பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு

செப் 11, 2016

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்களில் பத்வாக் குழு மிக முக்கியமானதாகும். இக்குழுவில் அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஅதிற்கு உட்பட்ட சகல அமைப்புக்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் உள்ள இஸ்லாமிய மார்க்க சட்டத்துறையில் அனுபவம் மிக்க மூத்த அறிஞர்கள், ஷரீஆத்துறைப் பட்டதாரிகள், அறபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட ஷரீஆ கல்வி விரிவுரையாளர்கள் உட்பட 35 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.

இவர்கள் மாதந்தம் அல்லது தேவைக்கேற்ப ஒன்று கூடி பத்வா விடயங்களை ஆய்வு செய்து பத்வாவாக வெளியிடுகின்றனர். இவ்வடிப்படையிலேயே 2009 ஆம் ஆண்டு பெண்கள் முகத்திரை அணிவது சம்பந்தமான பத்வாவை வெளியிட்டது.

குறித்த பத்வாவில் கூறப்பட்டுள்ள கருத்தே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவான நிலைப்பாடாகும். என்றாலும்,  கருத்து முரண்பாடான விடயங்களில் தனக்குச் சரியானதெனத் தோன்றுகின்ற கருத்துக் கேற்ப காரியமாற்ற தனக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பதுபோலவே, மாற்றுக் கருத்துக் கொண்டவருக்கும் அவரது கருத்துக் கேற்ப காரியமாற்ற உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதுடன், அவரின் அந்த உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் குறுக்கே நிற்கவோ அவற்றை மறுக்கவோ கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முனையக் கூடாது என்பது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 18.08.2009ஆந்திகதி வெளியிட்ட ஒற்றுமைப் பிரகடனத்தின் நிலைப்பாடாகும்.

மேலும், பெண்கள் முகத்திரை அணிவது விடயமாகத் தற்போது எழுந்துள்ள சர்ச்சையானது கடந்த 19.07.2016ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட 'சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்' தொடரில் ஹிஜாப் பற்றி பேசக்கூடிய சிறு நூலை மேற்கோள்காட்டி பெண்கள் முகத்திரையிடுவது இஸ்லாமிய வரையறை இல்லை, அது தவறான கருத்து என்று கூறியதாகும்.

குறித்;த நூல் பொதுவாக முஸ்லிம்களின் ஆடைகள் பற்றி தெளிவுபடுத்தும் அதேவேளை, குறிப்பாக நிகாப் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, அரபிகளின் கலாச்சாரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது போன்ற பிழையான கோஷங்கள் வந்த பொழுது, நிகாப் என்பது இஸ்லாத்தில் உள்ள ஒரு விடயம், இதில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை, இது முகத்திரை அணிவது வாஜிப் என்று கருதக்கூடிய பெண்களின் உரிமையாகும் என்பன பற்றி விளக்கும் வகையிலேயே எழுதப்பட்டது என்பதையும், குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பல விடயங்கள் மெச்சத்தக்கதாகவும், காலத்தின் தேவையாகவும் இருந்தாலும், அந்நிகழ்சியில் ஹிஜாப் விடயமாகக்  கூறப்பட்ட மேற்படி கருத்து பற்றி எதுவும், குறித்த நூலில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஜம்இய்யா பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றது.

இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் நிகாப், ஹிஜாப் விவகாரம் ஒரு பேசுபொருளாக மாறியிருப்பதை அனைவரும் அறிவோம். கடுமையான வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நாளுக்கு நாள் மக்களுக்கு மத்தியில் இடைவெளியும் விரிசலும் ஏற்படுவதனை அவதானிக்க முடிகிறது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பணியில்  ஈடுபட்டு முஸ்லிம் சமூகத்தை நிதானமாக வழிநடத்தி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

எனவே, நிகாப், ஹிஜாப் தொடர்பான மார்க்கத் தெளிவுக் கருத்தரங்கு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலும் பத்வா பிரிவும் இணைந்து நடத்தவுள்ள இக்கருத்தரங்கில்; அறிஞர்கள், ஆலிம்களிடமிருந்து தகமையானவர்கள் நிகாப், ஹிஜாப் தொடர்பான தெளிவுகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்படும். தெளிவுகளை முன்வைக்கும் இறுதித் திகதியும், இக்கருத்தரங்கு நடைபெறும் இடமும் திகதியும், மேலதிக விபரங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

 

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்     

செயலாளர், பத்வாக் குழு              

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) பற்றிய மார்க்கத் தீர்ப்பு

http://www.acju.lk/fatwa-bank/recent-fatwa/item/762-2016-08-04-09-35-59 

Last modified onவெள்ளிக்கிழமை, 17 மே 2019 05:39

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.