Ref: ACJU/NGS/2024/382
2024.09.23 (1446.03.19)
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மாண்புமிகு திரு. அனுரகுமார திஸாநாயக்க ஆகிய உங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இம்முறை தாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை, இந்நாட்டு மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாக இருக்கின்றது.
ஆசியாவின் மிகவும் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றான எமது நாட்டின் மக்கள், தங்களது தலைவரை சுதந்திரமானதும், நியாயமானதுமான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தது குறிப்பிடதக்கது.
தங்களது பதவிக்காலத்தில் அனைத்து குடிமக்களும், ஒற்றுமையாக, பொருளாதார மறுமலர்ச்சியுடன் செழிப்பாக வாழ வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், இஸ்லாமிய சமய அறிஞர்கள் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் நம்புவதுடன் அதற்காக பிரார்த்தனையும் செய்கின்றோம்.
அன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
"உங்கள் தலைவர்களில் சிறந்தவர்கள், நீங்கள் அவர்களை விரும்பி, அவர்களும் உங்களை விரும்பக் கூடியவராவர்".
(நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
அந்தவகையில், உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் வாழும் பல்லின மக்களாகிய பொளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளடங்களாக ஏனைய அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும், சகோதர வாஞ்சையோடும் வாழக்கூடிய முறையில் சட்டமும் நீதியும், நிலை நாட்டப்படும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகின்றது.
100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இந்த நாட்டில் இஸ்லாமிய சமய, சமூக பணிகளில் ஈடுபட்டு, இந்த நாட்டு சட்டங்களை முழுமையாக மதித்து, சட்டரீதியாகத் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கி வந்திருக்கின்றது.
அத்தோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எமது நாட்டில் சமூக நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்புவதிலும், தேசப்பற்றோடு கூடிய ஆக்கப்பணிகளிலும், என்றென்றும் அனைவருடனும் கைகோர்த்து நின்றுள்ளது.
எல்லாம் வல்ல இறைவன் எமது நாட்டை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வழி நடாத்தக் கூடிய வாய்ப்பையும், தைரியத்தையும் உங்களுக்கும், உங்களோடு பணியாற்றும் அனைவருக்கும் தருவானாக, என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.