கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் தொடர்பாக

ஏப் 02, 2020

01.04.2020

கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் தொடர்பாக

உலக சுகாதார அமைப்பு கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படவும் முடியும் என்று தனது வழிகாட்டலில் குறிப்பிட்டு, அது பல நாடுகளால் பின்பற்றப்பட்டுவரும் இந்நிலையில், கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்கள் அனைவரினது உடல்களும்; எரிக்கப்பட வேண்டுமென நேற்று (31.03.2020) சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமூகமும் தமது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.

 

2020 மார்ச் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் “கொவிட் வைரஸினால் இறந்த உடலை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கான தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு” என்ற வழிகாட்டலுக்கமைய சுகாதார அமைச்சினால் (31.03.2020) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க ஜம்இய்யா தயாராக இருக்கின்றது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

 

மேற்குறித்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் கொவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களை எரிப்பதற்கு அல்லது அடக்குவதற்கு அனுமதியளிக்கின்றது. அந்தவகையில் உரிய அதிகாரிகள் முஸ்லிம்களது இம்முக்கிய மத விவகாரத்தை கவனத்திற் கொண்டு 2020.03.31ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிர்பந்தமான நிலையில், இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ்விடம் எந்த குற்றமும் இல்லை. எனவே முஸ்லிம்கள் இவ்விடயத்தில் பொறுமையுடன் செயற்படுமாறும் இவ்வாறான நிலையில் மரணித்தவருக்கு அல்லாஹ் பிரத்தியேக கூலிகளை வழங்க வேண்டுமென ஆதரவு வைக்குமாறும் ஜம்இய்யா அனைத்து முஸ்லிம்களிடமும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

 

இலங்கைவாழ் மக்களும் முழு உலகமும் பாரிய சோதனைக்குள்ளாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில் நம் அரசாங்கம் வைரஸ் பரவலைத் தடுக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நமது ஏனைய சகோதரர்களுடன் இணைந்து அரசு முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாரிய ஒத்துழைப்பை வழங்குவது எம்மனைவரின் பொறுப்பாகும்.

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. அவ்வகையில் வைரஸின் பரவலைத் தடுக்க தற்போது அரசு மேற்கொள்ளும் ஊரடங்குச் சட்டம் உட்பட அனைத்து விதிமுறைகளுக்கும் உடனடியாக கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.

 

நோய்த் தொற்றின் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென இலங்கைவாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா பொறுப்புடன் கேட்டுக் கொள்கின்றது.

 

அனைத்து முஸ்லிம்களும் தாம் வாழும் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கவேண்டுமெனவும் தங்களது அனைத்து செயற்பாடுகளிலும் பொதுநலன் கவனத்திற் கொள்ளப்படவேண்டுமெனவும் அல்குர்ஆனும்  அல் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.

 

நமது தாய் நாட்டைப் பாதுகாக்கப் போராடும் சூழ்;நிலையில் அனைத்து சமூகங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், மனிதர்கள் என்ற வகையில்   ஒவ்வொருவரிடமும் காணப்படும் மனித உணர்வுகளை மதித்தும்  நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.

 

சோதனைமிக்க இக்காலத்தில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹு தஆலா  கருணை, இரக்கம், மற்றும் அபிவிருத்தியை  நம் தாய்நாட்டுக்கு அருளவும் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மிகவிரைவில் வெற்றிகொள்ள வழிகாட்டவும் ஜம்இய்யா பிராத்திக்கின்றது.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.