ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்

செப் 11, 2024

ACJU/NGS/2024/376
2024.09.11 (1446.03.07)

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

நாட்டில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒரு மார்க்க, சமூக வழிகாட்டல் செய்து வரும் சபையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை சகலரும் அறிவர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு வேட்பாளருக்கும் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயற்படுவதில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிரார்த்திப்போம், இறையுதவியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.

ஜனநாயக நாடொன்றில் எவரும் எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிடலாம். தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரவர் உரிமையாகும். இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு போதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளலாகாது.

பொதுவாகவும் தேர்தல் காலங்களில் குறிப்பாகவும் முஸ்லிம்கள் வார்த்தையளவிலோ செயலளவிலோ எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வதந்திகளைப் பரப்புதல், வீண் விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், வன்செயல்களில் ஈடுபடுவது ஈமானைப் பாதிக்கும் அம்சங்கள் என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஆலிம்கள் மிம்பர் மேடைகளில் எந்தவொரு வேட்பாளருக்கும் அரசியல் கட்சிக்கும் சார்பாகவோ எதிராகவோ பேசுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை கடைபிடித்தொழுகுமாறு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

மேலும் பள்ளிவாசல்களை தேர்தல் பிரசாரங்களுக்கோ அதனுடன் தொடர்புபட்ட வேறு விடயங்களுக்கோ பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் நிதானமாக நடந்துகொள்வது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
பிரபஞ்சத்தின் அத்தனை விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் திட்டப்படியுமே நடந்தேறுகின்றன என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள நாம், தேர்தலில் யார் வென்றாலும் அது அல்லாஹ்வின் முடிவு என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.

ஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், புத்திஜீவிகள் பொதுவாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளை அங்கத்தவர்கள் குறிப்பாகவும் மேற்சொன்ன அறிவுறுத்தல்களுக்கமைய பொது மக்களை வழிநடத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.

 


முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 11 செப்டம்பர் 2024 14:27

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.