லைலத்துல் கத்ர்

ஏப் 23, 2022

23.04.2022 (21.09.1443)


بسم الله الرحمن الرحيم


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5) - سورة القدر

 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க இரவில் (லைலத்துல் கத்ரில்) இறக்கினோம். (1)

மேலும் கண்ணியமிக்க இரவு (லைலத்துல் கத்ர்) என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (2)

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (3)

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (4)

சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (5)

(அத்தியாயம்: அல் கத்ர்)


லைலத்துல் கத்ரின் (கண்ணியமான இரவின்) சிறப்பு:


• அல் குர்ஆன் இறக்கப்பட்ட இரவாகும்.
• ஆயிரம் மாதங்களை விட மிகச்சிறந்த இரவாகும்.
• மலக்குகள், குறிப்பாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பூமிக்கு இறங்கும் இரவாகும்.
• சாந்தி நிலவியிருக்கும் இரவாகும்


லைலத்துல் கத்ர் பற்றி:


லைலத்துல் கத்ர் (கண்ணியமான இரவு) என்பது ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் ஒற்றப்படையான ஓர் இரவாகும். இது ரமழான் மாதத்தின் மிக முக்கிமான ஓர் இரவாகக் கருதப்படுகின்றது. இதன் நேரம் அன்றைய நாள் சூரிய மறைவிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரையாகும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்வதற்கு மிகவம் கவனம் செலுத்தியுள்ளார்கள். மேலும், தம் தோழர்களுக்கு ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் ஒற்றப்படையான இரவுகளில் அதைத் தேடும் படி கட்டளையிட்டுள்ளதுடன், அவ்விரவில் நின்று வணங்கும்படியும் ஆர்வமூட்டியுள்ளார்கள்.


ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் தாமும் இஃதிகாஃப் இருப்பதுடன் ஸஹாபாக்களையும் இஃதிகாஃப் இருக்கும்படி ஆர்வமூட்டுவார்கள். இவ்வாறு இஃதிகாஃப் இருதிப்பத்தில் நபியவர்களின் நோக்கங்களில் மிகப்பெரும் நோக்கமாக லைலத்துல் கத்ரை அடைய வேண்டும் என்பதே கானப்பட்டுள்ளது.


ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ - 2017)


ஹழ்ரத் அபூ ஹுரைரஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'யார் 'லைலத்துல் கத்ரில் (கண்ணியமிக்க இரவில்) நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ - 2014)


ஹழ்ரத் அபூ சயீத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானில் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். அதன்படி ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் (அந்த இரவின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள்) ''யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் இறுதிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்க வைக்கப்பட்டுவிட்டது. (அந்தக் கனவில்) அந்த இரவின் காலையில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதை (லைலத்துல் கத்ரை) இறுதிப் பத்து நாட்களில் தேடிக்கொள்ளுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள்.
(நூல்: ஸஹீஹுல் புகாரீ - 2027)


லைலத்துல் கத்ரில் ஓதப்படும் துஆ:


ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று (நான்) கேட்டேன்.' அதற்கு அவர்கள் ''இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு! என்று சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.
(நூல்: ஸுனனுத் திர்மிதீ 3513)


'اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي.'


ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்த இரவான லைலதுல் கத்ரை அடைந்து அதன் அனைத்துப் பாக்கியங்களையும் பெற வல்ல அல்லாஹு தஆலா நமக்க அருள் புரிவானாக!

Last modified onசனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022 10:51

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.