ACJU/NGS/2020/004

2020.04.18 (1441.08.24)

 

கௌரவ மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு…

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

மஸ்ஜித்களில் பணிபுரியும் கண்ணியமான ஆலிம்கள், மஸ்ஜிதில் நடைபெறும் மக்தப், குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்களின் கொடுப்பனவு சம்பந்தமாக

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் முழு உலகிலும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். இலட்சக்கணக்கானோர் குறித்த வைரஸினால் பீடிக்கப்பட்டும், பலர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. மறுபுறம் பலரும் தம்முடைய அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள சிரமப்படுவதை நாம் காண்கின்றோம்.

அவ்வரிசையில், எமது மஸ்ஜித்களில் கடமை புரியும் கண்ணியமான இமாம்கள், மக்தப், குர்ஆன் மத்ரஸா வகுப்புக்களை நடாத்தும் முஅல்லிம்கள், முஅத்தின்கள் மற்றும் பணியாளர்கள் போன்றவர்களின் நிலைமைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனவே, அந்தந்த ஊர்களில் மஸ்ஜித்களுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய நிர்வாக சபையினர், தமது ஊர்களிலுள்ள மஸ்ஜித்கள் சம்மேளனம் மற்றும் ஊரிலுள்ள தனவந்தர்களுடன் இணைந்து தமது மஸ்ஜிதில் கடமை புரியும் இமாம்கள், மஸ்ஜிதில் மக்தப், குர்ஆன் மத்ரஸா வகுப்புக்களை நடாத்தும் முஅல்லிம்கள், முஅத்தின்கள் மற்றும் மஸ்ஜிதில் பணி புரிபவர்கள் விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களது மாதாந்தக் கொடுப்பனவுகளை எவ்வித குறைவுமின்றி கொடுக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மஸ்ஜித் நிர்வாகிகளிடம் அன்பாய் வேண்டிக்கொள்கிறது.

இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபையினாலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையிலுள்ள மஸ்ஜித்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதனால் மஸ்ஜித்களின் இமாம்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் உரிய முறையில் கொடுக்கப்படாமல் இருக்கும் நிலையில் அவர்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதோடு, இவர்களில் ஸகாத் பெறத் தகுதியானவர்களை அடையாளங் கண்டு ஸகாத் வழங்கவும் முடியும் என்று ஆலோசனை வழங்குகிறது.

மேலும், மஸ்ஜிதுடைய தேவைக்காக சேர்க்கப்பட்ட பணம் ஏதுமிருப்பின் அந்த பணத்தின் மூலமாக இவ்வாறான மஸ்ஜிதுடன் தொடர்புபட்டு பணிபுரியக்கூடிய இவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ளது என்பதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்வதோடு, ரமழானும் நெருங்கிவிட்டதால் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என்று ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரினதும் நற்கிரியைகளை கபூல் செய்வானாக, ஆமீன்.

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (2:261)

 

 

அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா