உலக முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் மலேசியாவில் இடம்பெற்ற மதத்தலைவர்களுக்கான சர்வதேச மாநாட்டினையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் 2024.05.10ஆம் திகதி மலேசியாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.
மலேசியா வாழ் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான 'சிலோன் முஸ்லிம் கம்யூனிட்டி சென்டர் மலேசியா' (Ceylon Muslim Community centre, Malaysia) இச்சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் நூற்றாண்டினை கடந்து பயணிக்கும் ஜம்இய்யா சமூகத்திற்கு ஆற்றிவரும் பல்வேறுபட்ட பணிகள் தொடர்பில் தெளிவுகளை வழங்கியதோடு அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஜம்இய்யாவின் ஏனைய வெளியீடுகள் பற்றியும் விளக்கங்களை வழங்கினார்.
அவரது உரையில் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை குறித்து வலியுறுத்தியதோடு பிற சமூக மக்களுடன் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தையும், உடன்பாடான விடயங்களில் இணக்கப்பாட்டுடன் ஒன்றித்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மார்க்க ஆதாரங்களிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் இருந்து சுட்டிக்காட்டினார்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலம் தொட்டே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரம் எனும் மாபெரும் சவாலை எவ்வாறு அறிவுப்பூர்வமாக எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் சில ஆலோசனைகளை முன்வைத்தார்.
இந்நிகழ்வில் மலேசியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு அவர்களுக்கு ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி ரிஸ்வி அவர்களால் ஜம்இய்யாவின் வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.
'சிலோன் முஸ்லிம் கம்யூனிட்டி சென்டர் மலேசியாவின் உறுப்பினர்களான அஷ்-ஷைக் முபாரக் மற்றும் சகோதரர் எம்.எல்.எம். தௌபீக் ஆகியோரால் இந்நிகழ்வு ஒழுங்குற நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
- ACJU Media -