இதை மதிப்பிடுங்கள்
(4 votes)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் உழ்ஹிய்யாப் பிராணியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'அன்ஆம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். (சூரத்துல் ஹஜ் : 27,28)  'அன்ஆம்' என்பதன் கருத்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே குறிக்கும் என்று அறபு மொழி வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.

மேலும், உழ்ஹிய்யா ஏனைய சதகாக்களைப் போன்று ஒரு பிரத்தியேக அமலாகும். அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், இவ்வமலைப் பற்றி பல இடங்களில் கூறியுள்ளான்.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (الكوثر : 2)

'உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.'

மேலும், இன்னுமொரு வசனத்தில் :

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ  (الأنعام : 162)

நீர் கூறும்: 'நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.'

இவ்விரு வசனங்களிலும் குர்பான் கொடுப்பது, பணத்தை ஸதக்கா கொடுப்பதைப் போன்ற ஒரு தனியான அமலாகும் என்பது தெரியவருகிறது. அது தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டதிலிருந்து அதன் முக்கியத்துவம் இன்னும் தெளிவாகின்றது.

பொதுவாக சதகா செய்வது பற்றி ஆர்வமூட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிரத்தியேகமாக குர்பானியும் கொடுத்துள்ளார்கள். மேலும், 'ஹஜ்ஜுப் பெருநாளுடைய தினத்தில் நிறைவேற்றும் அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது குர்பான் கொடுப்பதாகும்'  என்றும் கூறியுள்ளார்கள்.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றியுள்ள பல சட்டங்களையும், உழ்ஹிய்யாப் பிராணிகளின் வயது, எப்பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது கூடாது போன்ற பல விடயங்களையும் மிக விரிவாகக் கூறியுள்ளார்கள். அவர்கள் உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா செய்யலாம் என்று எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அவர்களைப் பின்பற்றிய சஹாபாக்களும் இவ்வாறே செய்து வந்துள்ளார்கள்.

உழ்ஹிய்யாவின் பெறுமானத்தை ஸதக்காவாக கொடுக்க முடியும் என்று இப்னு அப்பாஸ் மற்றும் பிலால் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைத் தொட்டும் சில அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு அறிவிப்பில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், தனது அடிமையிடம் இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து இதற்கு இறைச்சி வாங்கி உங்களை சந்திப்பவரிடம் 'இது இப்னு அப்பாஸ் அவர்களின் உழ்ஹிய்யா என்று கூறி கொடு' என்று கூறி அனுப்பினார்கள்; என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்கூற்றின் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலவீனமானதாகும். இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபுல் மஃஷர் அல் மதனீ என்பவர் மிகவும் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு இது உறுதியான கூற்று என்று எடுத்துக் கொண்டாலும், 'உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாயம் என்ற கருத்;து அக்காலத்தில் சிலரிடம் இருந்துள்ளதால் இதை மறுக்கும் முகமாகவே மேற்கூறிய கருத்தை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் என்று இமாம்; ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.   அதாவது நான் உழ்ஹிய்யாக் கொடுக்கவில்லை. ஏனெனில் அது கடமையான ஒரு விடயமல்ல. இரண்டு திர்ஹம்கள் மட்டுமே ஸதகாவாகக் கொடுத்தேன் என்பதே இவர்களது கூற்றின் விளக்கமாகும். 

இன்னும் சிலர் இதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றனர்;:

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிராணியை குர்பான் கொடுக்கும் வழக்கம் இருந்தது. உழ்ஹிய்யாவுடைய தினமன்று அவர்களிடம் இரண்டு திர்ஹம்களைத் தவிர உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வேறு எந்த ஒன்றும் இருக்கவில்;லை. அந்த இரண்டு திர்ஹம்களையும் ஸதகாவாகக் கொடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

மேலும், பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஒரு கோழியையேனும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தாலும் நான் பொறுட்படுத்த மாட்டேன். உழ்ஹிய்யாவுடைய பெறுமதியை ஒரு ஏழைக்குக் கொடுப்பது உழ்ஹிய்யாக் கொடுப்பதை விட சிறந்ததாகும்.' எனக் கூறினார்கள் என்ற விடயமும் சில அறிவிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே சம்பவம் இன்னுமொறு அறிவிப்பில், இதை பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்களா அல்லது ஸுவைத் பின் கغபலா என்பவர் கூறினாரா என்ற சந்தேகத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ மற்றும் கியாஸ் என்பவையாகும். 'சஹாபாக்களின் சொல் அல்லது செயல்' அடிப்படை மூலாதாரமாகக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சில அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ மற்றும் கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படை விதியாகும்.

ஹனபி,  ஷாபிஈ  மற்றும் ஹன்பலி  ஆகிய மத்ஹப்களின் அறிஞர்களும் உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமானத்தை சதகா செய்தால் உழ்ஹிய்யாவின் நன்மை கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதுவே மாலிக்கி மத்ஹபில்  அங்கீகரிக்கப்பட்ட கருத்துமாகும்.

இவ்வடிப்படையில், ஆடு, மாடு, ஒட்டகத்தையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தல் வேண்டும். அதுவல்லாமல் உழ்ஹிய்யாப் பிராணியின் பெறுமதிக்குரிய பணத்தை ஸதகாச் செய்வதன் மூலம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது.

உழ்ஹிய்யா கொடுக்க விரும்புவோர் தாம் வாழும் பிரதேசங்களில் உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாத நிலை இருக்குமென்றால், உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு முடியுமான பிரதேசங்களை இனங்கண்டு அங்கு உழ்ஹிய்யாவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2019/15-366
 • கேள்வி

  உழ்ஹிய்யாவுக்குரிய பணத்தை ஸதக்கா செய்வதால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா?

 • Fatwa Summary ஆடு, மாடு, ஒட்டகத்தையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தல் வேண்டும். அதுவல்லாமல் உழ்ஹிய்யாப் பிராணியின் பெறுமதிக்குரிய பணத்தை ஸதகாச் செய்வதன் மூலம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)

உழ்ஹிய்யா இஸ்லாத்தின் முக்கியமான அமலாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் இன்னும் சிலர் முக்கியமான சுன்னத் என்றும் கூறுகின்றனர். பொதுவாக ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆட்டையே உழ்ஹிய்யவாகக் கொடுக்க வேண்டும். அவையல்லாத எப்பிராணியையும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தால் உழ்ஹிய்யா நிறைவேறாது. இதற்கு அல்-குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஜ்மாஃ ஆகியவை ஆதாரங்களாக உள்ளன.

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் சூரத்துல் ஹஜ் 27 மற்றும் 28 ஆவது வசனங்களில் உழ்ஹிய்யாப் பிராணியைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது 'அன்ஆம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

'அன்ஆம்' என்பதன் கருத்து ஆடு, மாடு, ஒட்டகம் என்பதாகும் என்று அரபு மொழி வல்லுனர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் அனைவரும் கூறியுள்ளனர்.

இதுபற்றி இமாம் காஸானி றஹிமஹுல்லாஹ் அவர்கள், அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் என்பதில் அரபு மொழி வல்லுனர்களுக்கு மத்தியில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார்கள். 

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றியுள்ள பல சட்டங்களையும் உழ்ஹிய்யாப் பிராணிகளின் வயது, எப்பிராணியை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பது கூடாது போன்ற பல விடயங்களையும் மிக விரிவாகக் கூறியுள்ளார்கள். அவற்றில் எங்குமே ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு எந்தப் பிராணியையும் கொடுக்கலாம் என்று கூறவில்லை.

