيْهِ فَإِنْ سَلَّمَهُ إلَيْهِ صَارَ الْمُسَلَّمُ ضَامِنًا بَلْ يَنْبَغِي أَنْ يُحَكِّمَ رَجُلًا مِنْ أهل البلد دينا عالما فان التحكم أَوْلَى مِنْ الِانْفِرَادِ فَإِنْ عَجَزَ عَنْ ذَلِكَ تَوَلَّاهُ بِنَفْسِهِ فَإِنَّ الْمَقْصُودَ هُوَ الصَّرْفُ إلَى هَذِهِ الْجِهَةِ وَإِذَا دَفَعَهُ إلَى الْفَقِيرِ لَا يَكُونُ حَرَامًا عَلَى الْفَقِيرِ بَلْ يَكُونُ حَلَالًا طَيِّبًا وَلَهُ أَنْ يَتَصَدَّقَ بِهِ عَلَى نَفْسِهِ وَعِيَالِهِ إذَا كَانَ فَقِيرًا لِأَنَّ عِيَالَهُ إذَا كَانُوا فُقَرَاءَ  فَالْوَصْفُ مَوْجُودٌ فِيهِمْ بَلْ هُمْ أَوْلَى مَنْ يُتَصَدَّقُ عَلَيْهِ وَلَهُ هُوَ أَنْ يَأْخُذَ مِنْهُ قَدْرَ حَاجَتِهِ لِأَنَّهُ أَيْضًا فَقِيرٌ وَهَذَا الَّذِي قَالَهُ الْغَزَالِيُّ فِي هَذَا الْفَرْعِ ذَكَرَهُ آخَرُونَ مِنْ الْأَصْحَابِ وَهُوَ كَمَا قَالُوهُ ونقله الْغَزَالِيُّ أَيْضًا عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ وَغَيْرِهِ مِنْ السَّلَفِ عَنْ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ وَالْحَارِثِ الْمُحَاسِبِيِّ وَغَيْرِهِمَا مِنْ أَهْلِ الْوَرَعِ لِأَنَّهُ لَا يَجُوزُ إتْلَافُ هَذَا الْمَالِ وَرَمْيُهُ فِي الْبَحْرِ فَلَمْ يَبْقَ إلَّا صَرْفُهُ فِي مَصَالِحِ   الْمُسْلِمِينَ وَاَللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ. (المجموع شرح المهذب)


இவ்வடிப்படையில், வட்டி எனும் கொடிய பாவத்தில் சிக்கிய ஒருவர் தனிப்பட்ட முறையில் மேல் குறிப்பிட்டதன் பிரகாரம் வட்டிப் பணத்திலிருந்து தன்னைச் சுத்தப்படுத்தி, தௌபா செய்து உடனடியாக அதிலிருந்து மீள வேண்டும். அவ்வாறு மீண்டதன் பின் மீண்டும் வட்டி சம்பந்தப்பட்ட எவ்வித கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபடாமல் இருப்பது கட்டாயமாகும்.


இதற்கு மாற்றமாக இவ்வாறான வட்டிப் பணங்களை ஒன்று திறட்டி, ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக பிரத்தியேக அமைப்பொன்றை உருவாக்குவது வட்டியை ஊக்குவிப்பதாகவே அமையும் என்பதால், இதைத் தவிர்த்து மக்களுக்கு உதவி செய்யும் நோக்கம் இருப்பின் சதகா போன்ற சுத்தமான பணங்களை மக்களிடமிருந்து எடுத்து தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும் என ஆலோசனை கூறுகின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ


பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


இத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் குறிப்பிட்ட சில காலங்கள் காத்திருப்பதாகும்.

اسم لمدة تتربص فيها المرأة لمعرفة براءة رحمها أو للتعبد أو لتفجعها على زوجها - (كتاب العدد -  مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج )


இத்தா அனுஷ்டிப்பது ஒரு இறை கட்டளையாகும். மேலும், கர்பிணியாக உள்ளாரா என்பதை விளங்குதல் மற்றும் கணவனுடைய பிரிவிற்காக கவலைப்படுதல் போன்ற காரணங்களும் இதில் உள்ளன.


ஒரு பெண் தாம்பத்திய உறவின் பின், தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனைப் பிரிந்தால், அப்பெண் மாதவிடாய் ஏற்படும் வயதுடையவராக இருந்தால் மூன்று சுத்தங்கள் இத்தா அனுஷ்டிப்பது அவசியமாகும்.


அதாவது, ஒரு பெண், தனது சுத்த காலத்தில்; மேற்கூறப்பட்ட ஏதாவதொரு முறையில் கணவனைப் பிரிந்தால், அந்த சுத்த காலத்துடன் சேர்த்து அடுத்து வரும் இரண்டு சுத்த காலங்கள் நிறைவடையும் வரை இத்தா இருத்தல் வேண்டும். அப்பெண் மாதவிடாய் காலத்தில் கணவனை விட்டும் பிரிந்திருந்தால் தொடர்ந்து மூன்று சுத்தங்கள் பூர்த்தியாகும் வரை இத்தா இருத்தல் வேண்டும்.

فإن طلقت طاهرا، وقد بقي من الطهر لحظة (انقضت بالطعن في حيضة ثالثة) لإطلاق القرء على أقل لحظة من الطهر وإن وطئ فيه (كتاب العدد - تحفة المحتاج في شرح المنهاج

தலாக் கூறப்பட்ட பெண்ணின் இத்தா பற்றி பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

“தலாக் கூறப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று சுத்தங்கள் நிறைவடையும் வரை எதிர்பார்த்தல் வேண்டும்.” (அல்-பகரா : 228)

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ  (البقرة : 228)

குல்உ மற்றும் பஸ்கு மூலம் பிரிந்த ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலமும் தலாக்குடைய இத்தாவைப் போன்றதே என்று ஷாபிஈ மத்ஹப் உட்பட பொரும்பாலான மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.

