02.12.2020

“புரைவி” புயல் இலங்கையின் கிழக்குக் கரையை இன்று இரவு ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். (الله أعلم)


புயலின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கையாக மீனவர்களும் கடற்படையினரும் கிழக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் ஷரீஆவின் வழிகாட்டலின் அடிப்படையில் கீழ்க்காணும் துஆவை ஓதிக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

கடும் காற்று வீசும் போது :


(اللَّهُمَّ إِني أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وخَيْرَ مَا أُرسِلَتْ بِهِ، وَأَعُوذُ بك مِنْ شَرِّهَا، وَشَرِّ ما فِيها، وَشَرِّ ما أُرسِلَت بِهِ  (رواه مسلم)


யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ள நன்மையையும், எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையை விட்டும், இதிலுள்ளதின் தீமையை விட்டும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (முஸ்லிம்)

 

கடும் மழையின் போது :


(اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اَللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَبُطُوْنِ الْأوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَر (متفق عليه


யா அல்லாஹ்! எங்கள் மீதல்லாமல் எங்களை சுற்றி (மழையை பொழியச் செய்வாயாக), யா அல்லாஹ்! பீடபூமிகள் மீதும் மலைகுன்றுகள் மீதும் பள்ளத்தாக்குகள் மீதும் தாவரங்கள் முளைக்கும் இடங்கள் மீதும் (மழையை பொழியச் செய்வாயாக) (புகாரி, முஸ்லிம்)


இச்சந்தர்ப்பத்தில் மக்கள் துஆக்கள் மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுமாறும் இப்புயலின் தாக்கத்திலிருந்து நாட்டின் சகல இன மக்களும் பாதுகாப்படைய பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் வேண்டிக் கொள்கிறது.

 

………………………………
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

 

ACJU/NGS/2020/008

2020.04.20 (1441.08.26)

கடந்த வருடம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல் தின நிகழ்வுகளுக்கான வழிகாட்டல்கள்

கடந்த வருடம் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சதனமான தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடமாகின்ற இச்சந்தர்ப்பத்தில் அத்தினத்தை சகலரும் கவலையுடன் நினைவு கூறும் முகமாக அனைத்து மதஸ்தலங்களிலும்  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வக்ப் சபையும் முஸ்லிம் சமயப் பண்பாட்டளுவல்கள் திணைக்களமும், மஸ்ஜித்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டி இருப்பதை யாவரும் அறிவோம். அதற்கிணங்க அந்நிகழ்வுகளை பின்வருமாறு அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டுகின்றது.

 

8:40 - 8:45 வரை கிராஅத். (இதில் சூரா மாஇதாவின் 32 வது வசனமும் மொழிபெயர்ப்பும், ஓடியோ இணைக்கப்பட்டுள்ளது).

8:45 - 8:47 வரை அமைதியாக இருந்து சப்தமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக துஆ செய்தல்.

8:47 - 8:55 வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான அனுதாபச் செய்தி. இதற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகளை பாவிக்கவும்.

 

வஸ்ஸலாம்.

 

 

அஷ-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

14.05.2019 (08.09.1440)

முஸ்லிம்களுக்கான சில முக்கிய வழிகாட்டல்கள்

நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையைக் கையாளுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகளும் தொடர்ந்து கலந்தாலோசனைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் தொடரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்கள், முஸ்லிம் சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு இணைப்புக் குழுவின் நெறிப்படுத்தலில் நாட்டின் உயர் மட்ட தலைமைகளான ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோருடன் உடனடியாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 21.04.2019ஆம் திகதி பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் ஒருமித்த குரலில் வன்மையாக கண்டித்து நிராகரித்ததையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்கி வருவதையும் நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாம் இவ்வாறான மனிதாபிமானமற்ற தீவிரவாத செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கும் நிலையில், வழி தவறிய சிலரின் இந்த தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒருபோதும் பொறுப்புக் கூற முடியாது. எனவே, இதனை மையமாக வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக பார்ப்பதும் முஸ்லிம்களுடன் காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதும் அப்பாவி முஸ்லிம்களையும் அவர்களது உடைமைகளையும் தாக்குவதும் பிழையான செயற்பாடுகளாகும்.


தவிரவும், இந்நெருக்கடியான சூழ்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றி நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக் கொள்கின்றது:

1. எவ்வகையான அசாதாரண சூழ்நிலைகள் உருவாகியபோதிலும் முஸ்லிம்கள் வழமை போன்று அல்லாஹ்வுடனான தொடர்பை பலமாக வைத்துக் கொள்ளும் அதேநேரம் தொழுகை, நோன்பு, தவக்குல், துஆ, இஸ்திஃபார் முதலான இபாதத்களை கடைபிடித்தொழுக வேண்டும்.

2. இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து விழிப்புடனும் தூரநோக்குடனும் நடந்து கொள்ள வேண்டும்.

3. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இது விடயமாக நாம் அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், முஸ்லிம்கள் அனைவரும் சட்டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

4. அவசர கால சட்டம் நடைமுறையில் இருப்பதனால் அது தொடர்பான சட்ட வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

5. நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் அதேநேரம், அவற்றை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

6. எந்த அசாதாரண சூழ்நிலையிலும் அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

7. நாட்டில் தொடரும் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு ஐவேளை தொழுகையில் குனூத் அந்நாஸிலாவை தொடர்ந்தும் ஓதிவரும் அதேநேரம், அதில் ஜம்இய்யாவினால் வழங்கப்பட்ட துஆக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

8. இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்து கடந்த காலங்களில் நடந்து கொண்டதைப் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

9. தத்தமது பிரதேசங்களிலுள்ள சமய, சமூக தலைமைகளோடு கலந்துரையாடி பிரதேசத்தில் சுமுகமான நிலை உருவாகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்.

அல்லாஹ்வே எமக்கு போதுமானவன்; அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்!

வஸ்ஸலாம்.

 

அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா