Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிறப்புச் செய்தி

நவ 08, 2019

10.11.2019 / 12.03.1441


அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்புச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பெருமகிழ்ச்சி அடைகின்றது. 


ரபிஉனில் அவ்வல் மாதம் மனித இனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகும். மனித சமூகத்துக்கு ஒளி காட்டி, நேர் வழியின் பக்கம் வழி நடாத்த வந்த நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் இது.

'ரபீஉன்” என்றால் வசந்தம் என்பது பொருள். வசந்த காலம் பூமிக்கு பசுமையையும், அழகையும், வனப்பையும் கொண்டு வருகின்றது. அதுபோல் வசந்தம் எனப் பொருள்படும் 'ரபிஉனில் அவ்வலில்” பிறந்த நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித சமூகத்திற்கு சுபீட்சத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும், அமைதியையும், மன நிறைவையும் கொண்டுவந்தார்கள்.

ஆன்மீக, லௌகீகத் துறைகளிலெல்லாம் பயங்கர வரட்சி நிலவிய ஒரு காலம் அது. ஒரு வசந்தத்தின் தேவையை, வருகையை அன்றைய பூமி அவசரமாக வேண்டி நின்றது. அந்த வசந்தத்தை சுமந்து வந்தவர்கள்தான் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இன்றைய உலகின் ஆன்மிக வரட்சியைப் போக்கிடும் ஆற்றலும் உலக அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் திறனும் நபியவர்களின் போதனைகளுக்கு நிறைவாகவே உண்டு. மேலும் ஒரு புத்துலகை புதுப்பொலிவுடன் உருவாக்கும் தகுதியும் அப்போதனைகளுக்கு உண்டு.

இறைத்தூதர் முகம்மது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூரும் இந்நன்நாளில் அவர்கள் போதித்த மனித நேயம், அன்பு, கருணை, பிறர் நலன் பேணல், நல்லிணக்கத்துடன் வாழ்தல் முதலான பண்புகளை கடைப்பிடித்து வாழ திட சங்கற்பம் பூணுவதன் மூலம் அன்னார் கொண்டு வந்த தூதுக்கு உண்மைச் சாட்சியம் சொல்லும் கடப்பாடு முஸ்லிம்களுக்கு உண்டு.

நமது தாய் மண்ணில் சாந்தியும் சமாதானமும் மலர வேண்டும். இன நல்லுறவு ஓங்க வேண்டும் என இந்நன்நாளில் பிரார்த்திக்கின்றோம். நம் நாடு சுபீட்சமிக்க ஒரு பூமியாக மிளிர வேண்டும் என்பதே எமது அவாவும் துஆவும் ஆகும்.

 

முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி                
தலைவர், 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் 

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

 

Last modified onவெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2019 12:23