وأكثر أهل العلم يقولون: عدة المختلعة عدة المطلقة؛ منهم سعيد بن المسيب، وسالم بن عبد الله، وعروة، وسليمان بن يسار، وعمر بن عبد العزيز، والحسن، والشعبي، والنخعي، والزهري، وقتادة, وخلاس بن عمرو، وأبو عياض, ومالك، والليث، والأوزاعي، والشافعي، (فَصْل كُلّ فُرْقَةٍ بَيْنَ زَوْجَيْنِ فَعِدَّتُهَا عِدَّةُ الطَّلَاقِ - المغني لابن قدامة )


சில அறிஞர்கள், ஒரு தடவை மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் இத்தா முடிந்துவிடும் என்று கூறுகின்றனர். என்றாலும், இது சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமற்றதாகும்.


மேலும், வயோதிபத்தை அடைந்து, மாதவிடாய் ஏற்படும்; என்ற நம்பிக்கையை இழந்த ஒரு பெண்ணினதும், இதுவரை மாதவிடாய் ஏற்படாத ஒரு பெண்ணினதும் இத்தாவுடைய காலம் மூன்று சந்திர மாதங்களாகும்.


“உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாய் ஏற்படாது என நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாம்.” (அத்-தலாக் : 04)

وَاللائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلاثَةُ أَشْهُرٍ وَاللائِي لَمْ يَحِضْنَ [الطلاق: 4


மேலும், தாம்பத்திய உறவுக்கு முன் தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒரு முறையில் கணவனைப் பிரியும் பெண்ணுக்கு இத்தா இருப்பது கடமையாகாது.

يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهنَّ من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها. [ الأحزاب: 49]


கணவன் மரணித்த ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களுமாகும். இதற்கு தாம்பத்திய உறவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக திருமணத்திற்கான ஒப்பந்தம் நிகழ்ந்திருப்பது போதுமானது.

இதனை பின்ரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு மரணித்து விட்டால், அந்த மனைவிமார்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு "மரணத்திற்கான இத்தா" என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை முடித்துவிட்டால் (அவர்களில் மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங்களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதில் குற்றமில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்-பகரா: 234)

وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏. (البقرة: 234


ஒரு பெண், மேற்கூறப்பட்ட எந்தவகையான இத்தா கடமையை அனுஷ்டிப்பவராக இருந்தாலும், அப்பெண் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும்.

(عِدَّةُ الْحَامِلِ مِنْ حُرَّةٍ وَأَمَةٍ عَنْ فِرَاقِ حَيٍّ أَوْ مَيِّتٍ بِطَلَاقٍ رَجْعِيٍّ أَوْ بَائِنٍ (بِوَضْعِهِ) أَيْ الْحَمْلِ لِقَوْلِهِ تَعَالَى: {وَأُولاتُ الأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 4]  (كتاب العدد - مغني المحتاج إلى معرفة معاني ألفاظ المنهاج


கணவன் மரணித்ததன் பின் இத்தா அனுஷ்டிக்கும் ஒரு பெண் அலங்காரங்களை விட்டும் தவிர்ந்திருப்பது கட்டாயமாகும். தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனைப் பிரியும் ஒரு பெண் இத்தா அனுஷ்டிக்கும் போது அலங்காரங்களை விட்டும் தவிர்ந்திருப்பது சுன்னத்தாகும்.

ஒரு பெண் இத்தா இருக்கும் காலத்திற்குள் தனது கணவன் அல்லாத வேறொருவரை மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு மறுமணம் செய்து கொண்டால் அத்திருமண ஒப்பந்தம் செல்லுபடியற்றதாக ஆகிவிடும்.

அவளது கணவனையே மறுமணம் செய்து கொள்ள நாடினால் பின்வரும் ஒழுங்குகள் கவனிக்கப்படல் வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு தலாக்குகள் சொல்லப்பட்டவளாக இருந்தால், அவளது இத்தாவுடைய காலமாகிய மூன்று சுத்தங்கள் முடிவடைவதற்கு முன், தலாக் கூறிய அவளது கணவனுக்கு அவளை புதிய திருமண ஒப்பந்தம் எதுவுமின்றி மீட்டிக் கொள்ள முடியும். இத்தா முடிந்ததன் பின் மீட்டிக் கொள்வதாக இருந்தால் புதிய திருமண ஒப்பந்தம் அவசியமாகும்.

மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் அல்லது மூன்று தடவைகள் குல்உ செய்யப்பட்ட பெண் அதே கணவனை இத்தாவுடைய காலத்திலோ அல்லது இத்தா முடிந்ததன் பின்போ மறுமணம் செய்ய முடியாது. அவ்வாறு அவரை மீண்டும் மறுமணம் செய்வதாக இருந்தால், அப்பெண் இத்தாவை நிறைவு செய்ததன் பின்னர், வேறொருவரை உரிய முறையில் திருமணம் செய்து அவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதன் பின், விவாகரத்தின் மூலம் அல்லது கணவன் மரணிப்பதன் மூலம் பிரிந்தால், உரிய இத்தாவை நிறைவு செய்ததன் பின் மீண்டும் புதிய திருமண ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், முதலாவது அல்லது இரண்டாவது குல்உகள் செய்யப்பட்ட பெண் அல்லது பஸ்கு முறையில் கணவனை பிரிந்த பெண், இத்தாவுடைய காலத்திற்குள்ளும் அல்லது இத்தாவுடைய காலத்திற்குப் பின்னரும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் புதிய திருமண ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமாகும்.


وأما البائن التي تحل للزوج فهي المختلعة إذا كانت في عدتها يجوز للزوج أن يصرح بخطبتها؛ لأنه يحل أن يتزوجها في عدتها،  (الحاوي الكبير في فقه مذهب الإمام الشافعي


இவை இத்தா சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட சில சட்டங்களாகும். இது சம்பந்தமான விரிவான சட்டதிட்டங்கள் இஸ்லாமிய சட்ட நூற்களில் தெளிவாக உள்ளன. தேவையேற்படும் போது மார்க்க சட்டக் கலையில் தேர்ச்சி பெற்ற உலமாக்களிடம் விளக்கங்களை பெற்றுக் கொள்வது நல்லது என ஆலோசனை கூறுகின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.


மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் நிதியைக் கொண்டு அஹதிய்யாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்தலும், இத்தாபனங்களில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்களும் தொடர்பில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எமது ஆலோசனையை வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.07.14 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் வருமான வழிகள் பற்றி ஆரம்பம் முதல் சந்தேகத்துடன் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. எனினும், நாம் இவ்விடயத்தில் ஆலோசனை கூறு முன் ஊகங்களுக்கு அப்பால் மஹபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் வருமான வழிகள் பற்றி துறைசார்ந்தோரிடம் வினவியும், அதன் சட்டவாக்கத்தை நன்கு ஆராய்ந்தும் பார்த்ததில், அதன் பிரதான வருமான வழியாக லொத்தர் சீட்டிழுப்பு அமைந்திருப்பது தீர்க்கமாக தெரிய வந்துள்ளது. எனவே, இது போன்ற முறையற்ற வழிகளில் நிதிகளை சேர்க்கும் இவ்வமைப்பின் உதவிகளைக் கொண்டு அஹதிய்யாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களை அபிவிருத்தி செய்வதையும், இத்தாபனங்களில் கடமையாற்றும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்குவதையும் நாம் தவிர்த்துக் கொள்வது அவசியம் என்றே நாம் கருதுகின்றோம்.

குறிப்பாக புனித அல்-குர்ஆனை போதிக்கவும், இஸ்லாமிய சட்டங்களையும், ஒழுக்கநெறிகளையும் புகட்டவும் அமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ அல்லது அவைகளை மேம்படுத்த இது போன்ற நிதிகளை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவன் பொருந்தும் வழியில் நடத்துவானாக!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்கள் கிளையார்கள், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!


இரண்டு வயதை அடையாத ஒரு குழந்தை தாய் அல்லாத ஒரு பெண்ணிடம் ஐந்து தடவைகள் பால் குடித்துவிட்டால் அக்குழந்தைக்கு அந்தப் பெண் பால் குடித்தாயாக மாறுவதுடன் அப்பெண்ணின் கணவன் பால் குடித் தகப்பனாகவும் அவ்விருவரின் பிள்ளைகள் பால் குடிச் சகோதரர்களாகவும் மாறிவிடுவாரகள்.

عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: " كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ، بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ " رواه مسلم1452


ஒரு தடவை குழந்தை பால் குடித்துவிட்டது என்பதை குழந்தை பால் குடித்துவிட்டு மார்பிலிருந்து தானாக, வாயை எடுத்துவிட்டால் அது ஒரு தடவையாக கணிக்கப்படும். இவ்வாறு ஐந்து தடவைகள் குழந்தை பால் குடித்துவிட்டால் மேற்கூறப்பட்ட அனைவரும், பால் குடி உறவுடையோராக மாறுவதுடன், அவர்களைத் திருமணம் முடிப்பதும் ஹராமாகிவிடும்.

وشرطه رضيع حي لم يبلغ سنتين وخمس رضعات وضبطهن بالعرف فلو قطع إعراضا تعدد أو للهو وعاد في الحال أو تحول من ثدي إلى ثدي فلا. " كتاب الرضاع - منهاج الطالبن"


இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா ரஹிமஹ{ல்லாஹ் போன்ற சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்தாலும், அப்பால் குடி உறவுகள் மஹ்ரமாகுவதுடன், அவர்களைத் திருமனம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளனர்.

وقيل يكفي رضعة واحدة وهو مذهب أبي حنيفة ومالك لعموم قوله تعالى { وأمهاتكم اللاتي أرضعنكم } " كتاب الرضاع – مغنى المحتاج"


உங்கள் கேள்வியிலிருந்து விளங்கப்படுவதானது நீங்கள் உங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இரு தடவைகள் பால் குடித்துள்ளீர்கள் என்பதாகும்.


இதன் அடிப்படையில், இங்கு நீங்கள் தாயின் சகோதரியிடம் (சின்னம்மாவிடம்) இருந்து இரு தடவைகள் பால் குடித்த விடயம் உறுதியாக இருந்தாலும், ஐந்து தடவைகள் பால் குடிக்கவில்லை என்பதனால் நீங்கள் பால் குடித்த உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனை நீங்கள் திருமணம் முடிப்பது ஹராமாகாது.


என்றாலும், நாம் மேற்கூறியது போன்று சில மார்க்க அறிஞர்கள் ஒரு தடவை பால் குடித்து விட்டாலும் பால் குடி உறவு ஏற்பட்டு, திருமணம் முடிப்பது ஹராமாகிவிடும் என்று கூறியுள்ளதனால், உங்கள் தாயின் சகோதரியினது (சின்னம்மாவின்) மகனைத் திருமணம் முடிக்காமல் இருப்பது மிகவும் பேணுதலாகும். மேலும், இதனால் பின்னால் ஏற்படும் பல அசௌகரியங்களை விட்டும் தவிர்ந்துகொள்ள முடியும்.