இது மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் 'இஜ்மாஃ' வான ஏகோபித்த கருத்தாகும் என்று இமாம் நவவி , இமாம் கஸ்ஸாலி , இப்னு ருஷ்து , இப்னு அப்தில் பர்  றஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள்; கூறியுள்ளனர். மேலும், நான்கு மத்ஹப்களுடைய இமாம்களின் கருத்தும் இதுவாகும்.

ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத பிராணிகளையும் உழ்ஹிய்யாக் கொடுக்கலாம் என்ற கருத்து ஒரு சில சஹாபாக்களைத் தொட்டும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அக்கருத்தை ஏனைய சஹாபாக்களோ அல்லது நம்பத் தகுந்த தாபிஈன்களோ அல்லது மத்ஹப்களின் இமாம்களோ ஆதரிக்கவுமில்லை, அதை ஆதரமாக எடுக்கவுமில்லை. மாறாக அக்கருத்தை அனைவரும் நிராகரித்துள்ளனர்.

ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத ஏனைய பிராணிகளையும் உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம் என்று ஹிஜ்ரி 456ல் மரணித்த இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் என்பவரே மேற்குறித்த சில சஹாபாக்களின் கருத்தை மேற்கோள் காட்டி அவரது நூற்களில்;; குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இக்கருத்து அல்-குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஏனைய மூலாதாரங்களுக்கு மாற்றமாக இருப்பதால் இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்களது காலத்திற்கு முன்னால் உள்ள சஹாபாக்களோ அல்லது தாபிஈன்களோ அல்லது பிற்காலத்தில் வாழ்ந்த அறிஞர்களோ அக்கருத்தை அங்கீகரிக்கவில்லை.

மேலும், இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்களில் கியாஸை மறுக்கும் ழாஹிரீ மத்ஹபைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் முன்வைக்கும் பின்வரும் ஆதாரங்கள் அடிப்படையற்றது என்று மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

முதலாவது ஆதாரமாக ஜுமுஆடைய நாளில் நேரகாலத்துடன் மஸ்ஜிதிற்கு செல்பவருக்கு கிடைக்கும் நன்மை பற்றி வந்துள்ள ஹதீஸைக் கூறியுள்ளார்.

இந்த ஹதீஸில், ஜுமுஆவடைய தினத்தில் குளித்துவிட்டு மஸ்ஜிதிற்கு ஆரம்ப நேரத்திலேயே சமுகம் தருபவருக்கு ஒட்டகத்தை சதகா செய்யும்; நன்மையும், அதற்கு அடுத்து வருபவருக்கு மாட்டைக் சதகா செய்யும் நன்மையும், அதற்கு அடுத்து வருபவருக்கு ஆட்டை சதகாக் செய்யும் நன்மையும், அதற்கு அடுத்து வருபவருக்கு கோழியை சதகா செய்யும் நன்மையும், அதற்கு அடுத்து வருபருக்கு முட்டையை சதகா செய்யும் நன்மையும் கிடைக்கும் என்று வந்துள்ளது. 

இந்த ஹதீஸில் சதகா செய்தல் எனும் வார்த்தைக்கு அறபியில் قرّب என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கும் قرّب என்ற வார்த்தை அறபியில் பயன்படுத்தப்படும். எனவே, உழ்ஹிய்யாவிலும் ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத கோழி போன்றவற்றையும் கொடுக்கலாம் என்று இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்.

குர்பான் கொடுத்தல் என்பது அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கு கொடுக்கும் சதகாக்கள் அனைத்;திற்கும் கூறப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் கூறியது ஜுமுஆவுடைய தினத்தில் நேரகாலத்தோடு மஸ்ஜிதிற்கு செல்வதை ஆர்வமூட்டுவதற்கேயாகும். உழ்ஹிய்யா பற்றி இந்த ஹதீஸில் எதுவும் குறிப்பிடவில்லை. இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்துப்படி கோழியை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம் என்று வைத்துக்கொண்டால், முட்டையையும் உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம் என்றாகிவிடும்.

ஜுமுஆவுடைய தினத்தில் மஸ்ஜிதிற்கு நேர காலத்துடன் சமுகம் தருவதன் சிறப்பு பற்றிக் கூறப்பட்ட ஹதீஸை உழ்ஹிய்யாவிற்கு கியாஸ் (ஒப்புமை) செய்வது, கியாஸுடைய அடிப்படைகளுக்கே மாற்றமானதாகும்.

இரண்டாவது ஆதாரமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்ட பின்வரும் கூற்றைக் குறிப்பிடுகின்றார்.

அதில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், தனது அடிமையிடம் இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து இதற்கு இறைச்சி வாங்கி உங்களை சந்திப்பவரிடம் 'இது இப்னு அப்பாஸ் அவர்களின் உழ்ஹிய்யா என்று கூறி கொடு' என்று கொடுத்தார்கள். 

இதன் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலவீனமானதாகும். இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அபுல் மஃஷர் அல் மதனீ என்பவர் மிகவும் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு இது உறுதியான கூற்று என்று எடுத்துக்கொண்டாலும், 'உழ்ஹிய்யாக் கொடுப்பது கட்டாயம் என்ற கருத்;து அக்காலத்தில் சிலரிடம் இருந்துள்ளது. இதை மறுக்கும் முகமாகவே மேற்கூறிய கருத்தை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அனஹுமா அவர்கள் கூறினார்கள் என்று இமாம்; ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.   அதாவது நான் உழ்ஹிய்யாக் கொடுக்கவில்லை. ஏனெனில் அது கடமையில்லை. இரண்டு திர்ஹம்கள் மட்டுமே ஸதகாவாகக் கொடுத்தேன் என்பதே இவர்களின் கூற்றின் விளக்கமாகும். 

இன்னும் சிலர் இதற்கு பின்வருமாறு விளக்கமளிக்கின்றனர்;:

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிராணியை குர்பான் கொடுக்கும் வழமை இருந்து வந்ததுள்ளது. உழ்ஹிய்யாவுடைய தினமன்று அவர்களிடம் வெறும் இரண்டு திர்ஹம்களே இருந்தன. அன்று உழ்ஹிய்யாக் கொடுப்பதற்கு வேறு எந்த ஒன்றும் இருக்கவில்;லை. அந்த இரண்டு திர்ஹம்களையும் ஸதகாவாகக் கொடுப்பதே அவர்களின் நோக்கமாகும்.

மூன்றாவது ஆதாரமாக ஸுவைத் பின் கغபலா றஹிமஹுல்லாஹ்   அவர்கள் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கக்கூடிய பின்வரும் சம்பவத்தை இப்னு ஹஸ்ம் கூறியுள்ளார்.

பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'ஒரு கோழியையேனும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தாலும் நான் பொறுட்படுத்த மாட்டேன். உழ்ஹிய்யாவுடைய பெறுமதியை எடுத்து அதனை ஒரு ஏழைக்குக் கொடுப்பது உழ்ஹிய்யாவைக் கொடுப்பதை விட சிறந்ததாகும்.'

இதே சம்பவம் இன்னுமொறு கிரந்தத்தில், இதை பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்களா அல்லது ஸுவைத் பின் கغபலா என்பவர் கூறினார்களா என்ற சந்தேகத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் என்பவையாகும். 'ஸஹாபாக்களின் சொல் அல்லது செயல்' அடிப்படை மூலாதாரம் ஆகாது. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சிலது அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன் ஹதீஸ் இஜ்மாஃ கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படையாகும்.

அவ்வாறே, ஒவ்வொரு ஸஹாபாக்களின் தனிப்பட்ட கருத்துக்களையும் அமல் செய்வதென்றால் இது போன்ற பல தனிப்பிட்ட கருத்துக்கள் உள்ளன. அவற்றையும் அமல் செய்ய வேண்டிவரும்.

உதாரணமாக அபூதர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், அத்தியாவசிய தேவையை விட மிஞ்சிய சொத்துக்களை சேமித்து வைத்துக் கொள்வது ஹராம் என்று  மட்டுமல்லாமல் பெரும் பாவம் என்றும் கூறியுள்ளார்கள். இக்கருத்து ஏனைய அனைத்து சஹாபாக்களின் கருத்திற்கும் மாற்றமானதாகும்.

அவ்வாறே, தயம்மும் செய்யும் பொழுது கமுக்கட்டு வரை, இரு கைகளையையும் தயம்மும் செய்ய வேண்டும் என்பது அம்மார் இப்னு யாஸிர் றழியல்லாஹு அன்ஹு அவர்களது கருத்தாகும்.

இவ்வாறு சஹாபாக்களிடம் பல தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. அவை பெரும்பான்மை சஹாபாக்களால் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, இப்னு ஹஸ்ம் றஹிமஹுல்லாஹ் அவர்களுடைய இவ்வாதரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகின்றன.

இவ்வடிப்படையில்,  ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாதவற்றை உழ்ஹிய்யாக் கொடுக்கலாம் என்று வந்திருக்கக்கூடிய இப்னு அப்பாஸ், பிலால் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சம்பவங்கள் ஆதாரபூர்வமற்றவையாகும். அல்லது அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

தற்கால பத்வா அமைப்புக்களும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அறிஞர்களும் ஆடு, மாடு, ஒட்டகம், ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுத்தலவேண்டும் என்று கூறுகின்றனர்.

எனவே, ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றில் எதை ஒருவருக்கு உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வசதி இருக்குமோ அவர் அவற்றில் ஏதாவது ஒன்றை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம். அதுவல்லாத வேறு எதையும் உழ்ஹிய்யாவாகக் கொடுத்தால் உழ்ஹிய்யாவை நிறைவேற்றிய நன்மை கிடைக்கமாட்டாது, மாறாக ஸதகாகவின் நன்மையே கிடைக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2019/17-368
 • கேள்வி

  ஆடு, மாடு, ஒட்டகம் அல்லாத வேறு பிராணிகளை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாமா?

 • Fatwa Summary இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் என்பவையாகும். 'ஸஹாபாக்களின் சொல் அல்லது செயல்' அடிப்படை மூலாதாரம் ஆகாது. மாறாக அது துணை ஆதாரமாகும். சஹாபாக்களின் கருத்துக்களில் சிலது அவர்களது தனிப்பட்ட இஜ்திஹாதாகும். அவற்றில் எவை குர்ஆன் ஹதீஸ் இஜ்மாஃ கியாஸுக்கு மாற்றமாக அல்லது ஏனைய பெரும்பாலான ஸஹாபாக்களின் சொல் அல்லது செயலுக்கு மாற்றமாக இருக்குமோ அவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என்பது ஒரு அடிப்படையாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸகாத் விதியாகும் பொருட்களில் தானியங்களும் பழங்களும் அடங்கும். இதுபற்றி அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்.'

'அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தை  (ஸக்காத்தைக்) கொடுத்து விடுங்கள்.'

மேற்கண்ட வசனங்களில் பொதுவாக பூமியிலிருந்து வெளியாகக் கூடியவைகளுக்கு ஸகாத் வழங்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் எவ்வகையானவற்றிக்கு ஸகாத் வழங்க வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ மூஸா அல்-அஷ்அரீ மற்றும் முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் நீங்கள் கோதுமை, வாற்கோதுமை, திராட்சை மற்றும் ஈத்தம் பழம் ஆகிய நான்கு வகையிலிருந்தே தவிர ஸகாத்தை எடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். 

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள நான்கு வகையிலும் ஸகாத் கொடுப்பது கடமை என்பது மார்;க்க அறிஞர்களின் இஜ்மாஃ ஆகும்.

எனினும், மேற்குறிப்பிட்ட நான்கு வகைகள் தவிர்ந்த ஏனைய விளைபொருட்களில் ஸகாத் கடமையாகும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.

இமாம் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் நிறுக்க முடியுமான, சேமித்து வைக்கக்கூடிய தானியங்கள் மற்றும் பழவகைகளுக்கு ஸகாத் கடமையாகும் என்று கூறுகின்றார்கள்.

இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள், பூமியில் விளையும் அனைத்திற்கும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் மாலிக் றஹிமஹுமல்லாஹ் ஆகிய இருவரின் கருத்துப்படி, சேமித்து வைக்க முடியுமான, பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானியங்களுக்கே ஸக்காத் கடமையாகும்.

அந்த வகையில் கோதுமை, சோளம், அரிசி மற்றும் சேமித்து வைக்க முடியுமான,  உணவாக உட்கொள்ளக்கூடிய தானியவகைகளிலும், பழவகைகளில், திராட்சை மற்றும் ஈத்தம் பழங்களிலும் ஸகாத் கடமையாகும்.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் பழவகைகளில் திராட்சை மற்றும் ஈத்தம் பழம் தவிர்ந்த ஏனையவற்றிலும், தானியங்களில் சேமித்து வைக்கமுடியாத, பிரதான உணவாக உட்கொள்ளப்படாத தானியங்களிலும் ஸகாத் கடமையாக மாட்டாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாகும். அந்த வகையில் மரக்கறி மற்றும் தேங்காய் போன்றவற்றில் ஸகாத் கடமையாகாது.

பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துக்களுக்கு பின்வரும் ஹதீஸும் ஸஹாபாக்களின் கூற்றுக்களும் சான்றாக உள்ளன.

முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், யமனிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்;களிடம் கடிதம் மூலம் மரக்கறிக்கு ஸகாத் கடமையாகுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்;கள் அதில் கடமையாகாது என்று கூறினார்கள். (ஸுனன் அல்-திர்மிதி)  இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும், இதுவே அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்து என்று இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகின்றார்கள்.

உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'மரக்கறி வகைகளில் ஸகாத் கடமையில்லை' என்று கூறியுள்ளார்கள். இதே விடயம் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. (அல்-பத்ர் அல்-முனீர்)

மரக்கறி வகைகளில் ஸகாத் கடமையில்லை என்பது பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் துண்டிக்கப்பட்ட 'முர்ஸல்' வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் வித்தியாசமான பல அறிவிப்புத் தொடர்களில் வந்துள்ளதால் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துகின்றது என்று இமாம் பைஹகி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள். 

எனவே, மேற்கூறப்பட்ட ஆதாரங்களையும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து திராட்சை, ஈத்தம் பழம் தவிர்ந்த ஏனைய பழங்களிலும் மற்றும் தேங்காய் மரக்கறி வகைகள் போன்றவற்றிலும் ஸகாத் கடமையாகமாட்டாது. எனினும், ஸதகாவாக எவ்வளவும் கொடுக்கலாம்.

என்றாலும், இவை வியாபாரப் பொருட்களாக மாறி, நிபந்தனைகள் பூர்த்தியாகுமிடத்து ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அதாவது, வியாபாரம் ஆரம்பித்து ஒரு சந்திர வருடம் பூர்த்தியாகும் நேரத்தில், அவ்வியாபாரத்தின் விற்பனைப் பொருட்கள், கையிருப்புப் பணம் மற்றும் வரவேண்டிய வியாபாரக் கடன்கள் போன்றவற்றின் மொத்தத் தொகை ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவை (நிஸாபை) அடைந்திருந்தால்; ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அவ்வியாபாரம் ஆரம்பிக்கப்படும் பொழுது அதன் முதலீடு ஸகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) விடக் குறைவாக இருந்தாலும் சரியே.

ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) 85 கிராம் தங்கம் அல்லது 595 கிராம் வெள்ளியின் பெறுமதியாகும். இலங்கை நாணயத்தில் 13.03.2018 ஆந் திகதி பெறுமதியின் பிரகாரம் ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) தங்கத்தின் பெறுமதியில் ரூபாய் 561,000 உம், வெள்ளியின் பெறுமதியில் ரூபாய் 49,176 உம் ஆகும்.

தங்கம் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் வித்தியாசப்டுவதனால் ஸகாத் கடமையாகுவதின் ஆகக் குறைந்த அளவின் பெறுமதியில் வித்தியாசம் ஏற்படலாம். ஒவ்வொரு சந்திர வருடமும் ஸகாத் கொடுக்கும் பொழுது தனக்கு ஸகாத் கடமையாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ள குறிப்பிட்ட தினத்தின் தங்கம் வெள்ளியின் விலையை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏழைகளின் நலவுகளைக் கவனித்து வெள்ளியுடைய நிசாபை அடிப்படையாக வைத்து ஸக்காத்தை நிறைவேற்றிக்கொள்வது சிறந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2018/06-327
 • கேள்வி

  எமது பிரதேசங்களில் வருமானம் தரும் உற்பத்திப் பொருட்களில் தேங்காய், உப்பு, பழச்செய்கை போன்றன முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஸகாத் விதியாகும் பொருட்களில் இவற்றையும் சேர்ப்பதா இல்லையா என்பதில் எமது பிரதேச உலமாக்கள் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

  பொது மக்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ பத்வாவை வேண்டி நிற்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக கீழ்வரும் இரண்டு தலைப்புகளில் ஜம்இய்யாவின் பத்வாக்களை எழுத்து மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

  1.    நாம் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் ஸகாத் விதியாகுவது தொடர்பாக ஜம்இய்யாவின் தீர்ப்பு

   

  2.    ஸகாத் விதியாகாதெனில் அப்பொருட்களின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்கும் செல்வந்தர்கள் தமது பணத்திற்காக ஸகாத்தைக் கணிக்கும் முறைமை பற்றிய தெளிவு

  அல்லாஹு தஆலா எம்மனைவரினது நன்முயற்சிகளையும் தீன்பணிகளையும் கபூல் செய்து கொள்வானாக. ஆமீன்

 • Fatwa Summary முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், யமனிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கடிதம் மூலம் மரக்கறிக்கு ஸகாத் கடமையாகுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்;கள் அதில் கடமையாகாது என்று கூறினார்கள். (ஸுனன் அல்-திர்மிதி) இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடர் பலவீனமா இருந்தாலும், இதுவே அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்து என்று இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகின்றார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

'வக்ப்' என்பது நிலைத்திருந்து நன்மை கிடைக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். தனக்கு அல்லது இன்னும் ஒருவருக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஏதாவது ஒரு பொருளை அல்லாஹ்வுக்காக வக்ப் செய்ய முடியும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சஹாபாக்களை வக்ப் செய்யும் படி ஆர்வமூட்டியுள்ளார்கள். 

இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அவ்விடயமாக ஆலோசனை பெறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்றார்கள்.

'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள், 'நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள்.

அவ்வாறே உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் 'அதை (எவருக்கும்) விற்கக் கூடாது அன்பளிப்பாக வழங்கக் கூடாது வாரிசுச் சொத்தாகவும் பிரிக்கப்படக் கூடாது' என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அதன் வருமானத் தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், ஆடம்பரமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.) ஆதாரம் : சஹீஹுல் புகாரி – 2737

அவ்வாறே, வசதியுள்ள சஹாபாக்கள் அனைவரும் வக்ப் செய்து வந்துள்ளார்கள் என்று ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளதாக இமாம் இப்னு குதாமா றஹிமஹுல்லாஹ் தமது 'அல்-முக்னி' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஒருவர் தனியாக வக்ப் செய்ய முடியும்; என்பது போன்று, பல நபர்கள் இணைந்து கூட்டாகவும் வக்ப் செய்ய முடியும். வக்ப் செய்யும் பொழுது, வக்ப் சொத்தை யார் பராமரிக்க வேண்டும், அதன் வருமானத்தை எந்த முறையில் செலவழிக்க வேண்டும் என்பன போன்ற, நிபந்தனைகளையிட்டு வக்ப் செய்ய வேண்டும்.

அவ்வாறு வக்ப் செய்யப்பட்டுவிட்டால், கியாம நாள் வரை அது அல்லாஹ்வுக்குரிய சொத்தாகவே கருதப்படும்.  அதை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதும் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

வக்ப் செய்பவர்கள் குறிப்பிடும் சகல நிபந்தனைகளையும், குர்ஆன் ஹதீஸ்களின் வார்த்தைகளை மாற்ற முடியாதது போன்று, எவ்வித மாற்றமும் இன்றிப் பின்பற்ற வேண்டும் என்ற பொதுவான ஒரு விதி வக்பு சட்டங்கள் விடயத்தில் உள்ளது.

நீங்கள் உங்கள் கடிதத்தில், வக்ப் செய்வதற்கு விருப்பம் உள்ளவர்களது பணங்களை ஒன்று சேர்த்து, வக்பு நிதியம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சொத்துக்களை வாங்கி அல்லது கட்டிடங்களை நிறுவி வக்ப், செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா என்று கேட்டுள்ளீர்கள்.

இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. என்றாலும், குறிப்பிட்ட நிதியத்தின் மூலம் எப்பொருளை வாங்கப் போகின்றீர்கள் அல்லது தாபிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்யப்போகின்றீர்கள்;, அதை யார் மூலம் நிர்வகிக்கப்போகின்றீர்கள், அவர்கள் மரணித்ததன் பின் அதை நிர்வகிப்பவர்கள் யார் என்பனவற்றையும், நிதியத்துக்கு பணம் அல்லது பொருள் வழங்குபவர்களிடம் தெளிவாகக் கூறி அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

இது ஒரு பொறுப்பு வாய்ந்த அமானிதம் என்பதால், இவ்வமானிதத்தை முறையாகப் பாதுகாத்து அதன் நிபந்தனைகளைப் பேணி கருமம் ஆற்றுவதற்கு உங்களுக்குப் போதிய தகைமை இருந்தால் தான் இத்திட்டத்தைச் செய்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.

மேலும், வக்ப் சொத்துக்களைப் பராமரிக்கும் பணிகளுக்காக அச்சொத்துக்களின் வருமானங்களிலிருந்து ஆடம்பரமின்றியும் வீண்விரயமின்றியும் நியாயமான முறையில் செலவு செய்துகொள்ள முடியும்.

அத்துடன், வக்ப் சொத்துக்களை வக்ப் சபையில் பதிந்துகொள்வதும், எதிர்காலத்தில் வக்ப் சொத்துக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2018/01-322
 • கேள்வி

  இம்மடல் தங்கள் கரம் சேருகையில் தாங்கள் பரிபூரண சுகம் பெற்றிருக்க வல்ல றஹ்மான் துணை செய்வானாக.

  இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பொருளாதார சமூக விடயங்களில் தாங்களும் தங்களின் கண்ணியம் மிக்க உலமாக்கள் சபையும் கொண்டுள்ள வகிபங்கும் கரிசனையும் மிக மகத்தானதாகும்.

  இம்மடலூடாக நான் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விழையும் விடயமாவது என்னை தலைவராகக் கொண்ட சபையொன்றானது எமது பிரதேசத்தில் பெற்றோர் வக்ப் நிதியம் எனும் பெயரில் ஒரு நிதிசார்ந்த நிறுவனத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

  பிள்ளைகள் தமது பெற்றோருக்காகச் செய்கின்ற தான தர்மங்கள் ஷரீஅத்தின் பார்வையில் ஆகும் என்றிருப்பதால் அதனையே பிரதான வளமாகக் கொண்டு இந்நிறுவனம் செயற்படும். அதாவது பிள்ளைகள் தமது உயிரோடு இருக்கின்ற மற்றும் மரணித்த பெற்றோர்களுக்காக தம்மாலான இயன்ற அளவு நன்கொடையினை (பணத்தினை) இந்நிறுவனத்திற்கு வழங்குவர். இவ்வாறு பெறப்படுகின்ற நிதியினைக் கொண்டு அசையாச் சொத்துக்கள் வாங்கி அவை பெற்றோர் பெயரால் நிதியத்தின் மூலம் வக்ப் செய்யப்படும்.

  இவ்வக்ப் சொத்தினால் பெறப்படுகின்ற வருமானம் (உதாரணமாக வாடகைக்கு விடல்) இறைபாதையில் செலவு செய்யப்படும். மேலும் இவ்வருமானத்தில் ஒருசிறு பகுதி நிதியத்தின் நிர்வாகச் செலவுக்காகவும் பயன்படுத்தப்படும். இச்செயற்பாடு நிறுவனம் இயங்கும் காலம் வரைக்கும் தொடர்ச்சியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் இதுவே இந்நிறுவனத்தின் ஒழுங்கும் நோக்கமுமாகும்.

  கண்ணியமிக்கவரே! நான் மேலே விபரித்த நிறுவன முறைச் செயற்பாடு ஷரீஅத்தின் படி ஏற்புடையதாக அமையுமா? இதனை நாம் சமூகத்தில் அறிமுகம் செய்து நடவடிக்கையைத் 

  தொடரலாமா? அல்லது இதில் நாம் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமா? இவ்வாறான சந்தேகங்கள் எமது நிறுவனத்திற்கு உள்ளன.

  கண்ணியமிக்க உலமாக்களே! இது ஒரு சமூகம் சார்ந்த விடயமாக இருப்பதால் இது விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்தி எமது ஐயப்பாட்டினை தெளிவுபடுத்த உதவுமாறு நன்றியுடன் வேண்டிக்கொள்கின்றேன். வல்ல றஹ்மான் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக.

 • Fatwa Summary குறிப்பிட்ட நிதியத்தின் மூலம் எப்பொருளை வாங்கப் போகின்றீர்கள் அல்லது தாபிக்கப் போகின்றீர்கள் என்பதையும், அதன் வருமானத்தை எவ்வாறு செலவு செய்யப்போகின்றீர்கள், அதை யார் மூலம் நிர்வகிக்கப்போகின்றீர்கள், அவர்கள் மரணித்ததன் பின் அதை நிர்வகிப்பவர்கள் யார் என்பனவற்றையும், நிதியத்துக்கு பணம் அல்லது பொருள் வழங்குபவர்களிடம் தெளிவாகக் கூறி அவர்களது அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இது ஒரு பொறுப்பு வாய்ந்த அமானிதம் என்பதால், இவ்வமானிதத்தை முறையாகப் பாதுகாத்து அதன் நிபந்தனைகளைப் பேணி கருமம் ஆற்றுவதற்கு உங்களுக்குப் போதிய தகைமை இருந்தால் தான் இத்திட்டத்தைச் செய்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

மனைவி கணவனின்; விளை நிலம் ஆவாள். கணவன் விரும்பும் அனைத்து விதத்திலும்  அவளுடன்; இன்பம் அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. என்றாலும், மாதவிடாய், பிள்ளைப் பேறு காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளல்; மற்றும் அவளது ஆசன வாயில் உடலுறவு கொள்ளல் ஆகியவற்றை இஸ்லாம் தடுத்துள்ளது.

அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்.

'உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே, உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;.'

இவ்வடிப்படையில், கணவன், மனைவியுடன் சுகம் அனுபவிக்கும் போது அவளது மார்பிலிருந்து வெளியாகும் பாலை அருந்துவதில் தவறேதும் இல்லை என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

என்றாலும், ஹனபி மத்புடைய அறிஞர்கள், இரண்டு வயதை அடையாத குழந்தைகளுக்கே அல்லாஹ் பாலை ஹலாலாக்கியுள்ளான் என்பதால் கணவன் மனைவியின் பாலை மருந்து போன்ற காரணங்களுக்காகவே அன்றி, இன்பம் பெறும் நோக்குடன் அருந்துவது கூடாது என்று கூறுகின்றனர்.

மேலும், ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் இரண்டு வயதை அடைந்ததன் பின் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கு அனுமதி இருந்தாலும், இரண்டு வயதுடன் நிறுத்திக்கொள்வது விரும்பத்தக்கது என்றும் கூறுகின்றனர். இக்கருத்திலிருந்து கணவன் இன்பம் பெறும் நோக்கில் மனைவியின் பாலை அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்ற விடயம் தெரியவருகின்றது.  
எனினும், கணவன், மனைவியுடன் சுகம் அனுபவிக்கும் போது அவளது மார்பிலிருந்து வெளியாகும் பாலை அருந்துவதினால், அவ்விருவரும் பால் குடிக்கென்றுள்ள பிரத்தியேக சட்டங்களுக்கு உட்படமாட்டார்கள்.


அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ்.

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2017/41-318
 • கேள்வி

  உடலுறவின் போது மனைவியின் மார்பிலிருந்து வெளியாகும் பாலை கணவன் அருந்தலாமா?

 • Fatwa Summary மனைவி கணவனின்; விளை நிலம் ஆவாள். கணவன் விரும்பும் அனைத்து விதத்திலும் அவளுடன்; இன்பம் அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்துள்ளது. என்றாலும், மாதவிடாய், பிள்ளைப் பேறு காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளல்; மற்றும் அவளது ஆசன வாயில் உடலுறவு கொள்ளல் ஆகியவற்றை இஸ்லாம் தடுத்துள்ளது.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசைக்கு முந்திக் கொள்வதை இஸ்லாம் மிகவும் ஆர்வமூட்டியுள்ளது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்கள் அதான் சொல்வதிலும், ஜமாஅத் தொழுகையின் போது முன்வரிசையில் நின்று தொழுவதிலும் உள்ள சிறப்பை அறிவார்களானால், அதனை சீட்டுக் குலுக்கல் மூலம் தான் பெற்றுக் கொள்ள முடியும் என்றிருந்தாலும், அப்படியாவது பெற்றுக் கொள்ள முன்வருவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 746)
பொதுவாக ஆண்கள் எந்தப் பாகுபாடும் இன்றி முதல் வரிசையில் நின்று தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. இருப்பினும் மார்க்க விளக்கம் உள்ளவர்கள் முன்வரிசையில் நிற்பது மிகச் சிறந்ததாகும்.

 'உங்களில் அறிவிற் சிறந்தவர்கள் எனக்கு அருகில் முன்வரிசையில் நிற்கட்டும். பிறகு (அறிவில்) அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள் என்று அபூ மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் : 739)
இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்.
 
'மார்க்க விளக்கம் உள்ளவர்களை முன்வரிசைக்கு முற்படுத்துவதற்குக் காரணம், இமாமுக்கு தொழுகையில் ஏதேனும் மறதி ஏற்பட்டால், அவருக்கு அதனை உணர்த்தவும், இமாம்  தொழுகையை இடையில் முறித்து விட்டு வெளியேறிச் செல்லக்கூடிய சந்தர்ப்பத்தில் இமாமுக்குப் பகரமாக நின்று தொழுகை நடாத்துதல், தொழுகையின் செயல்முறைகளை நேரடியாக அவதானித்து அவற்றை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்வதற்குமேயாகும். மேலும், மார்க்க விளக்கம் உள்ளவர்களை தொழுகையில் மாத்திரம் அன்றி அனைத்து மஜ்லிஸ்களிலும் முற்படுத்துவது சுன்னத்தாகும்.'

தொழுகையை நடாத்தும் இமாம்;, முதல் வரிசையில் மேற்குறித்த மார்க்க விளக்கம் உள்ளவர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அவருக்குத் தொழுகையில் ஏதாவது ஏற்பட்டு தொழுகையை விட நேரிடும் போது தொழுகை நடாத்துவதற்காக இன்னும் ஒருவரை நியமிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

மஸ்ஜிதில் தொழுகைக்காக வயது வந்த ஆண்கள், சிறுவர்கள் (பருவ வயதை அடையாதவர்கள்) என அனைவரும் ஒரே நேரத்தில் சமுகமளித்திருந்தால், வயது வந்த ஆண்கள் முதலில் ஸப்புகளைப் பூர்த்தி செய்வதும், அதற்கடுத்து சிறுவர்கள் ஸப்புகளை நிறைவு செய்வதும் சுன்னத்தாகும்.

என்றாலும், சிறுவர்கள் முதல் வரிசைக்கு முந்திவிட்டால் அல்லது இகாமத் சொல்வதற்கு முன் முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்தால், அவர்களைப் பின் ஸப்புகளுக்கு அனுப்பி விட்டு பெரியவர்கள் முன் ஸப்புகளுக்குச் செல்வது கூடாது. இதனைப் பின்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது.

'உங்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டுப் பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம்.' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (சஹீஹு முஸ்லிம் : 2177)

எனவே, ஜமாஅத் தொழுகைக்காக முன்வரிசையைப் பூர்த்தி செய்யும் போது மார்க்க விளக்கம் உள்ளவர்கள், வயது வந்தவர்கள், சிறார்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் சமுகமளித்திருப்பின் மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி வரிசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜமாஅத் தொழுகை ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் முன்வரிசையில் முன்னதாகவே நின்று விட்டால் அவர்களைப் பின்னுள்ள வரிசைகளுக்கு அனுப்புவது கூடாது.  

என்றாலும், முதல் வரிசையில் நின்று தொழும் சிறார்கள் தொழுகையில் சேட்டை செய்து பின்வரிசையில் உள்ளவர்களது சிந்தனையைத் திருப்புபவர்களாக இருந்தால், அவர்களுக்கு அன்பாக உபேதசம் செய்து திருத்துதல் வேண்டும். அவ்வாறு உபதேசம் செய்தும், அவர்களது சேட்டை தொடருமென்றால் அவர்களைப் பின் வரிசைகளுக்கு அனுப்புவதில் தவறில்லை.

மேலும், தொழுகை, குத்பா, மற்றும் மார்க்க சபைகளில் அறிவில் உயர்ந்தவர்கள் ஏலவே சமுகமளித்து முன்வரிசைகளில் உட்கார்ந்திருப்பது சபையை அழகுபடுத்துவதுடன், சிறுவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்ததன் பின், மீண்டும் அவர்களை பின்வரிசைக்கு அனுப்புவதற்கான தேவையும் ஏற்படாதிருக்க உதவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2017/40-317
 • கேள்வி

  ஜமாஅத் தொழுகையில் முன்வரிசையில் நிற்கும் சிறுவர்களைப் பின்வரிசைக்கு அனுப்புதல்

 • Fatwa Summary ஜமாஅத் தொழுகைக்காக முன்வரிசையைப் பூர்த்தி செய்யும் போது மார்க்க விளக்கம் உள்ளவர்கள், வயது வந்தவர்கள், சிறார்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் சமுகமளித்திருப்பின் மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி வரிசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜமாஅத் தொழுகை ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் முன்வரிசையில் முன்னதாகவே நின்று விட்டால் அவர்களைப் பின்னுள்ள வரிசைகளுக்கு அனுப்புவது கூடாது.
இதை மதிப்பிடுங்கள்
(0 votes)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


புகைத்தல் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 023ஃயுஊதுருஃகுஃ2006 ஆம் இலக்க பத்வா ஒன்றை 2006.10.11ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அந்த பத்வாவில் புகைத்தலுக்குப் பயன்படுத்தப்படும் திரவியங்களில் ஒன்றான புகையிலை மூலம் பாரிய நோய்களும், தீங்குகளும் ஏற்படுகின்றன என்பதால், சிகரட் போன்றவைகளை புகைப்பதும் அதை விற்பனை செய்வதும் ஹராமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வடிப்படையில், ஷீஷாவிலும் புகையிலை பிரதானமாக உள்ளடங்குவதால், புகைத்தலுக்கு வழங்கப்பட்டுள்ள மார்க்கத் தீர்ப்பே ஷீஷாவுக்கும் பொருந்தும்.

புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பு


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு.

Additional Info

 • கேள்வி

  எமதூரில் ஷீஷா பாவனை வேகமாக அதிகரித்து வருகின்றது. இது தொடர்பான மார்க்க விளக்கங்கள் முறண்பட்டதாக காணப்படுகின்றன. உலமாக்களில் சிலர் ஹராம் என்றும் சில உலமாக்கள் ஹலால் என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, இது தொடர்பான மார்க்கத் தீர்ப்பினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 • Fatwa Summary புகைத்தல் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 023/ACJU/F/2006 ஆம் இலக்க பத்வா ஒன்றை 2006.10.11ஆம் திகதி வெளியிட்டுள்ளது. அந்த பத்வாவில் புகைத்தலுக்குப் பயன்படுத்தப்படும் திரவியங்களில் ஒன்றான புகையிலை மூலம் பாரிய நோய்களும், தீங்குகளும் ஏற்படுகின்றன என்பதால், சிகரட் போன்றவைகளை புகைப்பதும் அதை விற்பனை செய்வதும் ஹராமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


குளிப்புக் கடமையாகும் காரணங்களில், ஆணுறுப்பின் முற்பகுதி பெண்ணுறுப்பில் நுழைதல், மற்றும் ஆண் அல்லது பெண்ணுக்கு இந்திரியம் வெளியாகுதல் ஆகியவையும் உள்ளடங்கும்.
மேலும், ஆண் அல்லது பெண் இந்திரியம் வெளியானதற்காக, குளித்து சுத்தமானதன் பின் மீண்டும் இந்திரியம் வெளியானால், குளிப்பது அவசியம் எனும் விடயத்தில், மார்க்க அறிஞர்களிடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது.


இந்திரியம் வெளியான ஓர் ஆண் அல்லது பெண் தூங்கி எழுந்து அல்லது சிறுநீர் கழித்து குளித்ததன் பின்னர் மீண்டும் இந்திரியம் வெளியானால் அதற்காக இரண்டாவது தடவையும் குளிப்பது அவசியமில்லையென்றும், அவ்வாறு தூங்காமல் அல்லது சிறு நீர் கழிக்காமல் முதலாவது தடவை குளித்ததன் பின் மீண்டும் இந்திரியம் வெளியாகி இருந்தால் இரண்டாவது தடவையும் குளிப்பது கட்டாயமாகும் என்றும் இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் உள்ளிட்ட சில மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.


என்றாலும், ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களும் இன்னும் சில அறிஞர்களும், ஆணுக்கு இந்திரியம் வெளியாகிக் குளித்ததன் பின் மீண்டும் வெளியானால் குளிப்பது கட்டாயம் என்றும், பெண் விடயத்தில் பின்வரும் விளக்கத்தையும் குறிப்பிடுகின்றனர்.


உடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும்.
 
ஏனெனில், மனைவி உடலுறவில் தனது ஆசையைப் பூர்த்தியாக்கிக் கொண்டவளாக இருப்பதால், கணவனின் இந்திரியத்துடன் அவளது இந்திரியமும் கலந்தே வெளியாகும்.   என்றாலும், ஒரு பெண், தூக்கம் அல்லது மயக்கம் போன்ற, உடலுறவை உணராத நிலையில் உறவு கொள்ளப்பட்டால், உடலுறவு கொண்டதற்காகக் குளிப்பது கட்டாயமாகும். அவ்வாறு குளித்ததன் பின், மீண்டும் பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால், அது அவளது இந்திரியமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், குளிப்பது கட்டாயமில்லை.


அதே நேரம் பெண்ணுறுப்பிலிருந்து வெளிப்பட்டது இந்திரியமா அல்லது மதி, வதி போன்ற வேறு ஏதேனுமா என தெரியாவிட்டால், அதை இந்திரியமாகக் கருதிக் குளிக்கவும் முடியும். அல்லது அதை, மதி, வதியெனக் கருதி, சுத்தம் செய்துவிட்டு, வுழூ செய்து கொள்ளவும் முடியும்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2017/35-312
 • கேள்வி

  உடலுறவு கொண்டு குளித்து சுத்தமானதன் பின் இந்திரியம் அல்லது அது போன்ற ஒன்று வெளியானால் மீண்டும் குளிப்பது சம்பந்தமாக

 • Fatwa Summary உடலுறவுக்குத் தகுதியான வயதை அடைந்த ஒரு பெண், தூக்கம் மயக்கம் போன்ற நிலைகளில் அல்லாது, உடலுறவின் போது உச்ச நிலையை அடைந்து, குளித்து சுத்தமானதன் பின்னர், அவளது பெண்ணுறுப்பிலிருந்து இந்திரியம் வெளியானால் அவள் மீண்டும் குளித்துக் கொள்வது கட்டாயமாகும்.
இதை மதிப்பிடுங்கள்
(2 votes)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துணவர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும்  நடந்து கொள்ளுதல் வேண்டும். 'இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : ஸஹீஹு முஸ்லிம் : 1469)


மேலும், கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போன்று மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. அப்துல்லாஹ் இப்னு அம்ரு றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், இரவு முழுவதும் நின்று வணங்குவதில் ஈடுபட்ட காரணத்தினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உனது மனைவிக்குரிய கடமையும் உள்ளது' என்று அன்னாருக்குக் கூறினார்கள்.  
 
அதேபோன்று, சப்வான் இப்னு முஅத்தல் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவி  தொடர்ந்து சுன்னத்தான நோன்பு நோற்ற பொழுது அவர்கள் நோன்பு நோற்க வேண்டாம் என்று தண்டித்தார்கள். அதற்கு அப்பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறைப்பாடு செய்தார்கள். சப்வான் இப்னு முஅத்தல் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இது பற்றி விசாரித்த போது, அவர்கள் 'நான் வாலிபனாக இருக்கின்றேன். என்னால் உடலுறவை விட்டும் சகித்துக் கொள்ள முடியாது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். அப்பெண்ணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்து, கணவனின் அனுமதியின்றி சுன்னத்தான நோன்பு நோற்க வேண்டாம் என்று கூறினார்கள்.

 
இவ்விரு சம்பவங்களிலும், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளில் பராமுகமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகின்றது. மேலும், மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடைமைகளில் ஒன்று கணவன் உடலுறவுக்கு அழைக்கும் போது அதற்கு இணங்குவதாகும்.  இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.


கணவன் மனைவியை தனது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அழைத்தால் மனைவி அடுப்பங்கரையில் இருந்தாலும், அதற்கு அவள் இணங்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று தல்க் பின் அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : அத்திர்மிதி - ஹதீஸ் எண் : 1160)


மேலும், கணவன் மனைவியை உடலுறவுக்காக அழைக்கும் போது தகுந்த காரணம் இன்றி இணங்காமலிருப்பது அவள் மீது ஹராமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒருவர் தனது மனைவியை உடலுறவுக்காக அழைத்து, அதற்கவள் மறுத்து, கணவன் அவள் மீது  கோபித்த நிலையில் இரவைக் கழித்தால், அதிகாலை வரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல் : ஸஹீஹு முஸ்லிம்  - எண் : 1436)


இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் 'ஷரீஅத்தில் அனுமதியளிக்கப்பட்ட காரணங்களுக்காகவே அன்றி கணவன் மனைவியை உடலுறவுக்கு அழைக்கும் போது அவள் மறுப்பது ஹராம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.' என விளக்கம் கூறுகின்றார்கள்.  


ஆகவே, ஒரு பெண்ணுக்கு கடுமையான நோய், உடல் பலவீனம், போன்ற உடலுறவில் ஈடுபட முடியாத தகுந்த காரணங்கள் இருக்கும் நிலையில் கணவன் அழைத்தால் அவள் அதற்கு இணங்குவது கடமையாகாது.


என்றாலும், மனைவி தனது நிலைமையைக் கணவனுக்கு எடுத்துக்கூறி அவருடன் சுமுகமாகப் பேசி, முடியுமான அளவு உடலுறவு மற்றும் அதற்கு முன்னுள்ள விடயங்களில் ஒத்துழைப்பது அவளின் பொறுப்பாகும். அதேபோன்று கணவனும் மனைவியின் நிலைமைகளை விளங்கி அனுசரித்து புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

Additional Info

 • கேள்வி

  கணவன்  தன் மனைவியை ஒன்று சேருவதற்கு அழைக்கும் போது மறுப்பதற்கு மார்;க்கத்தில் அனுமதியுண்டா?

 • Fatwa Summary கணவன் மனைவியை உடலுறவுக்காக அழைக்கும் போது தகுந்த காரணம் இன்றி இணங்காமலிருப்பது அவள் மீது ஹராமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. ஒருவர் தனது மனைவியை உடலுறவுக்காக அழைத்து, அதற்கவள் மறுத்து, கணவன் அவள் மீது கோபித்த நிலையில் இரவைக் கழித்தால், அதிகாலை வரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றனர் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதை மதிப்பிடுங்கள்
(1 Vote)

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பொதுவாகக் குழந்தையைப் பாதுகாத்து வளர்ப்பதும் பராமரிப்பதும் தாய், தந்தை இருவரினதும் கடமையாகும். அவ்விருவரும் விவாகரத்து மூலம்; பிரிந்துவிட்டால் குழந்தையின் தாயே பராமரிப்புக்குத் தகுதியானவளாவாள்.

