ரமழானின் இறுதிப் பகுதி மற்றும் பெருநாள் தினம் தொடர்பான வழிகாட்டல்கள்

மே 17, 2020

 

ACJU/MED/2020/002

17.05.2020

ரமழானின் இறுதிப் பகுதி மற்றும் பெருநாள் தினம் தொடர்பான வழிகாட்டல்கள்

கொவிட் 19 வைரஸின் பரவலுக்கு மத்தியில் இம்முறை நாம் எமது ரமழான் நோன்புகளை நோற்று வந்து, தற்போது ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கின்றோம். இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து அனைவரும் அவசரமாக இயல்பு வாழ்விற்கு திரும்ப இப்புனித ரமழான் மாதத்தில் பிரார்த்திக்கும் அதேநேரம் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

 

ரமழான் மாதாத்தின் இறுதிப் பகுதி தொடர்பானவை:

 • ரமழானின் இறுதிப் பகுதி நன்மைகளை அதிகம் ஈட்டித் தரும் பகுதியாகும். ஆகவே இத்தினங்களில் அனைவரும் தமது இல்லங்களில் இருந்த வண்ணம் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபட்டு புனித லைலத்துல் கத்ரை அடைய முயற்சிக்க வேண்டும்.

 

 • ரமழானின் இறுதிப் பகுதியில் இஃதிகாப், இரவு நேர வணக்கங்களுக்காக மஸ்ஜித்களில் ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்த்து இது தொடர்பாக வக்ப் சபையும், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் வழங்கியிருக்கும் வழிகாட்டல்களைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

 

 • ஊரடங்கு பல மாவட்டங்களில் பகுதி நேரமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அத்தியவசியத் தேவைகளுக்காகவே அன்றி வெளியில் செல்வதை தவிர்ந்துக் கொள்வதுடன் வெளியில் செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிதல், சமூக இடைவெளியைப் பேணல் போன்ற அரசாங்கத்தின் வழிகாட்டல்களை தொடர்ந்தும் கடைபிடிப்பது அவசியமாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை பின்பற்றுவது இஸ்லாமிய போதனை என்பதால் இவ்விடயத்தில் முஸ்லிம்கள் முன்மாதிரியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

 

 • நோன்புப் பெருநாளை அண்மித்த காலப் பகுதிகளில் நாம் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடுவதை முற்றாகத் தவிர்த்து, இது தொடர்பில் அரசாங்கமும் சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி நடப்பதுடன் முடியுமானளவு வீட்டிற்கு வினியோகம் செய்யும் முறையினூடாக (Home Delivery) தேவையான பொருட்களைப் பெற்றுக் கொள்வது பாதுகாப்பானதாகும்.

 

 • ஸகாத்துல் ஃபித்;ரை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள், பெருநாள் தொழுகைக்கு முன்பு நிறைவேற்றல் வேண்டும். அத்துடன் ஏலவே வழிகாட்டப்பட்டது போல் மஸ்ஜித்கள் ஊடாக கூட்டாக இதனை வழங்குவது சிறந்ததாகும்.

 

பெருநாள் தினம் தொடர்பானவை:

 

 • இம்முறை நெருக்கடியானதொரு சூழலில் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என்ற உணர்வுடன் நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரிய முறையில் பேணி பெருநாள் தினத்தில் நடந்துக் கொள்ள வேண்டும்.

 

 • பெருநாள் தொழுகையை பள்ளிவாசலிலோ, திடல்களிலோ கூட்டாக தொழுவதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். மாறாக எமது வீடுகளிற்குள்ளேயே எமது குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து பெருநாள் தொழுகையை தொழுது கொள்ள வேண்டும்.

 

 • இம்முறை பெருநாளை வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளல். அத்துடன் வீண் பிரயாணங்களையும் ஒன்று கூடல்களையும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

 

 • பெருநாள் தினத்திலும் ஏனைய தினங்களிலும் மற்றவர்களுடன் முஸாபஹா, முஆனகா செய்வதை முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

 

 • ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகை வரை அதானுக்குப் பின்னர் மஸ்ஜித்களில் தக்பீரை ஒலிபெருக்கியில் சொல்வதற்காக ஒருவரை நியமித்து ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

 

 • பெருநாள் தினங்களில் ஏழை எளியவர்கள் விடயத்திலும் கரிசணை காட்டி தம்மாலான உதவிகளை செய்து கொள்ள வேண்டும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது நல்லமல்களையும் நோன்பையும் பொருந்திக் கொண்டு, இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலக மக்களையும் பாதுகாப்பானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

 

 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: மேற்படி வழிகாட்டல்களை பொருத்தமான ஒரு நேரத்தில் அதானுக்குப் பிறகு மஸ்ஜித் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு வாசித்துக் காட்ட ஏற்பாடு செய்யுமாறு சகல மஸ்ஜித் நிர்வாகிகளையும் அன்பாகக் கேட்டுக் கொள்ளும் அதேநேரம் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சகலரும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.