( وَلَوْ شَكَّ هَلْ ) رَضَعَ ( خَمْسًا أَمْ ) الْأَفْصَحُ أَوْ ( أَقَلَّ أَوْ هَلْ رَضَعَ فِي الْحَوْلَيْنِ أَمْ بَعْدُ فَلَا تَحْرِيمَ ) لِأَنَّ الْأَصْلَ عَدَمُهُ وَلَا يَخْفَى الْوَرَعُ هُنَا وَحَيْثُ وَقَعَ الشَّكُّ لِلْكَرَاهَةِ حِينَئِذٍ كَمَا هُوَ ظَاهِرُ مَا مَرَّ أَنَّهُ حَيْثُ وُجِدَ خِلَافٌ يُعْتَدُّ بِهِ فِي التَّحْرِيمِ وُجِدَتْ الْكَرَاهَةُ وَمَعْلُومٌ أَنَّهَا هُنَا أَغْلَظُ لِأَنَّ الِاحْتِيَاطَ هُنَا يَنْفِي الرِّيبَةَ فِي الْأَبْضَاعِ الْمُخْتَصَّةِ بِمَزِيدِ احْتِيَاطٍ ثُمَّ فِي الْمَحَارِمِ الْمُخْتَصَّةِ بِاحْتِيَاطٍ أَعْلَى فَتَأَمَّلْهُ. " كتاب الرضاع  -تحفة المحتاج"


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

உடைகள் விடயத்தில் இஸ்லாமிய வழிகாட்டல்கள் மிகத் தெளிவாக உள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றவர்கள் எவ்வகையான ஆடைகளை அணியமுடியும், எவ்வகையான ஆடைகளை அணியக் கூடாது என்பது பற்றிப் போதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.


இவ்வகையில், பெண்களின் ஆடைகள் பற்றிய சில வரையரைகளை இஸ்லாம் வகுத்துள்ளது.


1. பெண்கள்; அணியும் ஆடை இஸ்லாம் கூறும் பிரகாரம் தமது உடலை மறைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

2. கவர்ச்சியற்றதாக இருத்தல் வேண்டும்.

3. அணியும் ஆடை, அங்கங்களை எடுத்துக்காட்டும் வண்ணம் இல்லாமல் விசாலமாக இருத்தல் வேண்டும்.

4. அவ்வாடையின் துணி மெல்லியதாக இருத்தல் கூடாது.

5. மஹ்ரமல்லாத பிற ஆடவர்களைக் கவரும் அளவு கமழும் மணம் பூசாமல் இருத்தல் வேண்டும்.

6. ஆண்களது ஆடைகளுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது.


எனவே, இந்த நிபந்தனைகளைப் பேணியவாறு தமது ஆடைகளை அமைத்துக் கொள்வதே பெண்களது ஹிஜாப் என்பதன் பொருளாகும். இந்த ஹிஜாப் குறிப்பிட்ட தோற்றத்திலோ அல்லது நிறத்திலோ இருத்தல் வேண்டும் எனும் அவசியம் இல்லை.


என்றாலும், அதிகமான பெண்கள் கறுப்பு நிற ஆடைகளைத் தெரிவுசெய்து அணிகின்றனர். காரணம் கறுப்பு நிற ஆடைகள் சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான ஓரு ஆடையாகும் என்பதனாலும், இந்நிபந்தனைகளை உள்ளடக்கிய வகையில் கறுப்பல்லாத ஏனைய நிறங்களைத் தெரிவு செய்வதில் சிரமம் இருப்பதனாலுமாகும்.


ஸஹாபியப் பெண்கள் கூட கறுப்பு நிற ஆடைகளை அணிந்துள்ளனர் என்பதற்கு, சுனன் அபீ தாவூத் போன்ற கிரந்தங்களில் ஸஹீஹான ஹதீஸ்கள் ஆதரமாக உள்ளன.


பெண்கள் கறுப்பு நிற ஆடைதான் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனினும், சன்மார்க்கத்தில் கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்தியாக உள்ளடக்கிய, சாதாரண, அலங்காரத்தை விட்டும் தூரமான, ஓர் ஆடை என்பதனால், அது வரலாறு நெடுகிலும் அணியப்பட்டு வந்துள்ளது. எனவே, கறுப்பு நிற ஆடைகளை அணிவது விரும்பத்தக்கதேயாயினும், கறுப்பு நிறத்திக்குத் தோதுவான, கவர்ச்சியற்ற, அலங்காரத்தை விட்டும் தூரமான பழுப்பு, சாம்பல், மண் நிறம் போன்ற நிறங்களைத் தெரிவு செய்து அணிவதிலும் தவறில்லை.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ{.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


தலைமைத்துவப் பொறுப்பு என்பது ஒர் அமானிதமாகும். ஒருவருக்கு எத்தகைய பொறுப்பு கிடைத்தாலும் அது ஓர் அமானிதமான சுமையாகவே கருதப்படும். அதைப்பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்படும்.


பின்வரும் ஹதீஸ் இதை தெளிவுபடுத்துகின்றது.


عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا ، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ) قَالَ : وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ : ( وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ، وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ) . روى البخاري (893) – واللفظ له - ومسلم (1829)


“நீங்கள் அனைவர்களும் பொறுப்புடையவர்கள் கியாமத் நாளில் உங்கள் பொறுப்பிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.” நூல்: சஹீஹ் அல்-புகாரி - 893


இமாம் நவவி றஹிமஹ{ல்லாஹ் இந்த ஹதீஸின் விரிவுரையில் பின்வருமாறு விளக்கம் கூறுகின்றார்கள்.