இதற்கான காரணம், குழந்தைப் பராமரிப்புக்கு ஆண்களைவிட பெண்களே தகுதியானவர்கள் என்பதாகும். ஏனெனில், அவர்கள் மிகவும் இரக்க சுபாவமுடையவர்கள், பராமரிக்கத் தெரிந்தவர்கள், பொறுமையுள்ளவர்கள், மேலும் அதிகமாகப் பிள்ளைகளுடன் சேர்ந்து இருப்பவர்கள்.  இதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறித்த குழந்தையைப் பராமரிப்பதற்கு தாயே (மறுமணம் செய்யாத பட்சத்தில்) தகுதியானவள் என்று கூறினார்கள்.
 
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்வந்து கூறினாள்: அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச்செல்ல நாடுகிறான் என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் றழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத் : 2276)

அவ்;வாறு, தாய் மறுமணம் செய்தல், மரணித்தல், பராமரிக்க மறுத்தல், கெட்ட குணமுடையவளாக இருத்தல், அல்லது சுய நினைவை இழப்பவளாக இருத்தல் போன்ற பராமரிக்கத் தகுதியான பண்புகள் இல்லாமல் இருக்கும் நிலைமைகளில், தாயின் தாய் அல்லது அவளின் தாய் (பாட்டி) போன்றவர்கள் பராமரிக்கத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.  

அவர்கள் இல்லாதவிடத்து, குழந்தையின் தகப்பன் தகுதியானவராகிவிடுவார். அவரும் இல்லாத பட்சத்தில் தந்தையின் தாய் அல்லது அவளது தாய் (பாட்டி) பராமரிப்புக்குத் தகுதியானவராவார்கள்.
 
என்றாலும், குழந்தை தனது காரியங்களைச் சுயமாகச் செய்ய, கருமங்களை பிரித்தறிய முடியுமான வயதை அடைந்ததன் பின், அக்குழந்தையின் விருப்பத்திற்கேற்ப தந்தையையோ தாயையோ தெரிவுசெய்யும் உரிமை அக்குழந்தைக்கு உண்டு. இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து யா ரஸுலல்லாஹ்! எனது தாயும் தந்தையும உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், எனது கணவன் எனது பிள்ளையை என்னிடம் இருந்து எடுத்துச் செல்வதற்கு நாடுகிறார். அப்பிள்ளை எனக்கு அபூ இனபா எனும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் தருகின்றான் என்று கூறினார். அதே நேரத்தில் அவளது கணவனும் அங்கு சமுகமளித்து என்னுடைய பிள்ளையை எடுப்பதற்கு யாரால் முடியும் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பிள்ளையைப் பார்த்து 'சிறுவனே இதோ உனது தாயும் தந்தையும் இருக்கிறார்கள். உனக்கு யார் விருப்பமோ அவரது கையைப் பிடித்துக்கொள்' என்று கூறினார்கள். அதற்கு அப்பிள்ளை தாயின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சென்றது. (நூல் : அபூ தாவூத் : 2277)

மேலும், ஒரு ஆண் பிள்ளை தனது தாயைத் தெரிவு செய்யும் போது, இரவு நேரத்தில் அவரிடமே இருப்பார்;. ஒழுக்கம், கல்வி, தொழில் விடயங்களில் வழிகாட்டலைப் பெறுவதற்குத் தனது தந்தையுடன் பகல் நேரத்தில் இருப்பார்.
அப்பிள்ளை பெற்றோர் இருவருடனும் இருப்பதாகக் கூறினால், சீட்டுக் குலுக்கல் மூலம் ஒருவர் பொறுப்பேற்பார். யாரையும் தேர்ந்தெடுக்காத சந்தர்ப்பத்தில் பராமரிப்பதற்குத் தாயே தகுதியாகுவாள்.  
 
அப்பிள்ளை பெற்றோரில் யாரைத் தெரிவுசெய்கின்றதோ, அவர் மற்றவருக்குப் பிள்ளையைப் பார்ப்பதற்கு அனுமதியளிப்பது அவசியமாகும். அவ்வாறு பார்ப்பதற்கு அனுமதியளிக்காமல் இருப்பது உறவைப்பிரிப்பதாகும்.  

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'தாயையும் குழந்தையையும் யார் பிரிப்பாரோ அல்லாஹு தஆலா மறுமையில் அவரை அவரது விருப்பத்துக்குரியவர்களை விட்டும் பிரித்துவிடுவான்' (சுனன் அல்-திர்மிதி)  என்றும், இன்னுமொரு ஹதீஸில், 'தகப்னையும் அவனது பிள்ளையையும் பிரிப்பவரை அல்லாஹ் சபிக்கின்;றான்' (நூல்: சுனன் இப்னி மாஜஹ்)  என்றும் கூறியுள்ளார்கள்.

மேலும், ஒரு பெண் பிள்ளை தந்தையைத் தெரிவு செய்யும் போது அதன்; பாதுகாப்பைக் கருதி அப்பிள்ளையை வெளியில் அனுப்பாமல், தாயே அப்பிள்ளையைச் சந்திக்கச் செல்வது மிகவும் ஏற்றமானதாகும்.

பெற்றோரில் ஒருவர் மற்றவருக்குப் பிள்ளையைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்குதல் வேண்டும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அனுமதி வழங்குவது கட்டாயம் என்றும், வீடு சமீபமாக இருந்தால் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்குவது அவசியம் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.  இச்சந்திப்பை இருதரப்பும் பேசி பொருத்தமான ஓர் இடத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும், கணவன் மனைவி விவாரத்து மூலம் பிரியும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய மேற்குறித்த சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி இன்னும் விரிவாகவும், துள்ளியமாகவும் இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் உடைய  'மின்ஹாஜுல் தாலிபீன் மற்றும் அதனுடை விரிவுரை நூற்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உங்களது மகனுக்குப் பிறந்த குழந்தை அவருடைய தாயிடத்தில்; இருப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்நிலையில், மேற்குறிப்பிட்ட அடிப்படைகளின் பிரகாரம், இரு தரப்பும் குறிப்பிட்ட சில நாட்களைச் சுமுகமாகத் தீர்மானித்து பிள்ளையைப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொள்வது பொருத்தமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்     

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

Additional Info

 • பத்வா எண் ACJU/FTW/2017/25-302
 • கேள்வி

  தலாக் சொல்லப்பட்ட  மனைவியிடம் வளரும் எனது பிள்ளையைப் பார்ப்பதற்கு எனக்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?

 • Fatwa Summary அல்லாஹ்வின் தூதரே எனது வயிறு என்னுடைய இம்மகனை சுமக்கும் உறையாகவும், எனது மார்பு இவன் (பால்) அருந்தும் பையாகவும், எனது மடி இவனது விரிப்பாகவும் இருந்தன, இந்நிலையில் அவனது தகப்பன் என்னை தலாக் சொல்லிவிட்டு என்னிடமிருந்து மகனை எடுத்துச்செல்ல நாடுகிறான் என்று கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மற்றுமொரு திருமணம் முடிக்காத வரை நீயே அவனை வளர்க்க உரித்தானவள்' என்று கூறினார்கள்.