மியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்

ஆக 29, 2017

29.08.2017 / 06.12.1438

மியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்!

மியன்மாரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களது நிலை மிகவும் வேதனை தரக்கூடியதாகவுள்ளது. அம்மக்கள் கொலை, கற்பழிப்பு போன்ற அநியாயங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மியன்மார் இராணுவத்தினாலும் சில தீய சக்திகளினாலும் பல துன்பங்களை அனுபவித்து, உயிரையும் தீனையும் பாதுகாக்க முடியாமல் காணப்படுகின்றனர்.

இந்த மிலேட்சத்தனமான தாக்குதல்களையும் அநியாயங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாக கண்டிப்பதுடன் இதனை நிறுத்துவதற்கு உலக நாடுகள் பொதுவாகவும் முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து வருவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவுவதற்காகவும் அவர்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுக்கவும் சகல உலக நாடுகளும் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.

இவர்களது உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வதில் ஊடகங்களும் தமது பணியை நிறைவேற்றாதது கவலைக்குரிய விடயமாகும். எது எப்படியிருப்பினும், முஸ்லிம்கள் ஒரு உடம்புக்கு ஒப்பானவர்கள். அவர்களில் ஒருவருக்கு ஏற்படும் துன்பம் ஏனையோரையும் பாதிக்கும் என்ற நபிமொழியின் கருத்துக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே உலகளாவிய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தீரவும் ரோஹிங்யா முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவும் நம்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக கதீப்மார்கள் மக்களுக்கு இவற்றை தெளிவுபடுத்தி, அவர்களுக்காக ஜும்ஆக்களில் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.


வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onசெவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017 09:29

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.