கொவிட் 19 தொடர்பாக ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்ட ஜம்இய்யாவின் சமூக சேவைகள் தொடர்பாக

ஜூன் 12, 2020

12.06.2020

கொவிட் 19 தொடர்பாக ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்ட ஜம்இய்யாவின் சமூக சேவைகள் தொடர்பாக

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட சுனாமி, யுத்தம், வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது பலரினதும் உதவிகளுடன் பல்வேறுபட்ட நிவாரணங்களை சமூக சேவைப் பிரிவினூடாக செய்ததை யாவரும் அறிவோம். உடனடித் தேவைகளாக இருந்த உலர் உணவுகளை வழங்குதல், தற்காலிக தங்குமிட வசதி போன்றவற்றையும் மற்றும் நிரந்தர தேவைகளான புணர் நிர்மாணம், மீள் கட்டமைப்பு போன்றவற்றையும் ஜம்இய்யா செய்து வந்துள்ளது. இதற்காக பலரும் பல வழிகளிலும் உதவிகள் செய்ததை ஜம்இய்யா நன்றியுடன் நினைவு கூர்கின்றது.

 

அந்த வகையில் இம்முறை கொவிட் 19 இலங்கையில் பரவ ஆரம்பித்தது முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இது தொடர்பில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை முன்னெடுத்தது. இவற்றுள் மக்களுக்கான மார்க்க மற்றும் பொதுவான வழிகாட்டல்கள் வழங்கியமை, ஊரடங்கு காரணமாக தொழில்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை ஏற்பாடுச் செய்தமை போன்றவை முதன்மையானதாகும்.

 

மக்களுக்கான வழிகாட்டல் விடயத்தில் ஜம்இய்யா 25 அறிக்கைகள், 15 வீடியோக்கள், 23 சுவரொட்டிகள் மற்றும் 10 வானொலி நிகழ்ச்சிகள், 06 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றினூடாக மும்மொழிகளிலும் பல மார்க்க மற்றும் பொதுவான வழிகாட்டல்களை ஆரம்பத்திலிருந்தே வழங்கி வந்தது. இவ்வழிகாட்டல்களில் நிவாரணங்களுக்காக சதகா மற்றும் ஸகாத் பணங்களை செலவழிப்பது தொடர்பான பூரண வழிகாட்டல்கள் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

 

முன்னைய காலங்கள் போன்றல்லாது இவ்வைரஸின் பரவலானது பல்வேறு ரீதியில் நாட்டின் அனைத்து பகுதிகளும் மக்களைப் பாதித்த ஒரு பிரச்சினையாக இருந்ததை கவனத்திற் கொண்டு ஜம்இய்யா நேரடியாக நிவாரணங்களை முன்னெடுத்து வந்ததுடன், தனது 24 மாவட்டக்கிளைகளினூடாக நிவாரண மையங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கி, பலரின் ஒத்துழைப்புடன் சுமார் 60 இற்கும் மேற்பட்ட நிவாரண மையங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தியது. இம்மையங்களினூடாக ஜம்இய்யா மஸ்ஜித்களை இணைத்து பாரிய நிவாரணப் பொறிமுறையொன்றை நிறுவியது. இதன் மூலம் பல மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

 

இந்நிவாரண பொறிமுறையினூடாக நிரந்தர நோயாளிகள், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள், கொரோனாவால் அன்றாட தொழில்களை இழந்தவர்கள், விதவைகள் என பலதரப்பட்டவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தது. அதே போன்று மஸ்ஜித் இமாம், முஅத்தின் மற்றும் மக்தப் முஅல்லிம்களுக்கான நிவாரணங்களையும் வழங்கியதுடன் ஜம்இய்யா இந்நிவாரணப்பணிகளில் தன்னாலான பண உதவிகளை முழுமையாக செலவழிக்கவும், தேசிய ரீதியில் கொவிட்19 தொடர்பான விடயங்களுக்காக ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு சேகரிக்கப்படும் நிதியத்திற்காகவும் ஒரு தொகை நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான பங்களிப்புக்களை வழங்கவும் தவறவில்லை. அல்லாஹுதஆலா இப்படியானதொரு தருணத்தில் நாம் செய்த அனைத்து தர்மங்களையும் ஏற்று இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலகையும் அவசரமாக மீட்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

 

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

குறிப்பு: இது தொடர்பான விரிவாக அறிக்கையை கீழுள்ள லிங்கில் பெற்றுக் கொள்ள முடியும்.

 

 (Link: add the link) https://bit.ly/2BZM1qI 

Last modified onதிங்கட்கிழமை, 15 ஜூன் 2020 04:38

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.