" قَالَ الْعُلَمَاء : الرَّاعِي هُوَ الْحَافِظ الْمُؤْتَمَن الْمُلْتَزِم صَلَاح مَا قَامَ عَلَيْهِ  وَمَا هُوَ تَحْت نَظَره  فَفِيهِ أَنَّ كُلّ مَنْ كَانَ تَحْت نَظَره شَيْء فَهُوَ مُطَالَب بِالْعَدْلِ فِيهِ  وَالْقِيَام بِمَصَالِحِهِ فِي دِينه وَدُنْيَاهُ وَمُتَعَلِّقَاته " (شرح مسلم للنووي)


"பொறுப்புடையவர் என்பவர் நம்பிக்கைக்குரிய, பாதுகாக்கக்கூடிய, தான் பொறுப்பெடுத்த விடயத்தின் நலவுக்;காக செயற்படக்கூடியவராவார். தன்னுடைய கண்காணிப்புக்குக் கீழ் எது இருந்தாலும் அதிலே நீதமாகவும், இம்மை மறுமைக்கான நலவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் வேண்டப்படுவார்.”


இவ்வடிப்படையில், மஸ்ஜிதைப் பரிபாலிக்கும் பொறுப்பும் முக்கியம் வகிக்கின்றது. அல்லாஹ்வின் புனித இல்லமாகிய மஸ்ஜிதை நிர்வகிப்பது என்பது ஒரு பாக்கியமாக இருந்தாலும் அது மிகவும் பாரமான சுமையாகும் என்பதை நாம் அறிந்துகொள்ளல் வேண்டும். அல்லாஹ்வுடைய மாளிகையான மஸ்ஜிதில் இபாதத் செய்பவர்களுக்கான வசதிகளை சுய நலம் பாராமல் ஏற்படுத்திக் கொடுப்பது என்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.என்றாலும், அது பொறுப்பு என்பதனால் அதற்கென்று சில விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 


அல்லாஹ தஆலா அல்குர்ஆனில் மஸ்ஜிதை நிர்வாகம் செய்பவர்கள் எவ்வாரு இருக்கவேண்டும் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறான்:


"إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين" التوبة : 18

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைபிடித்து ஸகாத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். அத்-தௌபா : 18


எனவே, அல்-குர்ஆனில் அல்லாஹ{ தஆலா குறிப்பிட்ட முஃமினான, தொழுகையை நிலை நாட்டும், (வசதி இருந்தால்) ஸக்காத் கொடுக்கும், அல்லாஹ்வை மாத்திரம் பயப்படும் தன்மை கொண்டவர்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே அடிப்படையாகும்.


அத்துடன் ஆணாக இருத்தல், பருவ வயதை அடைந்திருத்தல் போன்ற பொதுவான தன்மைகளுடன் நேர்மையாக நடந்துகொள்ளும் தன்மை உடையவராக இருத்தல் என்பதும் இன்றியமையாத ஒரு விடயமாகும். இது இவ்விடயத்தில் மட்டுமின்றி ஏனைய பொறுப்புகளைச் சுமப்பவர்களிடமும் இருக்கவேண்டிய பண்பாகும்.


நேர்மையாக இருப்பது என்பது பற்றி மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.


இமாம் நவவி றஹிமஹ{ல்லாஹ் “மின்ஹாஜுத் தாலிபீன்” இன் “ஷஹாதா” வுடைய பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.


"وَشَرْطُ الْعَدَالَةِ اجْتِنَابُ الْكَبَائِرِ، وَالْإِصْرَارِ عَلَى صَغِيرَةٍ" (كتاب الشهاداتஇ منهاج الطالبين)


நேர்மையாக இருப்பதற்கு பெரிய பாவங்கள், விடாப்பிடியாக இருக்கும் சிறிய பாவம் போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருத்தல் நிபந்தனையாகும்.
இமாம் மாவர்தி றஹிமஹ{ல்லாஹ் அல்-அஹ்காமுஸ் ஸ{ல்தானியாவில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


الْعَدَالَةُ، وَهِيَ مُعْتَبَرَةٌ فِي كُلِّ وِلَايَةٍ، وَالْعَدَالَةُ أَنْ يَكُونَ صَادِقَ اللَّهْجَةِ ظَاهِرَ الْأَمَانَةِ، عَفِيفًا عَنِ الْمَحَارِمِ، مُتَوَقِّيًا الْمَآثِمَ، بَعِيدًا مِنَ الرَّيْبِ، مَأْمُونًا فِي الرِّضَا وَالْغَضَبِ، مُسْتَعْمِلًا لِمُرُوءَةِ مِثْلِهِ فِي دِينِهِ وَدُنْيَاهُ، فَإِذَا تَكَامَلَتْ فِيهِ فَهِيَ الْعَدَالَةُ الَّتِي تَجُوزُ بِهَا شَهَادَتُهُ، وَتَصِحُّ مَعَهَا وِلَايَتُهُ، وَإِنْ انْخَرَمَ مِنْهَا وَصْفٌ مُنِعَ مِنَ الشَّهَادَةِ وَالْوِلَايَةِ، فَلَمْ يُسْمَعْ لَهُ قَوْلٌ وَلَمْ يَنْفُذْ لَهُ حُكْمٌ. (الباب السادس في ولاية القضاءஇ الأحكام السلطانية)


“நேர்மை என்பது பேச்சில் உண்மையாளராக, நம்பிக்கையாளராக, ஹராமானவைகளை விட்டும் தன்னை பாதுகாத்தவராக, பாவங்களை விட்டும் தற்காத்துக்கொண்டவராக, சந்தேகத்திற்கிடமானதை விட்டும் தூரமானவராக, கோபத்திலும் பொருத்தத்திலும் நம்பப்படக்கூடியவராகவும் …….இருத்தல் வேண்டும்.”


