2024.05.13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் துருக்கி அரசின் சமய விவகாரங்களுக்கான தலைமைபீடத்தின் ஏற்பாட்டில் உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்களின் உச்சிமாநாடானது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே அப்துல் ஹாலிக் மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஸ்தபா ரஸா ஆகியோர் கலந்துகொண்டிருந்ததோடு உப தலைவர் அவர்களால் விஷேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
உலகளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகளை இனங்கண்டு, அவற்றை பகுப்பாய்வு செய்து, அவற்றிற்கான ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிதல் மற்றும் இஸ்லாமிய வெறுப்பிரச்சாரம், முன்வைக்கப்படும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு அறிவார்ந்த முறையில் எதிர்வினையாற்றுதல் தொடர்பில் விவாதிக்கவே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு நாடுகளின் இஸ்லாமிய அறிஞர்கள் கூடியிருந்த இவ்வுயரிய சபையில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை குறித்து வலியுறுத்தப்பட்டதோடு ஒட்டுமொத்த மனிதகுலமும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு ஒவ்வொருவரும் பங்களிப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது துருக்கி அரசின் சமய விவகாரங்களுக்கான தலைமைபீடத்தின் தலைவர் பேராசிரியர் அலி எர்பாஸ் அவர்களுக்கு ஜம்இய்யாவின் சேவைகள் குறித்து உபதலைவர் அவர்களால் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் 'மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்' எனும் ‘மன்ஹஜ்’ நூலின் பிரதிகளும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
- ACJU Media -