அதேபோன்று தன்பொறுப்பிற்கு தேவையான மார்க்க அறிவுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.


உடல் மற்றும் ஆத்மீக வலிமை பெற்றவராக இருப்பதும் தலைமைத்துவ பண்புகளில் மிக முக்கியமானதாகும்.


عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، أَلاَ تَسْتَعْمِلُنِي ؟ قَالَ : فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي ، ثُمَّ قَالَ : يَا أَبَا ذَرٍّ ، إِنَّكَ ضَعِيفٌ ، وَإِنَّهَا أَمَانَةُ ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ ، إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا ، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا. رواه مسلم.


அபூதர் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் தன்னைப் பொறுப்பாக்குமாறு நபி சல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, நபியவர்கள் அவரது தோளில் தட்டி “நீங்கள் பலவீனமானவர் அந்தப் பொறுப்பு அமானிதமானது. அதை முறையாக எடுத்து முறையாக நிறைவேற்றுபவரைத் தவிர மற்றோருக்கு கியாமத் நாளில் கேவலமும், அழிவுமாக அமையும்” என்று கூறினார்கள். நூல்: சஹீஹ{ முஸ்லிம், ஹதீஸ் எண் : 4746


தான் செய்யும் கடமைகளை உலக இலாபங்களின்றி அல்லாஹ்வுக்காக மட்டும் செய்யக் கூடிய இறையச்சம் உள்ளவர்களாக இருப்பதும் அவசியமாகும்.


இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ளவர்களே மஸ்ஜித் நிர்வாகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவேண்டும். அத்தகையவர்களே பொறுப்புக்களை ஏற்றுச் செய்யத் தயாராக வேண்டும்.


மேலும், மஸ்ஜிதை நிர்வாகம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படுவோர் தமது வருமான வழிகளையும் ஹலாலான வழியில் ஈட்டிக்கொள்பவரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது தெரிவுசெய்பவர்களது கடமையாகும்.

 

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ

பெண் ஆசிரியை ஆண் மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய ஆகக் கூடிய வயதெல்லை பற்றிய விளக்கம்; 


பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறு பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே சன்மார்க்க பழக்க வழக்கங்களோடு நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர்க்கப்பட வேண்டும். மாணவர்களை ஒழுக்க சீலர்களாக வளர்க்கும் விடயத்தில் கல்விக்கூடங்களின் பங்களிப்புகளும் அளப்பரியதாகும்.


ஒரு பெண் ஆசிரியை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு - அதாவது பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு இல்லாத, அதைப்பற்றிய அறிவில்லாத சிறார்களுக்குக் - கல்வி கற்றுக் கொடுப்பதில் தவறில்லை. இருப்பினும், அம்மாணவர்கள் எப்பொழுது பருவ வயதை அடைவார்களோ அல்லது பருவ வயதை அண்மித்து, பெண்களின் அழகைப் பார்க்கவேண்டும் என்ற உணர்வு உண்டாகும் வயதை அடைவார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஆண் ஆசிரியர்களைக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு நியமித்தல் வேண்டும்.


அல்லாஹ தஆலா அல்-குர்ஆனில் பெண்கள் தங்களது அழகை மறைக்கத் தேவையில்லாத ஆண்களைப் பட்டியலிடும் போது பின்வருமாறு கூறுகின்றான்.


(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு
ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.” (சூறதுன் நூர் : 31)


இந்த ஆயத்தின் மூலம், பெண்களின் மறைவான அவையங்களை அறிந்துகொள்ளக் கூடிய (மஹ்ரமில்லாத) பருவ வயதை அடையாத, ஆண்பிள்ளைகளுக்கு, பெண்கள் தமது அழகை வெளிப்படுத்துவது கூடாது என்பது தெளிவாகின்றது.


இமாம் ஜலாலுத்தீன் அல்-மஹல்லி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் மின்ஹாஜுடைய விரிவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.


“பருவ வயதை அண்மித்த சிறுவர்கள், மஹ்ரமில்லாத பெண்களைப் பார்ப்பதை விட்டும் தடுப்பது, அச்சிறுவர்களின் பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.”

وقال المحلي في شرح المنهاج : فيلزم الولي منعه من النظر إلى الأجنبية فيلزمها الاحتجاب منه لظهوره على العورات بخلاف طفل لم يظهر عليها، قال الله تعالى: أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاء.


இவ்வடிப்படையில் நோக்கும் போது, பருவம் அடைந்த ஆண் மாணவர்களுக்கு மஹ்ரமில்லாத பெண் திரையின்றி கற்பிப்பது கூடாதது போன்று, பருவம் அடையும் வயதை அண்மித்துள்ள ஆண் மாணவர்களுக்கும் பெண் ஆசிரியை திரையின்றி கற்பிப்பது கூடாது என்பது தெளிவாகின்றது.


பருவம் அடைய அண்மித்த வயது என்பது பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வயதாகும். இக்கூற்றுக்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.


‘உங்கள் பிள்ளைகள் 7 வயதாகும் பொழுது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். 10 வயதாகியும் அவர்கள் தொழாவிட்டால் அவர்களை அடித்துத் தொழ வையுங்கள். மேலும், அவர்களை படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்.’ என்று நபி அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாக அம்ருப்னு சுஐப் (றழியல்லாஹ{ அன்ஹ{) அறிவிக்கின்றார்கள். (சுனன் அபீதாவுத் - 495)

عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم " مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع " سنن أبي داؤود" رقم الحديث : 495 

ஒரு சிறுவன் எத்தனை வயதை அடைந்தால் அச்சிறுவனை விட்டும் பெண் தன்னை மறைக்க வேண்டும் என இமாம் அஹ்மத் ரஹிமஹ{ல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்ட போது பத்து வயது என்று கூறினார்கள்.

قد جاء في الشرح الكبير لابن قدامة: قيل لأبي عبد الله: متى تغطي المرأة رأسها من الغلام؟ قال: إذا بلغ عشر سنين (كتاب النكاح)


பதினைந்து வயது பூர்த்தியாகுதல் அல்லது ஸ்கலிதம் ஏற்படுதல் இவற்றுடன் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுதல் அல்லது கருத்தரித்தல் என்பவை பருவ வயதை அடைந்தமைக்கான அடையாளங்களாகும்.

والبلوغ باستكمال خمس عشرة سنة أو خروج المنى ووقت إمكانه استكمال تسع سنين ونبات العانة يقتضي الحكم ببلوغ ولد الكافر لا المسلم في الأصح وتزيد المرأة حيضا وحبلا. "كتاب الحجر – منهاج الطالبين"


எனவே, பருவமடைந்த அல்லது பருவ வயதை அண்மித்த ஆண் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களும் பெண் மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகளும் நியமிக்கப்படல் வேண்டும்.


எனினும், சூரத்துல் பாதிஹா போன்ற கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள், மற்றும், திரைக்குப் பின்னால் இருந்து கற்றுக் கொடுப்பது சிரமமாக இருக்கும் கைத்தொழில்கள் ஆகிய விடயங்களில் மாத்திரம், பெண்களுக்கு மஹ்ரமான ஆண்களோ அல்லது ஆண்களுக்கு மஹ்ரமான பெண்களோ கற்பிப்பதற்கு இல்லாத சந்தர்ப்பங்களில் திரையின்றிக் கற்றுக்கொடுக்க அனுமதியுண்டு என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ


அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அன்புடையீர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


ஹர்த்தால், ஆர்ப்பாட்டம் செய்வது சம்பந்தமாக இஸ்லாமிய வரையறைகள் பற்றி கடந்த 02.07.2014 நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலும், 20.11.2014 அன்று நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் விடயங்கள் முடிவு செய்யப்பட்டன.


எந்தவொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிக்க முடியுமாக இருந்தால், அதனையே முற்படுத்துதல் வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது.


பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் தமது காரியங்களைச் சாதிக்க முடியாத பட்சத்தில், பிறருக்கு எவ்விதத்திலும் பாதிப்பு, இடையூறு இல்லாத வண்ணம் தமது கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமாயின் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடையில்லை.


ஏனெனில், ஆர்ப்பாட்டம் என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட, பொதுவான கோரிக்கைகளை ஜனநாயக நாடுகளில் வென்றெடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு யுக்தியாகும்.


அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதாயின், பின்வரும் விடயங்களைக் கவனிப்பது அவசியமாகும்.


01. ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படக்கூடிய பிரயோசனங்களை விட அதனால் ஏற்படும் கெடுதிகள் அதிகமாக இல்லாதிருத்தல்.
02. ஆர்ப்பாட்டத்தின் மூலம் உயிர்கள் மற்றும் உடமைகள் போன்றவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருத்தல்.
03. ஆர்ப்பாட்டத்தின் மூலம் மக்களின் அன்றாட நடவடிக்கைகளான தொழில், கல்வி, பயணம் போன்றவைகள் ஸ்தம்பிதம் ஆகாமலிருத்தல்.
04. ஆர்பாட்டத்தின் மூலம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருத்தல்.
05. ஆர்ப்பாட்டத்தின் போது, பொது தனியார் அமைப்புக்கள் நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றிற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழையாதிருத்தல்.
06. ஆர்ப்பாட்டம் செய்வதற்கு விருப்பமில்லாதவர்களை ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைக்கும்படி வற்புறுத்தாமல் இருத்தல்.
07. ஆர்ப்பாட்டத்தின் மூலம் வன்முறைகள் உருவாகி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருத்தல்.
08. சில குறிப்பிட்ட நபர்களின் சொந்த இலாபங்கள், மறைமுகமான நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
09. பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருத்தல்.
10. கொடும்பாவி எரித்தல் போன்ற சன்மார்க்கத்திற்கு முரணான விடயங்களைத் தவிர்த்தல்.
11. ஆர்ப்பாட்டம் ஊருடைய பொது விடயம் சம்பந்தமாக இருந்தால், அவ்வூர் ஆலிம்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தல்.
12. ஆர்ப்பாட்டத்திற்கென்று நாட்டில் உள்ள சட்டவரையறைகளை மீறாதிருத்தல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கேள்வி 01 :
அந்நிய பெண்கள் (பிறமதத்தவர்கள்) தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டு வரும்போது எங்கள் பள்ளிவாசலுக்கு முஸல்லா, மின்குமிழ், காபட் போன்ற அன்பளிப்புக்களை தருகின்றார்கள். அவைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பதில் :
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதுக்கு வழங்கும் அன்பளிப்புகள், இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.

கேள்வி 02 :
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று திரும்பிவரும் பெண்கள் (முஸ்லிம் உட்பட) தனிப்பட்ட ரீதியில் நமக்குத்தரும் அன்பளிப்புப் பொருட்களை நாம் ஏற்றுக்கொள்வது கூடுமா?
பதில் :
முதலாவது கேள்விக்கு அளிக்கப்பட்;ட பதில் போன்றே, அவர்களது அன்பளிப்புகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி, சூது போன்றவைகளால் ஈட்டப்பட்டதாக இல்லாவிட்டால், அவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.

கேள்வி 03 :
மஸ்ஜித் மின்சக்தியால் (இமாம், முஅல்லிம், சேவையாளர்கள்) தவிர்ந்த ஏனையவர்கள் கைத்தொலைபேசிகளுக்கு மின்றேற்றுவது கூடுமா?

பதில் :
மஸ்ஜிதின் மின் சக்தியைப் பயன்படுத்திப் பொதுமக்கள் தொலைபேசிகளுக்கு மின் ஏற்றுவது, மஸ்ஜித்களைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்களது அனுமதியைப்பொருத்து வித்தியாசப்படும். ஏனெனில், மஸ்ஜித்களைப் பரிபாலனம் செய்வதற்கான செலவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஊர் மக்களினால் அவர்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர்.

மஸ்ஜித் நிர்வாகிகள், மஸ்ஜிதில் தொலைபேசிகளை மின்னேற்றுவது கூடாது என்று கூறியிருந்தால், அல்லது அது சம்பந்தமாக ஏதாவது அறிவித்தல்கள் மஸ்ஜிதில் தொங்கவிடப்பட்டிருந்தால், மஸ்ஜிதின் மின்சாரத்தைப் பாவிப்பதற்கு அனுமதியில்லை.
அவ்வாறு, மஸ்ஜிதின் மின்சாரத்தைத் தொலைபேசிக்கு மின்னேற்றுவதற்காக மஸ்ஜித் நிர்வாகிகள் அனுமதியளித்தால் பயன்படுத்தலாம். என்றாலும், மஸ்ஜிதில் மின்னேற்றுவதற்காக நியாயமான ஒரு தொகையை மஸ்ஜிதின் செலவுகளுக்காக உள்ள உண்டியலில் வைத்துவிடுவது நல்லது.

கேள்வி 04 :
எங்கள் கிராமத்துப் பள்ளிவாயலுக்குச் சொந்தமாக சிறு தொகுதி வெற்றுக்காணி உள்ளது அதில் தனிப்பட்ட ரீதியாக விவசாயம் செய்ய முடியுமா? அப்படியானால் ஒப்பந்தம், முதலீடு, இலாபப்பங்கீடு எவ்வாறு அமைய வேண்டும்.
பதில் :
மஸ்ஜிதுக்குச் சொந்தமான வெற்றுக் காணியை மஸ்ஜித் நிர்வாகிகளின் அனுமதியுடன் சந்தை விலைக்கு தனிப்பட்ட ஒரு நபர் வாடகை செலுத்தி விவசாயம் செய்வதற்கு அனுமதியுண்டு. செலுத்தப்படும் வாடகையே மஸ்ஜிதுக்கு இலாபமாக அமையப்பெறும். வாடகைக்கு கொடுக்கப்படும் காலம் மூன்று அல்லது அதைவிடக் குறைவான காலமாக இருப்பது சாலச்சிறந்தது. ஏனெனில் இதனால் ஏற்படும் பல சட்டப்பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளலாம்.

கேள்வி 05 :
பள்ளிவாசல்களில் ஏலம் விடப்படும் பொருட்களை விலைக்கு வாங்கி உபயோகிக்கலாமா?
பதில் :
ஒரு பொருளை ஏலம் முறையில் விற்பனை செய்வது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட முறைமைகளில் ஒன்றாகும். இதற்கு கீழ்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.


حديث أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَاعَ حِلْسًا ( بساط للأرض أو كساء لظهر الدابة ) وَقَدَحًا وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَا الْحِلْسَ وَالْقَدَحَ فَقَالَ رَجُلٌ أَخَذْتُهُمَا بِدِرْهَمٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَزِيدُ عَلَىمٍ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ فَأَعْطَاهُ رَجُلٌ دِرْهَمَيْنِ فَبَاعَهُمَا مِنْهُ . رواه الترمذي دِرْهَ


“நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் விரிப்பொன்றையும் பாத்திரம் ஒன்றையும் விற்பதற்காக, இவற்றை யார் வாங்குவது என்று கேட்டார்கள். அதற்கு ஒரு மனிதர், நான் அவற்றை ஒரு திர்ஹத்திற்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் ஒரு திர்ஹத்தை விட அதிகமாக யார் எடுப்பது என்று கேட்டார்கள். இன்னுமொரு மனிதர் நான் இரண்டு திர்ஹங்களுக்கு எடுக்கின்றேன் எனக் கூறினார். நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவருக்கு அவ்விரண்டையும் விற்றார்கள்.” (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல் : திர்மிதி)

மஸ்ஜிதுக்காக வக்ப் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடாது. என்றாலும், இத்துப்போன பாய்போன்ற, பாவனைக்கு உதவாத வக்ப் செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஸதகாவின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களாக இருந்தால் அவற்றை விற்பனை செய்யலாம். அதன் வருமானத்தை மீண்டும் மஸ்ஜிதின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.

ஏலம் செய்யும் பொழுது மஸ்ஜிதிற்குள் இல்லாமல், அதன் வெளி வளாகத்தில் அல்லது வேறு இடத்தில் வைத்துக்ககொள்ளல் வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கறிந்தவன். 

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